பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் காணொளி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 MAR 2023 5:28PM by PIB Chennai

நண்பர்களே,

 

உங்கள் அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகள்.  ஆயிரக்கணக்கான குடும்பங்களை இன்றைய நிகழ்வு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. குறுகிய காலத்திலேயே இரண்டாவது முறையாக குஜராத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கவும், நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களது திறனை பயன்படுத்திக் கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி அரசுகள் மேற்கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இது ஓர் உதாரணம்.

 

நண்பர்களே,

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் சுமார் 1.5 லட்சம் இளைஞர்கள் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அரசுப் பணிகள் தவிர்த்து, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக இங்கு பல்வேறு துறைகளில் சுமார் 18 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்த பணியாமர்த்தல் நடைமுறையையும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குஜராத் மாநில அரசு வெளிப்படைத் தன்மையானதாக மாற்றியுள்ளது. பா.ஜ.க அரசின் முயற்சிகளால் பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே நமது நோக்கம்.

 

நண்பர்களே,

 

வரும் ஆண்டுகளில் உற்பத்தித் துறையின் மிகப்பெரிய மையமாக இந்தியா விளங்கும் என்று உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதில் குஜராத் மாநிலம் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்குகிறது. இந்த புரட்சியை உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். குறைகடத்திகளின் முக்கிய மையமாகவும் குஜராத் மாற உள்ளது. இத்தகைய முயற்சிகளும் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கொள்கை அளவில் ஏற்பட்டுள்ள புதிய முக்கிய மாற்றங்கள், புத்தொழில் நிறுவனங்கள் முன்னேறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இன்று 90 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தொழில்  நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன, குறிப்பாக இரண்டு மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இது போன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வங்கி உத்தரவாதம் அல்லாத நிதி உதவியை அரசு வழங்கி வருகிறது.

 

இந்த புனித நன்னாளில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

***

SRI/RB/DL


(Release ID: 1905837) Visitor Counter : 166