பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிதாக்குதல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

அதிகம் தேவைப்படும் இடங்களில் அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகளால் ஆக்கப்பூர்வமான தாக்கம் தெளிவாகத் தெரிகிறது

தற்போது அரசை ஒருதடையாக மக்கள் பார்ப்பதில்லை: மாறாக நமது அரசை வாய்ப்புகளுக்கான ஊக்கசக்தியாக மக்கள் பார்க்கின்றனர். இதில் தொழில்நுட்பம் பெரிய பங்காற்றியுள்ளது

மக்கள் தங்களது பார்வைகளை எளிதில் அரசுக்கு வெளிப்படுத்த முடிவதுடன் தீர்வுகளையும் உடனடியாகப் பெறுகிறார்கள்

இந்த அரசு நவீன டிஜிட்டல் கட்டமைப்புகளை நாட்டில் உருவாக்குவதோடு டிஜிட்டல் புரட்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்கிறது

செயற்கை நுண்ணறிவால் தீர்வுகாணக் கூடிய 10 சமூக சிக்கல்களை நாம் அடையாளம் காணவேண்டும்

அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கை குறைந்தால் அடிமைத்தன மனநிலைக்கு வழி வகுக்கும்

உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டு சமூகத்துடனான நம்பிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்

Posted On: 28 FEB 2023 11:08AM by PIB Chennai

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிதாக்குதல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறன்பட அமல்படுத்துவது குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கோரும் வகையில் அரசால் நடத்தப்படும்  பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளில், 5-வது  கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர  மோடி இன்று உரையாற்றினார்.    

இணையவழியில் பேசிய பிரதமர், 21-ம் நூற்றாண்டில் இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  பொதுமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பட்ஜெட்டும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களின் வாழ்வை எளிதாக்கும் வகையிலான அம்சங்களைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கும் மனித தலையீட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முந்தைய அரசுகள் முன்னுரிமை அளித்த அம்சங்களில் முரண்பாடுகள் இருந்ததாகக் கூறிய பிரதமர், குறிப்பிட்ட பிரிவினர் அரசை எப்போதும் எதிர்பார்த்து  இருந்ததாகத் தெரிவித்தார். அவர்களது வாழ்க்கை முழுவதும் நவீன வசதிகள் விடுபட்டு போனதாகவும், பிரதமர் கூறினார். முன்னேற விரும்பிய மற்றொரு பிரிவினர், முந்தைய அரசுகளின் அழுத்தம் மற்றும் தடைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.  தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், தேவைப்படும் இடங்களில் அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள்  நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவை வாழ்வை எளிதாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். அரசின் தலையீடுகள் தற்போது குறைந்துள்ளதாகவும்  பொதுமக்கள் அரசை தடையாக நினைப்பதில்லை என்றும் அவர் கூறினார். மாறாக மக்கள் அரசை தற்போது ஒரு ஊக்கசக்தியாகப் பார்ப்பதாகவும், இதில் தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்காற்றுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தின் பங்கை விரிவாக எடுத்துரைத்த பிரதமர் பல்வேறு உதாரணங்களையும் தெரிவித்தார்.  “ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை”, ஜன் தன், ஆதார் மொபைல், ஆரோக்கிய சேது மற்றும் கொவின் செயலி, ரயில் முன்பதிவு, இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை உதாரணமாக அவர் கூறினார்.  இவற்றின் மூலம் மக்களின் வாழ்வை அரசு எளிதாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசுடனான மக்களின் தகவல் தொடர்பு தற்போது எளிதாகியிருப்பது குறித்து குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வைப் பெறுவதாகக் கூறினார். வருமான வரி நடைமுறைகளில், முக அடையாளம் அற்ற குறைதீர்ப்பு நடைமுறைகளை உதாரணமாக அவர் குறிப்பிட்டார். பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிந்தித்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு உலகளாவிய தரத்தை எட்டும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு முன்னேற்றமாக அரசுடனான மக்கள் தொடர்பு அதிகம் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து தொடர்பு நடைமுறைகளை மேலும் எளிதாக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

கர்மயோகி இயக்கம் குறித்துப் பேசிய அவர், அரசு ஊழியர்கள் மேலும் மக்கள் நலனை மையமாகக் கொண்டவர்களாக  மாறும் வகையில், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றார். பயிற்சி முறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றார். பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில், பின்னூட்டக் கருத்துக்களை எளிதில் தெரிவிக்கும் வகையிலான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.

சமவாய்ப்புகள் குறித்து குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பத்தின் பயன்கள், அனைவரையும் சென்றடைவதாகக் கூறினார். தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காக அரசு மிகப் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன் இவற்றின் பலன்கள் அனைவருக்கும் சமஅளவில் சென்றடைவதை அரசு உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு மின்சந்தை (GeM) இணையதளம் குறித்து குறிப்பிட்ட அவர், இதன் மூலம் சாதாரண  தொழில் நடத்துவோரும், சாலையோர வியாபாரிகளும் அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும் என்றும் கூறினார். அதே போல் இ-நாம்  தளம் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை விவசாயிகளுடன் இணைப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

5-ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை, மருத்துவம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் மிகப் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். சில இலக்குகளை நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகள் மற்றும் சாதாரண மக்களின் நலன்களில் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சமூகத்தில் தீர்க்கக் கூடிய 10 சிக்கல்களை அடையாளம் காணவேண்டும் என்று அவர் கூறினார்.

அரசின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்த உதாரணங்களை எடுத்துரைத்த அவர், டிஜிலாக்கர் சேவை மூலம், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறையினர் தங்களது ஆவணங்களை இதில் சேமித்து வைத்து அவற்றை அரசுக்குப் பகிர முடியும் என்றார். இந்த சேவைகளை   விரிவாக்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், இதனால் மேலும் பலர் பயனடைவார்கள் என்றார்.

கடந்த சில ஆண்டுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள தடைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில் துறை சொற்களில் நேரத்தை மதிப்பு மிக்க செல்வம் என்று குறிப்பிடலாம் என்று அவர் தெரிவித்தார். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது என்று கூறினார். தேவையற்ற சுமைகள் குறித்த பட்டியலைத் தயாரிக்க இது சரியான நேரம் என்று கூறிய அவர், 40,000-க்கும்மேற்பட்ட சுமைகளுக்கு  அரசு  கடந்த காலத்தில் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கூறினார்.

அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கைக் குறைந்தால் அடிமைத்தன மனநிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். சிறு குற்றங்களை, குற்றங்களாகக் கருதாத நடைமுறை,  குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் போன்றவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை இந்த அரசு வென்றுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில், சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து அனுபவங்களை அதிகம் பெற்று அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து குறிப்பிட்ட அவர், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு   தொழில்நுட்பம் உதவிகரமாக அமையும் என்றார்.  டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்துடன் மட்டும் தங்களை சுருக்கிக் கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.  பட்ஜெட் அல்லது அரசின் பிற கொள்கைகளின் வெற்றி அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  இந்தியாவின் அறிவார்ந்த இளைஞர்கள், திறன் வாய்ந்த மனித வளம், ஆகியவைக் குறித்து குறிப்பிட்ட பிரதமர் கிராமங்களில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை  ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பட்ஜெட்டிலிருந்து எவ்வளவு முடியுமோ  அவ்வளவு அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டு தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID:1902948)

AP/PLM/KPG/KRS


(Release ID: 1903054) Visitor Counter : 169