விவசாயத்துறை அமைச்சகம்

தில்லியில் முதலாவது உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டை நடத்துவதற்காக பிரதமருக்கு கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி பாராட்டு

Posted On: 18 MAR 2023 12:21PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள புசாவில் முதலாவது உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டை நடத்துவதற்காக  பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று கயானா அதிபர் டாக்டர். முகமது இர்பான் அலி பாராட்டியுள்ளார்.  இந்த மாநாடு உணவுப் பாதுகாப்பின்மை என்ற  உலகின் முதன்மையான சவாலுக்குத் தீர்வு காண்பதில் நெடுந்தொலைவு செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக  ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததை முன்னிட்டு தமது நாட்டில் 200 ஏக்கர் நிலத்தை பிரத்தியேகமாக  சிறுதானிய உற்பத்திக்காக வழங்கியதை கயானாவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் டாக்டர் இர்பான் அலி தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான உணவின் பண்ணை உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்தியா வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தினை வகையைச் சேர்ந்த சிறுதானியங்கள் விலை குறைவான, சத்தான உணவு என்பதுடன், பருவநிலை மாற்ற மாறுபாடுகளையும் எதிர்க்கும் தன்மை கொண்டதாகும் என்று அவர் கூறியுள்ளார்.  17 கரீபியன் நாடுகளில் சிறுதானிய  உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பில் அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உறுதியளித்துள்ளார்.

சிறுதானிய உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் இந்தியா உலக அளவில்  முன்னணியில் உள்ளது என்று கூறியுள்ள டாக்டர் இர்பான் அலி,  உலக அளவில் இதனைப் பிரபலப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் அதிபர்  திருமதி சாஹ்லே-வொர்க் ஜூடே வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ செய்தியில் , இந்த உலகளாவிய சிறுதானிய  மாநாட்டிற்காக பிரதமர் மோடியை மனதார வாழ்த்தியுள்ளார். மேலும் இது உலக நாடுகளையும், இந்த அதிசயவகை தானிய உற்பத்திக்கான கொள்கை வகுப்பாளர்களையும் ஊக்குவிக்கும் என்று அவர்  கூறியுள்ளார்.

எத்தியோப்பியா போன்ற சஹாரா பிராந்திய  நாட்டின் உணவுப் பாதுகாப்பு சவால்களை மட்டுமல்லாமல், முழு ஆப்பிரிக்கக் கண்டம் மற்றும் உலகம் முழுவதும் இந்த மாநாட்டின் பயன்கள் நீண்ட தூரம் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மாநாட்டின் யோசனைகள் 2030 இன் நிலையான வளர்ச்சி இலக்குகளை வடிவமைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்,”

---

AD/PKV/KPG

 



(Release ID: 1908328) Visitor Counter : 101