சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டம் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறுகிறது

Posted On: 25 MAR 2023 11:41AM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தீவிர முயற்சியால் இந்தியா காசநோயை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம்  தயாராக இருக்கிறோம்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

 

காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு என கள அளவில் சிறப்பான பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

 

சுகாதார வசதிகளை மக்களுக்கு சிறப்பாக வழங்க உலகம் இந்தியாவின் புதிய முறைகள் ஆலோசனைகள் மற்றும் உத்திகளை பின்பற்ற வேண்டும்: டாக்டர் லூசிகா டிட்டியு

 

 

"இந்தியாவில் காசநோயை ஒழிக்க மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அர்ப்பணிப்பை நாம் காண்கிறோம். காசநோய்க்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து வழிநடத்தவும் உலகளாவிய தெற்கின் குரலாக இருக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்." என இன்று நடைபெற்ற காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மையின் 36வது வாரியக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். அவருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, "ஜி 20 தலைமையின் கீழ் 3 முக்கியமான சுகாதார முன்னுரிமைகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய சுகாதார காப்பீட்டில் கவனம் செலுத்துவதோடு காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நமது முயற்சியிலும் தொடர்புடையவை" என்று கூறினார். "காசநோயைக் கண்டறிவதற்கான புதிய முறைகள், கணக்கெடுப்பு, டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கள அளவில் சிறப்பான பணிகள் நிறைய செய்யப்படுகின்றன" என்றும் அவர் கூறினார். "இதுபோன்ற நல்ல நடைமுறைகளைப் பின்பற்ற மற்ற நாடுகளுடன் தொழில்நுட்ப உதவியைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சியடையும்" என்று அவர் கூறினார்.

 

கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு மட்டுமல்லாமல், பிரதமரின் காசநோய் இல்லாத பாரதம் திட்டம் போன்ற புதுமையான உத்திகளைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் மாண்டவியா கூறினார். காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகங்களை அணிதிரட்டுவதற்கான அழைப்பு இது என்றும் அவர் கூறினார்.

 

காசநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் காசநோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் இதைப் பற்றி ஆலோசித்து, இந்த ஆண்டு செப்டம்பரில் உலகளாவிய சுகாதார காப்பீடு   குறித்த ஐநா உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். "காசநோய் தடுப்பூசி அவசரமாக தேவை" என்றும் அவர் வலியுறுத்தினார். அதன் வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பதும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதும் எளிதாக அணுகுவதற்கு நாடுகளுக்கு உதவுவதும் முக்கியம் என்று டாக்டர் மாண்டவியா சுட்டிக்காட்டினார்.

 

டாக்டர் லூசிகா டிட்டியு, "காசநோயை ஒழிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்தியாவின் முன்னேற்றம் உலகத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்" என்று வலியுறுத்தினார். "இந்தியாவின், நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளை அளித்தல் (Ni-kshay ) தரவு மூலம் மிகவும் அதிநவீன முறைகளைக் கொண்டுள்ளனர்" என்று இந்தியாவைப் பாராட்டினார். அவர்களின் புதிய முறைகள் ஆலோசனைகள்  மற்றும் சுகாதாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான உத்திகள் முழு உலகமும் பின்பற்றக்கூடிய ஒன்று," என்று அவர் கூறினார்.

 

காசநோயை ஒழிப்போம் கூட்டாண்மை வாரியம் காசநோய் பற்றிய இந்தியாவின் மதிப்பீட்டை உள்நாட்டில் உள்ள ஆதாரங்களுடன் பாராட்டினார். இந்த நிகழ்வில் "காசநோயால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பொறுப்பு: கொடிய இடைவெளியைக் குறைப்பதற்கான முன்னுரிமைகள்" அறிக்கை வெளியிடப்பட்டது.

 

சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி. ரோலி சிங், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், காச நோயை ஒழிப்போம் கூட்டாண்மை அமைப்பின் துணைத் தலைவர் திரு ஆஸ்டின் அரின்ஸ் ஒபிஃபுனா, சுகாதார அமைச்சக இணை செயலாளர் டாக்டர் அசோக் பாபு, மத்திய சுகாதார அமைச்சக காசநோய் பிரிவு துணை பொது இயக்குநர் டாக்டர் ராஜேந்திர ஜோஷி, சுகாதார அமைச்சக மத்திய காசநோய் பிரிவு உதவி பொது இயக்குநர் டாக்டர் ராவ் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

***

AD/CJL/DL


(Release ID: 1910705) Visitor Counter : 121