வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொண்டு உலகளாவிய சிறந்த அடையாளத்தை உருவாக்கும் வகையில் தேயிலைத் தொழில்துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
Posted On:
02 MAR 2023 1:15PM by PIB Chennai
வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொண்டு உலகளாவிய சிறந்த அடையாளத்தை உருவாக்கும் வகையில் தேயிலைத் தொழில்துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேயிலை உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியா, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னிறைவு பெற்றுத் திகழ்வதுடன், ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. தேயிலை ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது.
இந்தியத் தேயிலை தொழில்துறை 11 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன் ஏராளமானோருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்தியத் தேயிலை உற்பத்தியில் சிறு உற்பத்தியாளர்களின் பங்கு 52 சதவீதமாக உள்ளது. தற்போது நாட்டில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இந்தப் பிரிவினரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:
- தேயிலை வாரியத்தின் மூலம் மத்திய அரசு 352 சுய உதவிக் குழுக்கள், 440 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 17 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது.
- சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் மேலாண்மை தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
- இயந்திரங்கள் மூலமான அறுவடைக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
- சிறு தேயிலை விவாசயிகள், தேயிலை தொடர்பான சிறிய நிறுவனங்களை தொடங்கி அவர்களைத் தொழில் முனைவோராக்க உதவிகள் வழங்கப்படுகின்றன.
- இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை சிறு தேயிலை விவசாயிகள் 2845 பேருக்கு வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தொழில்துறையை ஊக்குவிக்க கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
- தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வாங்குவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இடையேயான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
- இந்திய தேயிலைகளை ஊக்குவிக்க ஊடகப் பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
டார்ஜிலிங் தேயிலை நாட்டின் முதல் புவிசார் குறியீடு பெற்ற தேயிலையாக விளங்குகிறது. டார்ஜிலிங் மாவட்டத்தில் 87 தேயிலைத் தோட்டங்களில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி 6 முதல் 7 மில்லியன் கிலோகிராமாக உள்ளது. டார்ஜிலிங் தேயிலை உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தேயிலை வாரியமும் வர்த்தக அமைச்சகமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
ஒட்டு மொத்தத்தில் தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்காக தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புத் திட்டத்தில் மேலும் சில திருத்தங்களுக்கு தேயிலை வாரியம் பரிந்துரைத்துள்ளது.
***
AP/PLM/SG/KG
(Release ID: 1903642)
Visitor Counter : 151