பிரதமர் அலுவலகம்

“சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்”

“ஒரே உலகம், ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற தொலைநோக்குச் சிந்தனையை நாம் உலகிற்கு உணர்த்தியுள்ளோம். மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்து படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது இது”

“குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது நமது அரசின் முதன்மையான முக்கியத்துவமாகும்”

“ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தகத் திட்டங்கள், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது”

“பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் புதிய மருத்துவமனைகளை மட்டும் உருவாக்காமல், புதிய முழுமையான சுகாதார சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது”

“சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் கவனம் செலுத்துவது தொழில்முனைவோருக்கு சிறந்த வாய்ப்பாகும் மற்றும் நமது முயற்சிகளை உலகளாவிய சுகாதாரத் துறையில் கவனம் செலுத்த செய்யும்”

“மருந்து உற்பத்தித் துறையின் இன்றைய சந்தைய மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாயாகும். தனியார் மற்றும் கல்வித் துறையினர் இடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் இதன் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்”

Posted On: 06 MAR 2023 11:09AM by PIB Chennai

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை திறனுடன் அமல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின்
9-வது பகுதி இதுவாகும்.

இக்கருத்தரங்கில் பேசிய பிரதமர், கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும் என்று கூறினார்.  வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்ததாக அவர் தெரிவித்தார். தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.  அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியதாக தெரிவித்தார். இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றுக் காலத்தில் விநியோகம் குறித்து பாடம் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், இது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக இருந்தது என்று தெரிவித்தார். பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் ஆகியவை ஆயுதங்களாக இருந்தது என்றும் கவலை தெரிவித்தார்.  முந்தைய ஆண்டுகளில் பட்ஜெட் குறித்து குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்க அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார். இதில் அனைத்து தரப்பினரின் பங்களிப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக உடல்நலத்திற்கான ஒருங்கிணைந்த தொலைநோக்குப்பார்வை இல்லாமல் இருந்ததாக பிரதமர் கூறினார். சுகாதார அமைச்சகம் என்றோடு மட்டும் உடல்நலன் குறித்து வரையறுப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறையை நாம் தற்போது மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது நமது அரசின் முதன்மையான முக்கியத்துவம் என்றும் பிரதமர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் 80,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மார்ச் 7-ம் நாள் மக்கள் மருந்தக தினமாகக் கடைப்பிடிக்கப்படுவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் உள்ள 9,000 மக்கள் மருந்தகங்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் 20,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.  இந்த 2 திட்டங்கள் வாயிலாக மக்களின் 1 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆபத்தான நோய்களின் சிகிச்சைக்கான வலிமையான சுகாதார உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  அரசின் முன்னுரிமை குறித்து குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் வீடுகளுக்கு அருகிலேயே 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் பரிசோதனை வசதியும், முதல் சிகிச்சை உதவியும் கிடைப்பதாகக் கூறினார். நீரிழிவு, புற்றுநோய், இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறியும் வசதியும் இந்த மையங்களில் உள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரகால சுகாதார உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். புதிய மருத்துவமனைகளை மட்டும் உருவாக்காமல், புதிய முழுமையான சுகாதாரச் சுற்றுச்சூழலை இது ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். சுகாதார தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில் நிபுணர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இது உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்துறையில் மனிதவளங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் 260-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  இதன் மூலம் 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறினார். செவிலியர் கல்லூரிகள் திறப்பது குறித்து இந்த ஆண்டுப் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், 157 செவிலியர் கல்லூரிகள் திறப்பதன் மூலம் மருத்துவ மனிதவளத் துறையில் இது மிகப்பெரிய நடவடிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்தார். இது உள்நாட்டு தேவைமட்டுமல்லாமல் உலகளாவிய தேவையை நிறைவேற்றுவதற்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

மருத்துவ சேவைகளை எளிதிலும், கட்டுப்படியாகும் வகையிலும் நிலையாக கிடைக்கச் செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி எடுத்துரைத்த பிரதமர், இந்தத்துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அரசின் கவனம் குறித்து விவரித்தார். டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை மூலம் குடிமக்களுக்கு உரிய நேரத்தில் சுகாதார கவனிப்பை வழங்க நாங்கள் விரும்புகிறோம். இ-சஞ்ஜீவினி போன்ற திட்டங்கள் மூலம் தொலைதூர ஆலோசனை வழியாக 10 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்தத்துறையில் புத்தொழில்களுக்கான புதிய வாய்ப்புகளை 5ஜி உருவாக்கி வருகிறது. மருந்துகள் விநியோகம் மற்றும் பரிசோதனை சேவைகளில் ட்ரோன்கள் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. தொழில்முனைவோருக்கு இது மகத்தான வாய்ப்பாக உள்ளது என்றும், அனைவருக்கும் சுகாதாரம் என்பதற்கான நமது முயற்சிகளுக்கு இது உந்துதல் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மருத்துவ உபகரணங்கள் துறையில் புதிய திட்டங்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார்.  பெருமொத்த மருந்து பூங்காக்கள், மருத்துவ உபகரணப்பூங்காக்கள் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ உபகரணங்கள் துறையில் 12-14 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்றார். வரும்  ஆண்டுகளில் இதன் மூலமான சந்தை ரூ.4 லட்சம் கோடியை எட்டக்கூடும் என்றும் அவர் கூறினார். எதிர்கால மருத்துவ தொழில்நுட்பத்திற்கு திறன் வாய்ந்த மனித ஆற்றலுக்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உயிரி மருத்துவ பொறியியல் போன்ற பாட வகுப்புகள்  தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  தொழில்துறை கல்வி மற்றும் அரசின் ஒருங்கிணைப்புக்கான வழிவகைகளைக் கண்டறியுமாறு பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் மருந்துத்துறை மீது அதிகரித்து வரும் உலகின் நம்பிக்கை பற்றி எடுத்துரைத்த பிரதமர், இந்தக் கருத்தைப் பாதுகாப்பதும், இதனை சாதகமாகப் பயன்படுத்துவதும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். பொருளாதாரத்தை வலுப்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்ல சிறப்பு மையங்கள் மூலம் மருந்து உற்பத்தித்துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மருந்துகள் உற்பத்தித்துறையில் சந்தையின் அளவை ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக மாற்றுவதற்கு தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தத்துறையில் கூடுதல் ஆய்வுக்கு பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறிய பிரதமர், ஆராய்ச்சித்துறைக்காக ஐசிஎம்ஆர் மூலம் பல புதிய தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக்  கூறினார்.

 நோய்த்தடுப்பு சுகாதாரத்திற்கான அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் தாக்கம் குறித்து குறிப்பிட்ட திரு மோடி, தூய்மைக்காக  தூய்மை இந்தியா திட்டம், புகை தொடர்பான நோய்களை தடுக்க உஜ்வாலா திட்டம், தண்ணீர் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்க ஜல்ஜீவன் இயக்கம், சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு தேசிய ஊட்டச்சத்து இயக்கம் போன்றவற்றைப் பட்டியலிட்டார். மாத்ருவந்தனா திட்டம், இந்திர தனுஷ் இயக்கம், யோகா, உடல்தகுதி இந்தியா இயக்கம், ஆயுர்வேதம் போன்றவை நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதாக பிரதமர் கூறினார். உலக சுகாதார அமைப்பின் ஆதரவில் இந்தியாவில் உலகளாவிய பாரம்பரிய மருந்துகள் மையம் அமைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஆயுர்வேதத்தில்  ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சியின் தேவையை வலியுறுத்தினார்.  

நவீன மருத்துவ அடிப்படை  கட்டமைப்பில் இருந்து மருத்துவ மனித வளத்தை உருவாக்கும் அரசின் முயற்சிகளைக் கோடிட்டுக்காட்டிய திரு மோடி, புதிய திறன்கள் என்பவை இந்திய குடிமக்களுக்கான சுகாதார வசதிகளுடன் மட்டுப்பட்டதல்ல என்றும் உலகின்  அதிக ஈர்ப்புள்ள மருத்துவச் சுற்றுலா இடமாக இந்தியாவை மாற்றுவதும் அவற்றின் நோக்கம் என்றும் கூறினார்.  மருத்துவச் சுற்றுலா என்பது இந்தியாவில் மிகப்பெரிய துறையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான  மாபெரும் வழியாகவும் இருக்கிறது என்றார்.

அனைவரின் முயற்சி என்பதால் மட்டுமே இந்தியாவில் வளர்ச்சியடைந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய சூழலை உருவாக்க முடியும் என்று கூறிய பிரதமர்,  இதற்குத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் சிறந்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். விரும்பிய இலக்குகளை உறுதியான திட்டங்களுடன் உரிய காலத்தில்  நிறைவேற்றுவதற்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று கூறிய பிரதமர், அடுத்த பட்ஜெட் காலத்திற்கு முன் அனைத்துக் கனவுகளையும் நனவாக்க உங்களின் அனுபவப்பகிர்வு தேவைப்படுகிறது என்று பங்கேற்பாளர்களிடம் கூறிய பிரதமர், தமது உரையை நிறைவு செய்தார்.

******

 (Release ID: 1904471)

AP/IR/SMB/KG/RJ/RR



(Release ID: 1904524) Visitor Counter : 287