பிரதமர் அலுவலகம்

‘உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு' குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை


“உள்கட்டமைப்பு மேம்பாடு தான் தேச பொருளாதாரத்தின் உந்துசக்தி”

“ஒவ்வொரு பங்குதாரரும் புதிய பொறுப்புகள், புதிய வாய்ப்புகள் மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான தருணம், இது”

“நெடுஞ்சாலைகளின் முக்கியத்துவம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது”

“ ‘வறுமையே அறம்’ என்ற மனநிலையை ஒழிப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம்”

“தற்போது நமது வேகத்தை அதிகரித்து உச்சத்திற்கு முன்னேற வேண்டும்”

“பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் அதன் பல்வகை சரக்குப் போக்குவரத்து தோற்றத்தை மாற்றி அமைக்க உள்ளது”

“பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம், வளர்ச்சியுடன் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டத்தை ஒருங்கிணைக்கும் முக்கிய கருவியாகும்”

“தரம் மற்றும் பல்வகை உள்கட்டமைப்புடன் நமது சரக்குப் போக்குவரத்து செலவு வரும் நாட்களில் மேலும் குறையவிருக்கிறது”

“இயல் உள்கட்டமைப்பின் ஆற்றலுடன், நாட்டின் சமூக உள்கட்டமைப்பிற்கும் வலுவூட்டுவது சம அளவு முக்கியம்”

“நாட்டின் வளர்ச்சியில் மட்டும் நீங்கள் பங்கு கொள்ளவில்லை, இந்தியாவின் வளர்ச்சி எந

Posted On: 04 MAR 2023 11:10AM by PIB Chennai

‘உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு: பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தோடு சரக்குப் போக்குவரத்து செயல் திறனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12  இணையவழிக் கருத்தரங்குகள்  தொடரில் இது எட்டாவதாகும்.

 

கருத்தரங்கில் பேசிய பிரதமர், நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருதி 700 தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மேலாண் இயக்குநர்களுடன் நூற்றுக்கணக்கான பங்குதாரர்கள் இதில் கலந்து கொண்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அனைத்துத் துறைகளின் வல்லுநர்களும், பல்வேறு பங்குதாரர்களும் இந்த இணையவழிக் கருத்தரங்கை வெற்றிகரமாகவும், செயல்திறன் வாய்ந்ததாகவும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற தமது நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார்.

 

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை, உள்கட்டமைப்பிற்கு புதிய ஆற்றலை வழங்கும் என்று பிரதமர் கூறினார். நிதிநிலை அறிக்கை மற்றும் அதன் உத்திகள் குறித்து நிபுணர்களும், முன்னணி ஊடக நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். 2013-14 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் மூலதன செலவு 5 மடங்கு அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 110 லட்சம் கோடியை முதலீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்து அதனை நோக்கி பயணிப்பதாகக் கூறினார். “ஒவ்வொரு பங்குதாரரும் புதிய பொறுப்புகள், புதிய வாய்ப்புகள் மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான தருணம், இது”, என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 

“எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, முன்னேற்றத்துடன், நிலையான வளர்ச்சியை எந்த ஒரு நாடும் அடைவதற்கு உள்கட்டமைப்பிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது”, என்று பிரதமர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்புடன் தொடர்புடைய வரலாறு குறித்த ஞானம் பெற்றிருப்பவர்களுக்கு இந்தக் கூற்று நன்கு தெரியும் என்று அவர் கூறினார். சந்திர குப்த  மவுரியாவால் தொடங்கப்பட்டு, அதைத்தொடர்ந்து அசோகரால் முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் ஷேர் ஷா சூரியால் தரம் உயர்த்தப்பட்ட உத்தராபாத்தின் கட்டமைப்பை அவர் உதாரணமாகக் கூறினார். ஆங்கிலேயர்கள்தான் அதனை ஜி.டி சாலை என்று மாற்றியதாக அவர் தெரிவித்தார். “நெடுஞ்சாலைகளின் முக்கியத்துவம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது”, என்றார் அவர். ஆற்றங்கரைகள் மற்றும் நீர்வழிகளைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், நீர் வழியாக கொல்கத்தாவுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள பனாரஸ் படித்துறைகளை உதாரணமாக சுட்டிக் காட்டினார். இன்னும் பயன்பாட்டில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் கல்லணை அணையையும் அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

 

முந்தைய அரசுகளின் காலகட்டத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு தடையாக இருந்த விஷயங்களை எடுத்துரைத்த பிரதமர், வறுமையே அறம் என்ற மனநிலை இருந்து வந்ததை அடிக்கோடிட்டு கூறினார். தற்போதைய அரசு, இந்த மனப்பான்மையை ஒழிப்பதில் வெற்றி பெற்றிருப்பது மட்டுமல்லாமல், நவீன உள்கட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவில் முதலீடுகளையும் செய்துள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார்.

 

இந்த நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கிய பிரதமர், கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததை விட தேசிய நெடுஞ்சாலைகளின் சராசரி கட்டமைப்பு தற்போது சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார். அதேபோல 2014-க்கு முன்பு 600 கிலோ மீட்டர் ரயில் வழிப்பாதை மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தது என்றும், தற்போது ஆண்டு ஒன்றுக்கு 4000 கிலோ மீட்டராக உள்ளது என்றும் தெரிவித்தார். விமான நிலையங்களின் எண்ணிக்கை, துறைமுகங்களின் திறனும் தற்போது இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

"உள்கட்டமைப்பு மேம்பாடு நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாகும்" இந்தப் பாதையைப் பின்பற்றுவதன் மூலம் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு இந்தியா என்ற இலக்கை அடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். "இப்போது நாம் நமது வேகத்தை மேம்படுத்தி உயர் வேகத்தில் செல்ல வேண்டும்" என்றும் அவர் கூறினார். பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் என்பது பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டத்தை வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமானக் கருவி என்று குறிப்பிட்ட பிரதமர்,

"விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம்" இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் அதன் பன்முகத் திட்ட செயல்பாடுகளின் தோற்றத்தையே மாற்றப் போகிறது" என்றார்.

பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் முடிவுகள் வெளிப்படையாகத் தெரிய இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

"திட்ட செயல்பாடுகளின் செயல்திறனை பாதிக்கும் இடைவெளிகளை நாம் கண்டறிந்துள்ளோம். அதனால்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 100 முக்கியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 75,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. "தரம் மற்றும் பலதரப்பட்ட உள்கட்டமைப்புகளுடன் திட்ட செயல்பாடுகளின் செலவு குறையப் போகிறது. வரும் நாட்களில் மேலும் குறைக்க வேண்டும். இது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் நமது தயாரிப்புகளின் திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி துறையுடன் எளிதாக வாழ்வது மற்றும் எளிதாக வணிகம் செய்வது ஆகியவற்றில் நிறைய முன்னேற்றம் ஏற்படும்" என்றும் அவர் மேலும் கூறினார். இதில்  தனியார் துறையின் பங்கேற்புக்கும் அழைப்பு விடுத்தார்.

மாநிலங்களின் பங்கை விவரித்த பிரதமர், வட்டியில்லாக் கடன்களை 50 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்தும், இதற்கான பட்ஜெட் செலவினம் 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறித்தும் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பல்வேறு பொருட்கள் தேவைப்படுவதால் பங்கேற்பாளர்கள் தங்கள் துறைகளின் தேவைகளுக்கு முன்னறிவிப்புக்கான முறையை உருவாக்க வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். "எதிர்காலத்திற்கான திட்ட வரைபடம் தெளிவாக இருக்கும் வகையில் நமக்கு ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம்  இதில் பெரும் பங்கு வகிக்கிறது. "சுழல் பொருளாதாரம் என்ற கருத்தை, பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கட்ச் நிலநடுக்கத்திற்குப் பிறகான தனது அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மீட்புப் பணிகளுக்குப் பிறகு கட்ச் வளர்ச்சிக்கு முற்றிலும் புதிய அணுகுமுறை எவ்வாறு பின்பற்றப்பட்டது என்பதை விளக்கினார். இப்பகுதியில் அரசியல் ரீதியாக விரைவான திருத்தங்கள் என்பதற்கு மாற்றாக உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அதன்  அடிப்படையிலான வளர்ச்சி என்ற முறையைக் கையாண்டோம். இதனால் அந்தப் பகுதி பொருளாதார நடவடிக்கைகளின் துடிப்பான மையமாக மாற்றப்பட்டது என்றும் கூறினார்.

சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஒரு வலுவான சமூக உள்கட்டமைப்பு தேசத்திற்கு சேவை செய்ய முன்வரும் திறமையான இளைஞர்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இலக்கை அடைய திறன் மேம்பாடு, திட்ட மேலாண்மை, நிதித் திறன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறு மற்றும் பெரிய தொழில்களுக்கு உதவும் அதே வேளையில் நாட்டின் மனித வளக் குழுவிற்கும் பயனளிக்கும் திறன் முன்னறிவிப்புக்கான முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். அரசாங்கங்களில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் இந்த திசையில் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட பிரதமர், அவை தேசத்தின் வளர்ச்சிக்கு மட்டும் பங்களிக்காமல் இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்திற்கும் வேகத்தை அளிக்கின்றன என்றும் விரிவாக எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ரயில், சாலை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக விவசாயிகளின் விளைபொருட்களை கிராமங்களில் சேமித்து வைப்பதற்காக மிகப்பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். நகரங்கள் மற்றும் கிராமங்களில் உருவாக்கப்பட்ட ஆரோக்கிய மையங்கள் புதிய ரயில் நிலையங்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடுகள் வழங்கப்படுவதற்கான உதாரணங்களையும் அவர் கூறினார்.

 உரையின் நிறைவாக, அனைத்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

***

AP/RB/CJL/DL



(Release ID: 1904169) Visitor Counter : 465