பாதுகாப்பு அமைச்சகம்
2023-24-ம் நிதியாண்டில் பாதுகாப்பு மூலதனக் கொள்முதல் பட்ஜெட்டில் 75 சதவீதம் உள்நாட்டு தொழில்துறைக்கு ஒதுக்கீடு, 14-வது ஏரோ இந்தியா கண்காட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு
Posted On:
15 FEB 2023 1:56PM by PIB Chennai
2023-24-ம் நிதியாண்டில் பாதுகாப்பு மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 75 சதவீதம் (தோராயமாக ரூ.1 லட்சம் கோடி) உள்நாட்டு தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று 14-வது ஏரோ இந்தியா கண்காட்சியின் பந்தன் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது 2022-23 ஆண்டைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த பட்ஜெட்டில் (ரூ.45.03 லட்சம் கோடி) 13.18 சதவீதமாகும். நவீன மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.1.63 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அமிர்த காலத்தில் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் மத்திய அரசின் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார். “நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அரசு பத்து அடிகள் முன்னேற உறுதி மேற்கொள்கிறது. வளர்ச்சிப்பாதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு முழு வானத்தையே வழங்குகின்றோம். மூலதனக் கொள்முதல் பட்ஜெட்டின் மூன்றில் ஒரு பகுதியை உள்ளூர் தொழிலுக்கு வழங்குவது இந்த திசையை நோக்கிய நடவடிக்கையாகும்” என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய தொழில்துறை அதிக உற்சாகத்துடன் பாதுகாப்புத் துறையில் பங்கேற்று முன்னேற்றம் அடைய முன்வர வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். வலுவான, தற்சார்பான பாதுகாப்புத் தொழில் நாட்டின் பாதுகாப்பு நடைமுறையை வலுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் என அவர் கருத்து தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு தொழிலுக்கு ஏற்ற சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் முழுமையான வளர்ச்சி அடைய, பிரதமர் திரு நரேந்திர மோடியின் “மேக் இன் இந்தியா, மேக் பார் த வேர்ல்டு” தொலைநோக்கிற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பந்தன் நிகழ்ச்சியில், ரூ.80,000 கோடி மதிப்பிலான 266 கூட்டு முயற்சிகள், 201 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 53 பெரிய அறிவிப்புகள், 9 உற்பத்தி தொடக்கம், 3 தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கர்நாடக மாநிலம் தொடர்ந்து பங்களித்து வரும் சில வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். ஏரோ இந்தியா கண்காட்சியை நடத்த கர்நாடக மாநிலத்தை விட சிறந்த இடம் வேறு ஏதும் இல்லை என்று கூறிய அவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உற்பத்தி சூழல் நிலவுவதால் உள்ளூர் தொழில்களை மட்டுமல்லாமல் சர்வதேச தொழில்களையும் இது ஈர்க்கிறது என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, முப்படைத் தளபதி ஜென்ரல் அனில் சௌஹான், விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் வி ஆர் சௌத்ரி, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிக்குமார், ராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை செயலர் திரு கிரிதர் அரமானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899388
***
AP/PKV/AG/PK
(Release ID: 1899432)
Visitor Counter : 198