பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஒரே உலகம் காசநோய் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
காசநோய் இல்லாத பஞ்சாயத்து முன்முயற்சியை தொடங்கி வைத்து, இந்தியா முழுவதும் காசநோய் தடுப்பு சிகிச்சை மற்றும் குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சையையும் தொடங்கி வைத்தார்
காசநோய் இல்லாத சமுதாயத்தை உறுதிப்படுத்துவதை நோக்கி இந்தியா தனது உறுதிப்பாட்டை அர்ப்பணித்துள்ளது
2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் லட்சியத்தை செயல்படுத்தும் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது
“காசநோய் போன்ற நோயை எதிர்த்துப் போராட உலகளவிலான தீர்மானத்திற்கு புதிய ஆற்றலை காசி வழங்கும்”
“ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டின் மூலம் உலக நலனுக்கான மற்றொரு உறுதிப்பாட்டை இந்தியா நிறைவு செய்கிறது”
காசநோய்க்கு எதிரான உலகப் போருக்கான புதிய மாதிரியை வழங்கும் இந்தியாவின் முயற்சிகள்”
“காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பு இந்தியாவின் மிகப் பெரிய பங்களிப்பாகும்”
“2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முடிவு கட்ட இந்தியா தற்போது இலக்கு வைத்து பாடுபடுகிறது”
“இந்தியாவின் நவீன தொழில்நுட்பம், புத்தாக்கங்கள் அனைத்துப் பிரச்சாரங்களின் பயனை மேலும் மேலும் நாடுகள் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்”
Posted On:
24 MAR 2023 1:09PM by PIB Chennai
வாரணாசியில் ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். காசநோய் இல்லாத பஞ்சாயத்து, இந்தியா முழுவதும் காசநோய்க்கான தடுப்பு சிகிச்சை, குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சை ஆகியவற்றை தொடங்கி வைத்த அவர், இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023-யும் வெளியிட்டார். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் மற்றும் உயர் தடுப்பு ஆய்வகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டிய அவர், வாரணாசியில் பொது சுகாதார கண்காணிப்பு அலகையும் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்பில் முன்னேற்றத்தைக் கண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் புல்வாமா, அனந்தநாக் ஆகிய மாவட்டங்கள் இந்த விருதைப் பெற்றன.
காசநோய்க்கு முற்றுப்புள்ளி இயக்கத்தின் செயல் இயக்குனர் டாக்டர் லூசியா டிட்டியு, உலகின் ஆயிரமாண்டு பழமையான காசநோய் குறித்த உச்சி மாநாடு, உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில் நடைபெறுவது பொருத்தமானது என்று கூறினார். இந்தியாவில் மிக அதிகமாக நோய் இருந்தபோதிலும், அதனைக் கட்டுப்படுத்தும் லட்சியமும், அதை செயல்படுத்தும் திட்டமும் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்தார். ஒரே உலகம், ஒரே குடும்பம் என்னும் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ கருப்பொருளின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், 2025 ஆம் ஆண்டுக்குள், பிரதமரின் தலைமையின் கீழ் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியா போன்ற நாடுகளின் முயற்சிகள் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக காசநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார். காசநோயை கட்டுப்படுத்துவதில் இந்தியா மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை பாராட்டிய அவர், இந்தியாவின் ஆதரவுடன் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முடிவு கட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் காசநோய் குறித்த ஐ.நா. உயர்மட்டக் கூட்டம் செப்டம்பர் 22-ந் தேதி நடைபெறுவதாக தெரிவித்த அவர், இந்தக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். காநோய்க்கு எதிரான போராட்டத்தில் மற்ற உலகத் தலைவர்களையும் பங்கேற்க செய்வதில் பிரதமர் தலைமையேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாடு நடைபெறும் வாரணாசி, தமது நாடாளுமன்ற தொகுதி என்று சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தில் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளை காசி நகரம் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். எந்தவிதமான தடைகள் இருந்தாலும் காசி எப்போதும் அனைவரது முயற்சியுடன் புதிய வழிகளை உருவாக்கி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காசநோய் போன்ற நோய்களுக்கு எதிராக போராடுவதில் உலக உறுதிப்பாட்டுக்கு காசி புதிய ஆற்றலாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உலகமே ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் சித்தாந்தம் என்று கூறிய பிரதமர், இந்த சித்தாந்தம் ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உலகுக்கு வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். ஜி20 அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா அதன் கருப்பொருளாக “ஒரே குடும்பம், ஒரே உலகம், ஒரே எதிர்காலம்” என்பதை மையமாக வைத்துள்ளது என்று அவர் கூறினார். ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்ற தொலைநோக்குடன் உலகில் இந்தியா முன்னேறி செல்கிறது என்று கூறிய பிரதமர், ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டுடன் உலக நன்மைக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது என்றார்.
2014-ம் ஆண்டுக்கு பிறகு காச நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாடும், அர்ப்பணிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது என்று பிரதமர் கூறினார். காச நோய்க்கு எதிரான உலகளாவிய போரில் புதிய நடைமுறையில் இந்தியாவின் முயற்சிகள் முக்கியமானவை என்று அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளாக காச நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்முனை அணுகுமுறைகளை அவர் விவரித்தார். உடல் தகுதி இந்தியா இயக்கம், யோகா, கேலோ இந்தியா உள்ளிட்டவற்றின் மூலம் ஊட்டச்சத்து, சிகிச்சைகளில் புதுமை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ஆரோக்கியம், நோய் தடுப்பு போன்றவை மக்களின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நிக்ஷய் மித்ரா இயக்கம் குறித்து பேசிய பிரதமர், மக்களின் பங்களிப்புடன் காசநோயாளிகளுக்கு உதவிகளை இது வழங்குவதாக கூறினார். இந்த இயக்கத்தின் மூலம் 10 லட்சம் காச நோயாளிகள் பொது மக்களால் தத்தெடுக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 10 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கூட இந்த இயக்கத்தின் கீழ் உதவ முன்வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் காசநோயாளிகளுக்கான நிதியுதவி 1000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த இயக்கம் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது எனக் கூறிய அவர், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதில் பங்கேற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிகப்பெரிய சவாலாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பான விஷயத்தில் நிக்ஷய் மித்ரா இயக்கம் நோயாளிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். 2018-ம் ஆண்டில் காசநோயாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை அரசு அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் இதுவரை 2000 கோடி ரூபாய் நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் அவர்களது சிகிச்சைக்காக செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட காசநோயாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கொழிந்த மற்றும் பழமையான நடைமுறைகளைக் கொண்டு புதிய தீர்வுகளை எட்டுவது மிகவும் சிக்கலானது என்று கூறிய அவர், காச நோயாளிகளுக்கு சிகிக்சை அளிப்பதற்கு புதிய உத்திகளுடன் கூடிய அரசு செயலாற்றி வருவதாக தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகள் உள்ளதை அவர் எடுத்துரைத்தார். நாட்டில் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். காச நோயாளிகள் அதிகம் உள்ள பகுதிகளை கருத்தில் கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ப சிறப்பு செயல்திட்ட கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றின் ஒரு பகுதியாக ‘காச நோய் இல்லாத ஊராட்சிகள் இயக்கம்’ என்ற புதிய இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காச நோய்க்கு 6 மாத சிகிச்சைக்கு பதிலாக 3 மாத சிகிச்சை திட்டத்தையும் அரசு தொடங்கியிருப்பதாக அவர் கூறினார். முன்னதாக நோயாளிகள் 6 மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்ததாகவும், தற்போது புதிய நடைமுறையில் நோயாளிகள் வாரத்தில் ஒரு நாள் மருந்துகளை எடுத்துக்கொண்டால் போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.
காச நோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். நிக்ஷய் இணைய தளத்தின் தரவு அறிவியல் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோய் கண்காணிப்பு தொடர்பான புதிய நடைமுறையை உருவாக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். உலக சுகாதார அமைப்பை தவிர பிற நாடுகள் எதுவும் இத்தகையை முறையை உருவாக்கவில்லை என்றும் இந்தியா மட்டுமே இந்த நடைமுறையை உருவாக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காச நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இன்று இது தொடர்பான நோய் தடுப்பு பணிகளுக்காக கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு விருதுகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். உலகளவில் காச நோயை ஒழிக்க 2030-ம் ஆண்டு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் அதை ஒழிக்க இலக்கு நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், இது இந்தியாவின் மற்றொரு உறுதியான நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் திறன் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு குறித்து குறிப்பிட்ட அவர், நோய் கண்டறிதல், பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை பயன்படுத்தி பெருந்தொற்றுக்கு எதிராக போராடியதாக தெரிவித்தார். இந்தியாவின் உள்ளூர் அணுகுமுறை உலகளவில் திறன் வாய்ந்ததாக இருந்தது என்று அவர் கூறினார். இந்த திறன்களை கூட்டு முயற்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். காச நோய்க்கான மருந்துகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே 80 சதவீத மருந்துகள் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்தியாவில் செயல்படுத்தப்படும் இயக்கங்கள், புதுமையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பல நாடுகள் பயன்பெற வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளும் இது தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார். நமது இந்த தீர்மானம் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதிபட தெரிவித்த பிரதமர், நாம் காசநோய்க்கு முடிவுகட்ட முடியும் என்று கூறினார்.
தொழு நோயை ஒழிப்பதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை பிரதமர் நினைவுகூர்ந்தார், அகமதாபாத்தில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றை திறக்க மகாத்மா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். அந்த மருத்துவமனைக்கு தேவை ஏற்படாமல் அது மூடப்படுவதை பார்த்தால் தாம் மகிழ்ச்சி அடைவேன் என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் மகாத்மா காந்தி கூறியதாக பிரதமர் தெரிவித்தார். ஆனால் அந்த மருத்துவமனை தொடர்ந்து பல ஆண்டுகள் செயல்பட்டதாகவும், தொழுநோய்க்கு முடிவு கட்டப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். தொழுநோய்க்கு எதிரான மிகப்பெரிய இயக்கம் 2001-ம் ஆண்டு தாம் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் குஜராத்தில் தொழுநோய் விகிதம் 23 சதவீதத்தில் இருந்து 1 சதவீதத்துக்கும் குறைவாக சரிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த தொழுநோய் மருத்துவமனை 2007-ம் ஆண்டில் தாம் குஜராத் முதலமைச்சராக இருந்த போது மூடப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். இந்த விஷயத்தில் சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்பு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிட்டார். இதே போல் காச நோய்க்கு எதிராகவும் போராடி இந்தியா வெற்றி பெறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய புதிய இந்தியா இலக்குகளை அடைவதில் பெயர் பெற்றது என்று குறிப்பிட்ட அவர், இதற்கு பல உதாரணங்களை எடுத்துரைத்தார். திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுதல், சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் தொடர்பான இலக்கு பெட்ரோலின் எத்தனால் கலப்பு விகித இலக்கை முன்கூட்டியே எட்டியது போன்றவற்றை பிரதமர் குறிப்பிட்டார். பொது மக்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த உலகத்துக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும் அவர் கூறினார். பொது மக்களின் பங்களிப்பின் மூலம் காச நோய்க்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார். காச நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதார சேவைகளை காசி நகருக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் குறிப்பிட்டப் பிரதமர், வாரணாசியில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டிருப்பதையும் நினைவுகூர்ந்தார். பொது சுகாதார கண்காணிப்புப் பிரிவு இயக்கப்பட்டு இருப்பதையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள குழந்தைகள் நல நிறுவனத்தில் நவீனப்படுத்தப்பட்ட ரத்தவங்கி, பன்னோக்கு மருத்துவ வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டு இருப்பதையும், பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதையும் சுட்டிக்காட்டினார். இதேபோல், கபீர் சௌரா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, டயாலிசஸ் வசதிகள், சி டி ஸ்கேன் வசதிகள் என காசி நகரத்தின் கிராமப்பகுதிகள் அனைத்திலும் சகாதார வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் பட்டியலிட்டார். வாரணாசியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்று வருவதை குறிப்பிட்ட அவர், நோயாளிகள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க ஏதுவாக 70-க்கும் மேற்பட்ட மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதுவரையிலான தேசத்தின் அனுபவம், மனவலிமை, நிபுணத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தி காசநோயை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்கவேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டு இருப்பதையும் பிரதமர் மேற்கோள் காட்டினார். மற்ற நாடுகளுக்கு அவற்றின் தேவைக்கேற்ப தொடர்ந்து உதவ இந்தியா, எப்போதுமே தயாராக இருப்பதாகவும், காசநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒவ்வொருவரின் முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றிபெறும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். நம்முடைய இன்றைய முயற்சிகள் நமது பாதுகாப்பான எதிர்காலத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் என நம்புவதாக கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி நமது எதிர்கால சந்ததியினரிடம் ஆரோக்கியமான உலகத்தை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பதக், காசநோயை ஒழிக்கும் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லூசிகா டிடியு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னணி
உலக காசநோய் தினத்தையொட்டி ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார். இந்த மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும், காசநோயை ஒழிப்போம் இயக்கமும் இணைந்து நடத்தின. கடந்த 2021-ம் ஆண்டு நிறுவப்பட்டு ஐநாவின் கீழ் இயங்கும் இந்த இயக்கம் உலக நாடுகளில் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குரலாக ஒலித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, காச நோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை பிரதமர் தொடங்கி வைத்தார். காசநோய்க்கான குறுகிய காசநோய் தடுப்பு சிகிச்சை, காசநோய்க்கான குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மாதிரியின் அதிகாரப்பூர்வ இந்திய அலுவல் மற்றும் இந்தியாவின் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிட்ட அவர், காசநோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். ஒரே உலகம் காசநோய் உச்சிமாநாடு, காசநோயை இந்த நாட்டிலிருந்து அறவே ஒழிப்பதற்கான இலக்கை முன்னிறுத்தும் முனைப்பான நடவடிக்கைகளை வழங்கும். அதே நேரத்தில் தேசிய அளவிலான காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பெற்ற அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும். இந்த உச்சி மாநாட்டில் 30 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
------------
SM/PKV/PLM/ES/RR/AG/RS/KRS
(Release ID: 1910412)
Visitor Counter : 937
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam