ஜவுளித்துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியாவின் முன்னெடுப்பு நடவடிக்கையாக உள்நாட்டு சணல் உற்பத்திக்கு ஆதரவு அளிக்க மத்திய அரசு முடிவு

Posted On: 22 FEB 2023 4:54PM by PIB Chennai

சணல் ஆண்டு 2022-23-ல் அரிசி மற்றும் கோதுமைக்கான பயன்பாட்டுக்கு முழுக்க முழுக்க சணல் பைகளைப் பயன்படுத்த வேண்டியதைக் கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, உணவு தானியங்களுக்கான பைகள் அனைத்திற்கும் சணல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் சர்க்கரைக்கான பயன்பாட்டில் 20 சதவீதம் சணல் பைகள் பயன்படுத்த வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.  குறிப்பாக மேற்கு வங்கத்தின்  சணல் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவு, பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா சணல் துறைக்கு உதவிகரமாக இருக்கும். 

 இந்தியப் பொருளாதாரத்தில் சணல் தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இயங்கும் 75 சணல் ஆலைகள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக சணல் துறையில் மட்டும் 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் நம்பியிருக்கின்றன.

 சணல் பேக்கேஜிங் விதியின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகள் மூலம் 3.70 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதுடன், சணல் துறையில் உள்ள 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன.  இந்த விதியின்படி, சணல் தொழிற்சாலைகளின் 75 சதவீத உற்பத்தி, சணல் சாக்குப்பைகளாக மாற்றப்படுவதாகவும், இவற்றில் 85 சதவீத சாக்குப் பைகள்  இந்திய உணவுக்கழகத்திற்கும், மற்றும் மாநில கொள்முதல் ஏஜென்சிகளுக்கும் வழங்கப்படுகின்றன.  எஞ்சியவை ஏற்றுமதிக்கோ அல்லது நேரடி விற்பனைக்கோ பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 ஆயிரம் கோடி மதிப்பிலான சணல் சாக்குப்பைகள் உணவு தானியங்களைப்  பேக்கிங்  செய்வதற்காக மத்திய அரசு சார்பில் வாங்கப்படுகிறது.  இதன் மூலம் சணல் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளுக்கான சந்தையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

***

AP/ES/AG/KRS



(Release ID: 1901470) Visitor Counter : 167