விவசாயத்துறை அமைச்சகம்
இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் வேளாண் பணிக் குழுவின் முதலாவது வேளாண் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்த இந்தூர் தயாராக உள்ளது
Posted On:
12 FEB 2023 3:04PM by PIB Chennai
முதலாவது ஜி 20 வேளாண் பிரதிநிதிகளின் மூன்று நாள் கூட்டம், இந்தூரில் 2023 பிப்ரவரி 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜி 20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் நூறு பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று நாள் கூட்டத்தில் முதல் நாளில் கண்காட்சியை மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தொடங்கி வைக்கிறார். சிறுதானியம் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுடன் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை தொடர்பான அரங்குகள் இந்த கண்காட்சியில் முக்கிய இடம்பெறுகிறது.
விவசாயப் பணிக்குழுவின் முதலாவது பிரதிநிதிகள் கூட்டத்தின் போது, விவசாயம் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க இரண்டு துணை நிகழ்வுகள் முதல் நாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் உரை இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடையே பொது விவாதம் நடைபெறும்.
மூன்றாம் நாளில் வேளாண் பணிக்குழுவின் முக்கியக் கொள்கைகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பைக் கொண்ட ஒரு தொழில்நுட்ப அமர்வாக இது இருக்கும்.
நிகழ்ச்சியின்போது, ஜி 20 பிரதிநிதிகள் ராஜ்வாடா அரண்மனைக்கு பாரம்பரிய பயணம் மேற்கொள்வதுடன் மண்டு கோட்டைக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இதன் மூலம் வளமான இந்திய வரலாற்றை அவர்கள் தெரிந்து கொள்ள இயலும். விருந்துகள், கலாச்சார நிகழ்ச்சிகள், இந்திய உணவு போன்றவை இந்திய கலாசாரத்தின் சாரத்தை அவர்களுக்கு வழங்கும்.
***
AP / PLM / DL
(Release ID: 1898525)