பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கடோவ்லியாவுக்கு பயணிகள் கம்பிவடப் பாதைக்கு அடிக்கல் நாட்டினார்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 19 குடிநீர் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்
"மக்களின் அச்சங்களை மீறி நகரத்தை மாற்றுவதில் காசி வெற்றி பெற்றுள்ளது"
“கடந்த 9 ஆண்டுகளில் கங்கை படித்துறைகளின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதை அனைவரும் கண்டுள்ளனர்”
“கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் 8 கோடி வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பைப் பெற்றுள்ளன”
“அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் போது எவரையும் விட்டுவிடாமல் அனைத்து மக்களையும் பங்களிக்க செய்வதில் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது”
“உத்தரப்பிரதேசம் ஒவ்வொரு துறை வளர்ச்சியும் புதிய பரிமாணங்களை அதிகரித்துள்ளது”
“ஏமாற்றங்களின் நிழலிலிருந்து விடுபட்டு உத்தரப்பிரதேசம் தற்போது விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பாதையில் பயணிக்கிறது”
Posted On:
24 MAR 2023 3:03PM by PIB Chennai
வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கடோவ்லியாவுக்கு பயணிகள் கம்பிவடப் பாதை, கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பகவான்பூரில் 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிக்ரா விளையாட்டு மைதானத்தின், 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மறுமேம்பாட்டுப் பணி, இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தால் சேவாபுரியின் இசர்வார் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள எல்பிஜி நிரப்பும் நிலையம், பர்தாரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம், மிதக்கும் ஜெட்டி ஆகிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 63 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும், 19 குடிநீர் வழங்கும் திட்டங்கள், ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 59 குடிநீர் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கர்கியாவோனில், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தும் ஒருங்கிணைந்த நிலையத்தை அவர் திறந்து வைத்தார். வாரணாசி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று நவராத்திரியின் புனிதமான நாள் என்றும், அன்னை சந்திரகாந்தாவை வணங்கும் நாள் என்றும் குறிப்பிட்டார். இந்த புனிதமான நாளில் வாரணாசி மக்களிடையே தாம் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், வாரணாசியின் முன்னேற்றத்தில் இன்று ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாரணாசி கம்பிவடப் பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், பல கோடி ரூபாய் மதிப்பில் வாரணாசியின் வளர்ச்சிக்கு உதவி புரியும் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். குடிநீர், சுகாதாரம், கல்வி, கங்கை தூய்மை, வெள்ளக்கட்டுப்பாடு, காவல்துறை சேவைகள், விளையாட்டு உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி நகரில் உலகத்தரத்துக்கு இணையான கல்வி நிறுவனமான பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் எந்திரக் கருவிகள் வடிவமைப்பு திறன் மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த முன்னேற்றத் திட்டங்களுக்காக வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
காசிக்கு வருகை புரியும் ஒவ்வொரு பார்வையாளரும், புதிய ஆற்றலுடன் திரும்பிச் செல்வதாக காசியின் வளர்ச்சி எங்கு பார்த்தாலும் பேசப்படுவதாக தெரிவித்த பிரதமர், மக்களின் அச்சங்களை மீறி நகரத்தை மாற்றுவதில் காசி வெற்றி பெற்றுள்ளது என்றார்.
பழைய மற்றும் புதிய காசியில் ஒரே நேரத்தில் தரிசனம் நடைபெறுவதைக் குறிப்பிட்ட பிரதமர், காசி விஸ்வநாதர் ஆலய வளாகம், கங்கா படித்துறை பணிகள், நீளமான நதிக்கப்பல் ஆகியவை பற்றி உலகளவில் பேசப்படுவதாக தெரிவித்தார். ஓராண்டில் 7 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். காசியில் சுற்றுலாப் பயணிகள் புதிய பொருளாதார வாய்ப்புகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றனர்.
சுற்றுலா மற்றும் நகரத்தை அழகுப்படுத்துதல் தொடர்பான திட்டங்களின் புதிய வளர்ச்சிக் குறித்து குறிப்பிட்ட பிரதமர், “சாலைகள், பாலங்கள், ரயில்வே அல்லது விமான நிலையங்கள் ஆகியவற்றில் எதுவாக இருந்தாலும், வாரணாசியுடனான இணைப்பை முழுவதுமாக எளிதாக்கி உள்ளது” என்றார். புதிதாக உருவாக்கப்பட உள்ள கம்பிவடப் பாதை திட்டம் நகரத்தின் இணைப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார். நகரில் பல வசதிகளை ஊக்குவிக்கும் இந்தத்திட்டங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். கம்பிவடப் பாதை முடிவடைந்த பின்னர், பனாரஸ் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் காசி விஸ்வநாதர் வழித்தடம் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை சில நிமிடங்களில் கடக்க முடியும் என்பதுடன் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் கடோவ்லியா இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிற மாநிலங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளைச்சேர்ந்த மக்கள் தற்போது காசி நகருக்கு குறைந்த நேரத்தில் வந்து செல்லக்கூடிய வசதி உருவாக்கபட்டிருப்பதை குறிப்பிட்ட பிரதமர், நெடுஞ்சாலை இணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய மையமாக மாறியிருப்பதாகவும் கூறினார்.
பபத்பூர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏடிசி கோபுரம், காசியுடனான விமானப் போக்குவரத்து இணைப்புக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது என்றார். யாத்ரீகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், நமாமி கங்கை திட்டத்தின் மூலம் கங்கை நதி பாயும் நகரங்களில் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதையும் நினைவு கூர்ந்தார். கடந்த 9 ஆண்டுகளில் கங்கை பாயும் மலைப்பகுதிகள் அனைத்தும் முன்னேறி வருவதை மக்கள் கண்கூடாக உணர்ந்து வருவதாகத் தெரிவித்தார். கங்கையின் இருபுறங்களிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் வங்கியையொட்டிய 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை விவசாயத்தை மத்திய அரசு முன்னிறுத்தி வருவதாகவும் கூறினார். இப்பணிகளுக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியப் பிரதமர், இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், புதிய மையங்கள் அமைக்கப்படுவதையும் பிரதமர் மேற்கோள் காட்டினார்.
உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிகள் முழுவதும் விவசாயத்தின் மையமாகவும், வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் மையமாகவும் மாறியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், வாரணாசியில் அமைக்கப்பட்ட வேளாண் பொருட்களை பதப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகள், வாரணாசியின் மாம்பழம், காஸிப்பூரின் பச்சை மிளகாய், வெண்டைக்காய் ஆகியவை தற்போது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
சுத்தமான குடிநீர் தொடர்பான பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு இருப்பதையும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிகாட்டினார். கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் உள்ள 8 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இருபதையும், உஜ்வாலா திட்டத்தின் சாதனைகளையும் பட்டியலிட்ட அவர், சேவாபுரியில் எல்பிஜி ஆலை அமைக்கப்பட்டு பலர் பயனடைந்து இருப்பதுடன், உத்திரப்பிரதேசத்தின் கிழக்குபகுதிகள், பீகாரின் மேற்கு பகுதிகளில் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய பட்டருப்பதையும் நினைவுகூர்ந்தார்.
மத்தியிலும், உத்திரப்பிரதேசத்திலும் ஆளும் அரசுகள் ஏழைகளுக்கு சேவைப்புரிவதையே தலையாய கடைமையாகக் கொண்டிருப்பதாக கூறினார். நரேந்திர மோடியை மக்கள் பிரதமர் என்று அழைத்தபோதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதையே அவர் கடமையாக கொண்டு இருப்பதையும் குறிப்பிட்டார். முன்னதாக இன்று காலை மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது மத்திய அரசின் திட்டங்களால் வாரணாசி மக்கள் பலனடைந்து இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 2014ம் ஆண்டுக்கு முன்பு, வங்கிக் கணக்கு தொடங்குவதில் நிலவிய பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்த அவர், தற்போது அந்த நடைமுறை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போது ஏராளமான மக்கள் சிரமமின்றி, ஜன் தன் வங்கிக் கணக்கை தொடங்கியிருப்பதாகவும், அரசின் நலத்திட்டங்களுக்கான நிதி அந்த கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இதேபோல், சிறு விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு எளிதில் வழங்கப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டார். கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் ஆகியோருக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு இருப்பதையும், சாலையோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ், வங்கிக்கடன் பெற்றிருப்பதையும், திறன் மேம்பாட்டுக்காக விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதையையும் பட்டியலிட்டார். இந்த நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் யாரையும் விட்டு வைக்கப்போவதில்லை என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற கேலோ பனாரஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் தான் கலந்துரையாடியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வாரணாசியின் இளைஞர்களுக்கு புதிய விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சிக்ரா மைதானத்தின் 2-வது மற்றும் 3-வது கட்ட விரிவாக்கப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். சர்வதேச கிரிக்கெட் மைதானம் வாரணாசியில் அமைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய பரிமாணங்களை உத்தரப்பிரதேசம் பெறுவதாக பிரதமர் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் திரு யோகி ஆதித்தயநாத் தலைமையிலான அரசு 2-வது முறையாக பொறுப்பேற்றதன் முதலாம் ஆண்டு நாளை (மார்ச் 25) நிறைவடைவதாகவும் பிரதமர் கூறினார். மாநிலத்தில் நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்துள்ளவர் என்ற புதிய சாதனையையும் திரு யோகி ஆதித்யநாத் உருவாக்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். முன்பு அதிருப்தியில் இருந்த உத்தரப்பிரதேசம் தற்போது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பாதையில் ஊக்கத்துடன் முன்னேறி வருவதாக அவர் கூறினார். பாதுகாப்பை அதிகரிப்பதிலும், வளத்தை உறுதி செய்வதிலும் உத்தரப்பிரதேசம் தெளிவான உதாரணமாக திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய வளர்ச்சி திட்டங்கள் வளமான பாதையை மேலும் வலுப்படுத்தும் என்று கூறி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பின்னணி
கடந்த 9 ஆண்டுகளில் வாரணாசிப் பகுதியை சிறப்பாக மாற்றியமைத்து நகரப்பகுதி மற்றும் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன் மற்றொரு நடவடிக்கையாக சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் சுமார் ரூ.1780 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
வாரணாசி கண்டோன்மென்ட் நிலையம் முதல் கோடோவ்லியா நிலையம் வரை பயணிகள் ரோப்வே திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். 645 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இது சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் வாரணாசி மக்களின் பயணத்தை எளிதாக்கும்.
தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் செலவில் பகவன்பூரில் 55 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிக்ரா மைதானத்தில் 2-வது மற்றும் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கழக நிறுவனத்தால் சேவாபுரி பகுதியில் உள்ள இசர்வார் கிராமத்தில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். உடைமாற்றும் அறைகளுடன் படகுத்துறை, பார்தரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ஜல்ஜீவன் எனப்படும் உயிர்நீர் இயக்கத்தின் கீழ் 19 குடிநீர் திட்டங்களை பிரதமர் அர்ப்பணித்தார். இதன் மூலம் 63 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள். ஊரக குடிநீர் திட்டத்தை மேலும் வலுப்படுத்த 59 குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடையும் வகையில், கார்கியானில் ஒருங்கிணைந்த தொகுப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தரம் பிரித்தல், வரிசைப்படுத்துதல், பதப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் இந்த வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.
வாரணாசி நவீன நகர திட்டத்தின் கீழ் ராஜ்காட் மற்றும் மஹ்மூர்கஞ்ச் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மறு சீரமைப்பு பணிகள் உட்பட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அர்ப்பணித்தார். நகர சாலைகளை அழகுபடுத்துதல்; நகரின் 6 பூங்காக்கள் மற்றும் குளங்களை மறுவடிவமைப்பு செய்தல். லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ஏடிசி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் அர்ப்பணித்தார்; பேலுபூர் நீர் பணிகள் வளாகத்தில் 2 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலை,; கோனியா நீரேற்று நிலையத்தில் 800 கிலோவாட் சூரிய மின்சக்தி நிலையம்; சார்நாத்தில் புதிய சமூக சுகாதார மையம்; சந்த்பூரில் உள்ள தொழிற்பேட்டையின் உள்கட்டமைப்பு மேம்பாடு; கேதாரேஷ்வர், விஸ்வேஷ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் காண்ட் பரிக்ரமா கோவில்கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளையும் பிரதமர் அர்ப்பணித்தார்.
***
(Release ID: 1910320)
SM/PKV/PLM/ES/RR/AG/RS/KRS
(Release ID: 1910421)
Visitor Counter : 253
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam