பிரதமர் அலுவலகம்

ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகையின்போது நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 FEB 2023 2:24PM by PIB Chennai

பெருமதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் ஸ்கோல்ஸ் அவர்களே,

இரு நாட்டு பிரதிநிதிகளே,

ஊடகவியலாளர்களே,

மதிய வணக்கம்!

வாழ்த்துகள்!

இந்தியாவிற்கு வந்துள்ள எனது நண்பர் ஜெர்மனி பிரதமர் திரு ஸ்கோல்ஸ் மற்றும் அவருடன் வந்துள்ள தூதுக்குழுவை வரவேற்கிறேன். ஜெர்மனி பிரதமர் திரு ஸ்கோல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார்.  ஹாம்பர்க் நகரின் மேயராக 2012-ம் ஆண்டில் அவர் மேற்கொண்ட பயணம், இந்தியாவிற்கு வந்த அவரது முதல் பயணமாகும். இந்திய-ஜெர்மன் உறவுகளின் திறனை அவர் நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்துகொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

கடந்த ஆண்டு நாங்கள் மூன்று முறை சந்தித்தோம். ஒவ்வொரு முறையும், அவரது, தொலைநோக்குப் பார்வையும் முன்னோக்கிய சிந்தனையும் நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய வேகத்தையும் ஆற்றலையும் அளித்தது. இன்றைய சந்திப்பிலும் அனைத்து முக்கிய இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக நாங்கள் விவாதித்தோம்.

 

நண்பர்களே,

 

இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான உறவுகள், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பரஸ்பரம் இருதரப்பு நலன்களைப் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையிலானவை. இரு நாடுகளும் தங்களுக்கு இடையே கலாச்சார மற்றும் பொருளாதார பரிமாற்றங்களில் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளன. உலகின் இரண்டு பெரிய ஜனநாயகப் பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பானது, இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய பதற்றம் நிறைந்த உலகில் ஒரு நேர்மறையான தகவலையும் வெளிப்படுத்துகிறது.

 

ஐரோப்பாவில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டு நாடாக ஜெர்மனி இருப்பதுடன், ஜெர்மனியும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. இன்று, மேக் இன் இந்தியா (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) மற்றும் ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா) இயக்கங்களால் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. இந்த வாய்ப்புகளில் ஜெர்மனி காட்டும் ஆர்வம் நமக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

 

ஜெர்மனி பிரதமர் திரு ஸ்கோல்ஸ்-சுடன் வந்த வர்த்தக குழுவினர், இந்திய தொழில் துறையினருடன் இன்று வெற்றிகரமான சந்திப்பை நடத்தியதுடன், சில நல்ல, முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. டிஜிட்டல் மாற்றம், நிதித் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் பன்முக விநியோகச் சங்கிலி போன்றவற்றில், இரு நாடுகளின் தொழில்துறைத் தலைவர்களிடமிருந்து பயனுள்ள கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் பெற்றோம்.

 

நண்பர்களே,

மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சிக்காக இந்தியாவும் ஜெர்மனியும் முக்கோண வளர்ச்சி ஒத்துழைப்பின் அடிப்படையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள் உறவும் வலுப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் கையெழுத்திடப்பட்ட இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்துக் கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தத்தின் மூலம் இந்த உறவு மேலும் ஆழமாகும்.

 

மாறிவரும் காலத்தின் தேவைக்கேற்ப, நமது உறவுகளில் புதிய மற்றும் நவீன அம்சங்களையும் இணைத்து வருகிறோம். கடந்த ஆண்டு ஜெர்மனிக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, ​​பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கூட்டு செயல்பாட்டை நாங்கள் அறிவித்திருந்தோம். இதன் மூலம், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள் போன்ற துறைகளிலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

 

நண்பர்களே,

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு, இருநாடுகளுக்கு இடையேயான உத்திசார் கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத் தூணாக அமையும். இந்தப் பிரிவில் பயன்படுத்தப்படாத திறன்களை முழுமையாக உணர்வதற்கான முயற்சிகளை நாங்கள் ஒன்றாக இணைந்து தொடர்ந்து மேற்கொள்வோம். பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையே ஆழ்ந்த ஒத்துழைப்பு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

 

நண்பர்களே,

கொவிட் தொற்று பாதிப்பு மற்றும் உக்ரைன் மோதலின் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ளன. குறிப்பாக, இவை வளரும் நாடுகளில்  எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து பகிரங்கமாகக் கவலையைப் பகிர்ந்து கொண்டோம். கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளோம். ஜி 20 தலைமைப் பொறுப்பில் இந்தியா உள்ளபோதும், நாம் இதை வலியுறுத்தி வருகிறோம்.

 

 

உக்ரைனில் சிக்கல்கள் தொடங்கியதில் இருந்தே, பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியாக இந்த சர்ச்சையைத் தீர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. எந்தவொரு அமைதி நடவடிக்கையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது. உலகளாவிய எதார்த்தங்களைச் சிறந்த முறையில் பிரதிபலிக்க பலதரப்பு நிறுவனங்களில் சீர்திருத்தம் அவசியம் என்பதையும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, ஜி 4 அமைப்புக்குள் இருநாடுகளும் தீவிரமாக பங்கேற்பதில் இருந்து இது தெளிவாகிறது.

 

பெரு மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,

இந்திய மக்கள் அனைவரது சார்பாக, உங்களையும் உங்கள் குழுவையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கிறேன். இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பை மீண்டும் நாங்கள் பெறுவோம். உங்களின் இந்திய வருகைக்கும் இன்றைய பயனுள்ள பேச்சுவார்த்தைக்கும் மிக்க நன்றி.

 

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் பேசிய கருத்துகளின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

 

***

SRI / PLM / DL



(Release ID: 1902401) Visitor Counter : 178