பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரம்ம குமாரிகளின் நீர்-மக்கள் திட்டத்தைக் காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 16 FEB 2023 2:22PM by PIB Chennai

பிரம்ம குமாரிகள் அமைப்பின் பிரமுக் ராஜ்யோகினி தாதி ரட்டன் மோகினி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, பிரம்மா குருமாரிகள் அமைப்பின் உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே அன்பர்களே!

உலகம் முழுவதும் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள வேளையில் நீர்-மக்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அருகி வரும் நீர் வளங்களின் முக்கியத்துவத்தை 21-வது நூற்றாண்டில் உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. அதிக மக்கள் தொகையின் காரணமாக தண்ணீர் பாதுகாப்பு இந்தியாவிற்கும் முக்கிய பொறுப்பாக அமைகிறது. அதனால்தான் இந்த விடுதலையின் அமிர்த பெருவிழா காலத்தில் இந்தியா நீரை எதிர்காலமாகக் கருதுகிறது. எனவே நாம் அனைவரும் இணைந்து தண்ணீர் பாதுகாப்பிற்கான முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும். தண்ணீர் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மேற்கொள்வது திருப்தி அளிக்கிறது. பொதுமக்களின் பங்களிப்புடனான இந்த முயற்சிக்கு பிரம்ம குமாரிகளின் நீர்-மக்கள் திட்டம் புதிய ஆற்றலை அளிக்கும்.

நண்பர்களே,

நீர் மாசடைவதை தடுக்க வேண்டும். நமாமி கங்கை திட்டத்தினால் கங்கை நதி மட்டுமல்லாது அதன் கிளை நதிகளும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. கங்கையின் கரையோரங்களில் இயற்கை விவசாயம் போன்ற பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளன. இத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

நீர் மாசைப் போன்று நிலத்தடி நீர் குறைவதும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மழை நீர் சேமிப்புத் தொடங்கப்பட்டு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அடல் புஜல் திட்டத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளிலும் தண்ணீர் பாதுகாப்பு ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை அமைக்கும் திட்டம்  முக்கிய முயற்சியாகும்.

நீர் குழுக்கள் வாயிலாக ஜல்ஜீவன் இயக்கம் போன்ற முக்கிய திட்டங்களை கிராமப்புற பெண்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.  தண்ணீர் பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் சம்மந்தமான விஷயங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வேளாண்மையில் சம அளவில் தண்ணீரைப் பயன்படுத்தப்படுவதற்காக சொட்டு நீர்ப் பாசனம் போன்ற தொழில்முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

நீர்-மக்கள் திட்டம் நமது கூட்டு முயற்சிகளை வெற்றி அடையச் செய்யும் என்றும், சிறந்த எதிர்காலத்திற்கு மேம்பட்ட இந்தியாவை நாம் உருவாக்குவோம் என்றும் நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகள். ஓம் சாந்தி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

(Release ID: 1899779)

VL/BR/RR


(Release ID: 1900072) Visitor Counter : 181