பிரதமர் அலுவலகம்

சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 MAR 2023 3:25PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர்களான டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு தேவுசின் சவுகான் அவர்களே, சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

விக்ரம் சம்வாத் 2080ஐ  முன்னிட்டு உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆறாம் தலைமுறை தொழில்நுட்ப சோதனைத்தளமும் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் சம்பந்தமான நமது தொலைநோக்கு ஆவணமும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவில் புதிய ஆற்றல் ஏற்படுவதோடு, தெற்கு ஆசியா மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்குத் தீர்வுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும். இது குறிப்பாக கல்வியாளர்கள்,  கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

ஜி20 அமைப்பிற்குத் தலைமை ஏற்கும் வேளையில் பிராந்திய வேற்றுமையைக் குறைப்பது இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகளுள் ஒன்று. சில வாரங்களுக்கு முன்பு உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியது. உலகளாவிய தெற்குப் பகுதிகளின் பிரத்தியேக தேவையைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் தரநிலைகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையம், இந்தப் பாதையில் ஓர் முக்கிய நடவடிக்கையாகும்.

நண்பர்களே,

தொழில்நுட்ப இடைவெளியை சமன்படுத்துவது குறித்து பேசும்போது, இந்தியாவிடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகள் இயற்கையாகவே எழுகிறது. இந்தியாவின் திறன், புத்தாக்க கலாச்சாரம், உள்கட்டமைப்பு, திறமை, மனித ஆற்றல், உகந்த கொள்கை சூழல் முதலியவை இந்த எதிர்பார்ப்பிற்கு அடித்தளமாக அமைந்துள்ளன.  தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் என்பது இந்தியாவிற்கு ஆற்றல் அளிக்கும் ஒரு கருவி மட்டுமல்ல, மக்களுக்கு அதிகாரமளிக்கும் ஓர் இயக்கமும் கூட. டிஜிட்டல் தொழில்நுட்பம் இன்று உலகளாவிய அளவில் அனைவராலும் அணுகக் கூடிய வகையில் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் உள்ளடக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.  இன்று கிராமங்களில் இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நகரங்களில் பயன்படுத்துபவர்களை விட அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 5 லட்சம் பொது சேவை மையங்கள் வாயிலாக கிராமங்களில் டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. உலகளவில் விரைவாக 5ஜி தொழில்நுட்பத்தைத் தொடங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி வேகத்தினால், இந்த தசாப்தம், இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை சுமூகமான, பாதுகாப்பான, வெளிப்படையான, நம்பகத்தன்மையானதாக உள்ளது. தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1909524

***

 (Release ID: 1909524)



(Release ID: 1910248) Visitor Counter : 112