சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அண்மையில் தொடங்கப்பட்ட பெருந்தொற்று நிதியம் தொடர்பான வழிகாட்டுதல் கருத்தரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது
Posted On:
02 MAR 2023 10:30AM by PIB Chennai
அண்மையில் தொடங்கப்பட்ட பெருந்தொற்று நிதியம் தொடர்பான வழிகாட்டுதல் கருத்தரங்கை புதுதில்லியில் மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன், பெருந்தொற்று நிதியத்தின் செயலாளர் திருமதி.பிரியா பாசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திரு.ராஜேஷ் பூஷன், உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு அவசியம் என்று வலியுறுத்தினார். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இவற்றை பகிர வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். நோய் கண்காணிப்பு மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய சுகாதார அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவின், ஆரோக்கிய சேது செயலி உள்ளிட்டவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் பேசிய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் திரு.லாவ் அகர்வால், பெருந்தொற்று நிதியத்தின் செயல்பாடுகள் இந்தியாவின் ஜி20 சுகாதார முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைப்புத் தளம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்தரங்கில் உரையாற்றிய பெருந்தொற்று நிதியத்தின் செயல் தலைவர் திருமதி.பிரியா பாசு, இந்த நிதியத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னுரிமை திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நோய்த் தடுப்பு மையம் ஆகியவற்றின் அதிகாரிகள், நோய் கண்காணிப்பு மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார்.
***
AD/PLM/SG/GK
(Release ID: 1903576)
Visitor Counter : 194