குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

'இந்தியா ஸ்வச் சுஜல் சக்தி சம்மான் 2023' விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

Posted On: 04 MAR 2023 1:25PM by PIB Chennai

'ஸ்வச் சுஜல் சக்தி சம்மான் 2023' விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று வழங்கினார்.  அதோடு 'நீர்வள ஆதார இயக்கம்: மழையை சேமிப்போம் -2023 என்ற திட்டத்தையும் புதுதில்லியில் அவர் தொடங்கி வைத்தார்.

     இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி முர்மு, ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் நீர் மற்றும் சுகாதாரம் என்பது சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பிரச்சனைகள் பெண்களை அதிகம் பாதிக்கின்றன.  தங்கள் வீட்டிற்குக் குடிநீர் ஏற்பாடு செய்வது பொதுவாகப் பெண்கள் பொறுப்பாகும். கிராமங்களில் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குடிநீருக்கான ஏற்பாடுகள் அவர்களுக்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியது. பொதுவாக பள்ளி/கல்லூரி செல்லும் பெண்களும் பெரியவர்களுடன் சேர்ந்து தண்ணீர் ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டது அவர்களின் படிப்புக்கு இடையூறாக இருந்தது. இப்பிரச்னைகளைப் போக்க இந்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜல் ஜீவன் மிஷன் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் போன்ற முயற்சிகள் மூலம் சுத்தமானக் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குகிறது. இதனால் இன்று 11.3 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் குழாயில் இருந்து குடிநீரைப் பெறுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். முன்பு தண்ணீர் எடுப்பதில் நேரத்தை செலவழித்த பெண்கள் தற்போது அந்த நேரத்தைப் பிற உற்பத்தி சார்ந்த வேலைகளில் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அசுத்தமான தண்ணீரால்  வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்களுக்கு இரையாகும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சுத்தமான குழாய் நீர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

  நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத்தலைவர், நாட்டில் நீர் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விநியோகமும் சீரற்ற நிலையில் காணப்படுவது அனைவரும் அறிந்த செய்தி எனவும் தெரிவித்தார். உலக மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் உலகின் நீர் ஆதாரங்களில் 4 சதவீதம் மட்டுமே இங்கு உள்ளது. மேலும், இந்தத் தண்ணீரின் பெரும்பகுதி மழை வடிவில் பெறப்படுகிறது. இது ஆறுகள் மற்றும் கடல்களில் வீணாக வடிகிறது. அதனால்தான் நீர் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மை நமக்கு மிகவும் முக்கியமானது. இன்று நாம் பாரம்பரிய வழிகளைக் காட்டிலும் நீர் விநியோகத்திற்கான நிறுவன வழிமுறைகளையே அதிகம் சார்ந்துள்ளோம். ஆனால் நிலையான நீர் விநியோகத்திற்கான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு பாரம்பரிய நீர் மேலாண்மை மற்றும் நீர் சேகரிப்பு முறைகளை மீட்டெடுப்பது காலத்தின் தேவையாகும். நீர் சேமிப்பு மற்றும் அதன் மேலாண்மைக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த முயற்சியை நமக்காக மட்டுமன்றி நமது வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் நாம் செய்ய வேண்டும்.

         நாட்டில் உள்ள சுமார் இரண்டு லட்சம் கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாகத் தங்களைப் பிரகடனப்படுத்தியிருப்பதை அவர்  மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த கிராமங்களில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகள் உள்ளன என்று அவர் கூறினார். வீட்டுக் கழிவுகளுக்கான மேலாண்மையை முறையாக  சுற்றுச்சூழல் பாதிப்பற்ற வகையில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வீடுகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் பொது இடத்தில் வீசப்படுவதும் திரவக் கழிவுகள் நீர்நிலைகளில் செல்வதும் அடிக்கடி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் என அவர் கூறினார். பெரும்பாலான கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான ஓர் அமைப்பை நாம் ஏற்படுத்த வேண்டும். இதனால் திரவக் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்த முடியாது, அதோடு  எஞ்சியிருக்கும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கவும் முடியும்.

             இந்தியாவை 'தூய்மையான தேசமாக' மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல அனைத்து குடிமக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். 'மகளிர் சக்தி' இல்லாமல் நீர் ஆதார சக்தி' பலனளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். சமூகச் செழிப்புக்கு இந்த இரு சக்திகளின் ஒன்றுபட்ட சக்தி தேவை. 'நீர்வள ஆதார இயக்கம்' பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

          திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களில், நீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு ஆகிய துறைகளில் விருது பெற்ற அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் காரணமாக நீர் மேலாண்மை மற்றும் தூய்மையில் உலக சமூகத்திற்கு இந்தியா முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறினார். நாடு முழுவதும் தூய்மை மற்றும் நீர் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தெரிவிக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் விருது பெற்றவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

***

AP/CJL/DL(Release ID: 1904182) Visitor Counter : 116