உள்துறை அமைச்சகம்
ஐதராபாதில் இன்று நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப் ) 54-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்
Posted On:
12 MAR 2023 1:49PM by PIB Chennai
ஐதராபாதில் இன்று நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப் ) 54-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர், சிஐஎஸ்எஃப்-இன் இதழான சென்டினல்-2023 மற்றும் காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநர், பல உயரதிகாரிகள் மற்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிஐஎஸ்எஃப்-ன் 53 ஆண்டுகால வரலாற்றில், அது தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று திரு. அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். தொழில் நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும் என்று அவர் கூறினார். சிஐஎஸ்எஃப்-ன் ஒவ்வொரு வீரரும் கடந்த 53 ஆண்டுகளில் சிஐஎஸ்எஃப்-ன் நோக்கங்களை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து நாட்டுக்கு விலைமதிப்பற்ற சேவையை செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். எதிர்கால சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ள சிஐஎஸ்எஃப் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு தேசத்திற்குத் தொடர்ந்து சேவை செய்யும் என்று திரு ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
1969-ம் ஆண்டு சிஐஎஸ்எஃப் படையில் சுமார் 3,000 வீரர்கள் இருந்ததாகவும், 53 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.70 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில், சிஐஎஸ்எஃப்-ன் வளர்ச்சிக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார். சமகால டிஜிட்டல் யுகத்தில், சிஐஎஸ்எஃப் அதன் பங்குதாரர்களுக்கு அதிநவீன பாதுகாப்பை வழங்கிவருகிறது என்றும் அவர் கூறினார். சிஐஎஸ்எஃப் தற்போது 66 முக்கிய மற்றும் பதற்றம் மிக்க விமான நிலையங்கள், 14 பெரிய துறைமுகங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி நிறுவனங்கள், தில்லி மெட்ரோ, ஒற்றுமை சிலை மற்றும் பல தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் சுரங்கங்களுக்குப் பாதுகாப்பை வழங்கி வருகிறது என்று திரு அமித் ஷா கூறினார்.
மரங்கள் நடும் இயக்கத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான மரகன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலுக்கான தனது விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் சிஐஎஸ்எஃப் வெளிப்படுத்தியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இது தவிர, 1200க்கும் அதிகமான தூய்மைப் பிரச்சாரங்களை நடத்தி, சுகாதாரக் கலாசாரத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளது.
சிஏபிஎஃப் இ-ஆவாஸ் (வீட்டுவசதி) இணையப்பக்கம் செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது, அதன் அடிப்படையில் 6 மாதங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், வீடுகள் வழங்கும் விகிதத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளில் எந்தப் படையைச் சேர்ந்த வீரர்களும் வசிக்க அனுமதி அளிக்கப்பட்டதினால், கட்டப்பட்ட வீடுகளின் பயன் வெகுவாக அதிகரித்துள்ளது. 2024 நவம்பரில் வீடுகள் வழங்கும் விகிதம் 73 சதவீதமாக இருக்கும் என்றும், இது சுதந்திரத்திற்குப் பிறகான அதிகபட்சமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
***
SRI/SMB/DL
(Release ID: 1906113)
Visitor Counter : 207