பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்


கொண்டாட்டங்களுக்கான நினைவுச் சின்னத்தையும் வெளியிட்டார்

"மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது"

"மதம் தொடர்பாக பொய்யாகக் கூறப்பட்ட கருத்துகளை, மதத்தின் ஒளியாலேயே சுவாமிஜி அகற்றினார்"

"சுவாமி அவர்கள் சமுதாயத்தில் வேதங்களின் ஒளியை உயிர்ப்பித்தார்"

"அமுத காலத்தில், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் புனிதத்துவத்தின் உத்வேகமாக வந்துள்ளது"

"இன்று நாடு நம்பிக்கையுடன் நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்ள அழைக்கிறது"

"மதம் தொடர்பான நம்முடைய முதல் விளக்கம் கடமை பற்றியது"

"ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான சேவையே இன்று நாட்டுக்கான முதல் யாகமாக உள்ளது"

Posted On: 12 FEB 2023 1:19PM by PIB Chennai

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் நினைவு இலச்சினை சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்விடத்திற்கு வந்ததும், ஆர்ய சமாஜத்தின் இடங்கள் மற்றும் அங்கு நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகளைக் கடந்து பிரதமர் நடந்து சென்று, யாகத்தில் ஆஹுதி அர்ப்பணத்தையும் செய்தார். பின்னர், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரப்பி வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியில் தீபம் ஏற்றுவதன் அடையாளமாக எல்இடி விளக்கு தீபத்தை இளைஞர் பிரதிநிதிகளிடம் பிரதமர் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் விழா வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் இது முழு உலகிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கும் ஒரு சந்தர்ப்பமாகும் எனவும் தெரிவித்தார்.  உலகத்தைச் சிறந்த இடமாக மாற்றும் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் லட்சியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், முரண்பாடு, வன்முறை மற்றும் உறுதியற்ற இந்த காலகட்டத்தில், மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை நம்பிக்கை அளிக்கிறது என்றார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளைக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த விழா இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் என்றும் பிரதமர் கூறினார். மனிதகுலத்தின் நலனுக்கான நடைமுறையாக யாகத்தில் ஆஹுதி அர்ப்பணத்தை பிரதமர் வழங்கினார். இதற்கான வாய்ப்புக் கிடைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சுவாமி அவர்கள் பிறந்த அதே மண்ணில் பிறந்தது தமது அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்ட பிரதமர், மகரிஷி தயானந்தரின்  லட்சியங்களால் தமது வாழ்க்கை  தொடர்ந்து  ஈர்க்கப்படுவதாக  எடுத்துரைத்தார்.

தயானந்த சரஸ்வதி  அவர்கள் பிறந்தபோது இருந்த இந்தியாவின் நிலையை நினைவுகூர்ந்த பிரதமர், பல  நூற்றாண்டுகளாக  அடிமையாக  இருந்த நாடு சிதைந்து  பலவீனமடைந்து, அதன் ஒளி மற்றும் தன்னம்பிக்கையை அப்போது இழந்து வந்தது எனக் கூறினார். இந்தியாவின் லட்சியங்கள், கலாச்சாரம் மற்றும் வேர்களை நசுக்க மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளையும் பிரதமர்  நினைவு  கூர்ந்தார். இந்தியாவின் மரபுகள் மற்றும் புனித நூல்களின் உண்மையான அர்த்தம் மறக்கப்பட்டுவிட்டதை சுவாமி தயானந்த சரஸ்வதி  சுட்டிக்காட்டினார்  என பிரதமர் தெரிவித்தார். இந்தியாவை இழிவுபடுத்துவதற்கு வேதங்கள் மீது தவறான விளக்கம் பயன்படுத்தப்பட்டு, பாரம்பரியங்கள் சிதைக்கப்பட்ட காலத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். அத்தகைய நேரத்தில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் முயற்சி ஒரு மீட்பராக வந்தது என அவர் குறிப்பிட்டார். மகரிஷி அவர்கள், பாகுபாடு மற்றும் தீண்டாமை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக ஒரு வலுவான பிரச்சாரத்தைத் தொடங்கியதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மகரிஷியின் முயற்சிகள் மகத்தான தன்மைகளைக் கொண்டது என அவர் கூறினார். அவர் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு எதிராக ஏற்பட்ட எதிர்வினைகளை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். மதத்தின் மீது பொய்யாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சுவாமி ஜி அவர்கள், மதத்தின் ஒளியாலேயே அகற்றினார் என்று பிரதமர் விளக்கினார். தீண்டாமைக்கு எதிரான சுவாமி அவர்களின் போராட்டத்தை மிகப்பெரிய பங்களிப்பாக கருதுவதாக  மகாத்மா  காந்தி  கூறியதையும்  பிரதமர்  சுட்டிக்காட்டினார்.

பெண்கள் தொடர்பாக சமூகத்தில் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ள ஒரே மாதிரியான பிற்போக்குக் கருத்துக்களுக்கு எதிராக தர்க்கரீதியான மற்றும் பயனுள்ள மாற்றுக் குரலாக மகரிஷி தயானந்த சரஸ்வதி உருவெடுத்தார் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். மகரிஷி தயானந்தர் அவர்கள், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை கடுமையாக எதிர்த்தார் எனவும் 150 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் கல்விக்கான பிரச்சாரங்களை அவர் தொடங்கினார் என்றும் பிரதமர் தெரிவித்தார். இன்றைய காலத்திலும் கூட, பெண்களின் கல்வி மற்றும் மரியாதைக்கான உரிமையைப் பறிக்கும் சமூகங்கள் உள்ளதாக பிரதமர் கூறினார். ஆனால் பெண்களுக்கு சம உரிமை என்பது வெகு தொலைவில் இருந்த அந்தக் காலத்திலும்கூட அவர்களுக்காக குரல் எழுப்பியவர்  மகரிஷி  தயானந்தார்  என்று  பிரதமர்  கூறினார்.

மகரிஷி அவர்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளின் அசாதாரணத் தன்மையைப் பிரதமர் எடுத்துரைத்தார். ஆர்ய சமாஜத்தின் 150 ஆண்டுகளுக்குப் பிறகும், தயானந்த சரஸ்வதி பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் அவர் மீது கொண்டுள்ள மரியாதையும், ஆன்மீக உணர்வும் தேசத்தின் மீது அவர் முக்கிய கவனம் செலுத்தினார் என்பதற்கான அடையாளம் என்று பிரதமர் கூறினார். விடுதலையின் அமுத காலத்தில், மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா, புனிதத்துவத்தின் உத்வேகத்துடன் வந்துள்ளது  என்று அவர் மேலும் கூறினார்.

 

சுவாமி அவர்களின் போதனைகளை நாடு மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றுகிறது என்று திரு. நரேந்திர மோடி கூறினார். சுவாமி அவர்களின் 'வேதங்களுக்குத் திரும்புவோம்' என்ற அழைப்பைக் குறிப்பிட்ட பிரதமர், இன்று நாடு 'நமது பாரம்பரியத்தில் பெருமை' என்ற நம்பிக்கையுடன் மக்களை அழைப்பதாகக் கூறினார். நவீனத்துவத்தின் பாதையில் செல்லும் அதே வேளையில் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை செழிப்பாக்கி மேம்படுத்தும் இந்திய  மக்களின்  நம்பிக்கையையும் பிரதமர் குறிப்பிட்டார்.

சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டு, முழுமையான வாழ்க்கை முறையாக வரையறுக்கப்படும் மதம் பற்றிய விரிவான கருத்துகள் குறித்தும் பிரதமர் பேசினார். மதம் தொடர்பான நமது முதல் விளக்கம் கடமையைப் பற்றியது என்று பிரதமர் கூறினார். சுவாமி அவர்கள், ஒரு உள்ளடக்கிய மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை தேர்ந்தெடுத்து தேசத்தின் பல பரிமாணங்களின் பொறுப்பையும் தலைமையையும் ஏற்றுக்கொண்டதாகப் பிரதமர் கூறினார். தத்துவம், யோகா, கணிதம், கொள்கை, ராஜதந்திரம், அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல் ஆகிய துறைகளில் இந்திய ஞானிகளின் சாதனைகளைப் பிரதமர் குறிப்பிட்டார். இந்திய வாழ்க்கை முறை மேம்பாட்டில் ஞானிகள் மற்றும் துறவிகளின் பரந்த பங்களிப்பை பிரதமர் மேலும் விவரித்தார். அந்த பழமையான பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் சுவாமி தயானந்த சரஸ்வதி பெரும் பங்கு வகித்தார் என்று பிரதமர் கூறினார்.

மகரிஷி தயானந்தரின் போதனைகளை எடுத்துரைத்த பிரதமர், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உருவாக்கிய பல்வேறு அமைப்புகளையும் குறிப்பிட்டார். மகரிஷி ஒரு புரட்சிகர சித்தாந்தத்துடன் வாழ்ந்தாலும், தமது அனைத்து யோசனைகளையும் ஒழுங்குமுறையுடன் இணைத்து செயல்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். பல ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் பல்வேறு நலப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு பல்வேறு அமைப்புகளை அவர் நிறுவியதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். பரோப்காரிணி சபா என்பதை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த அமைப்பு மகரிஷி அவர்களால் நிறுவப்பட்டது என்றும், இன்று குருகுலங்கள் மற்றும் பதிப்பு வெளியீடுகள் மூலம் வேத மரபுகளை அது பரப்புகிறது என்றும் கூறினார். குருக்ஷேத்ரா குருகுலம், சுவாமி ஷ்ரத்தானந்த் அறக்கட்டளை மற்றும் மகரிஷி தயானந்த் அறக்கட்டளை ஆகியவற்றையும் பிரதமர் உதாரணங்களாகக் கூறினார். இந்த அமைப்புகளால் உருவாக்கப்பட்ட ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சமூக சேவை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஜீவன் பிரபாத் அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் பிரதமர்  எடுத்துரைத்தார். இந்த அமைப்பு மகரிஷி தயானந்த சரஸ்வதியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பாரபட்சமற்ற கொள்கைகள் மற்றும் முயற்சிகள் மூலம் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். இது சுவாமி அவர்களது முக்கிய கொள்கையாக இருந்தது என அவர் தெரிவித்தார். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான சேவையே இன்று நாட்டின் முதல் யாகமாக உள்ளது என அவர் கூறினார். வீட்டுவசதி, மருத்துவ சிகிச்சை மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பிரதமர் மேற்கோள் காட்டினார். புதிய கல்விக் கொள்கையானது சுவாமி அவர்களின் கருத்தின்படி இந்தியத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன கல்வியை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

அனைத்தையும் உணர்ந்தவர் என்ற சுவாமி அவர்களைப் பற்றிய வரையறையை பிரதமர் நினைவு கூர்ந்தார். வேதங்களின் அறிவை சுவாமி அவர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டார் என்று பிரதமர் கூறினார். மகரிஷி அவர்கள் வேதம் கற்றவர் மற்றும் ஞான மார்க்கத்தின் துறவி என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். நிலையான வளர்ச்சிக்கான வேட்கையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது என்றும் அவர் கூறினார். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கமான மிஷன் லைஃப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஜி 20 அமைப்பின் சிறப்பு கருத்தாக சுற்றுச்சூழல் முன்வைக்கப்படுகிறது என்றார். பழங்கால ஞானத்தின் அடித்தளத்துடன் நவீன லட்சியங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஆர்ய சமாஜ் மிகப்பெரிய பங்கை வகிக்க முடியும் என்று பிரதமர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஸ்ரீ அன்னா எனப்படும் சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

மகரிஷியின் ஆளுமையிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய பிரதமர், மகரிஷியை சந்திக்க வந்த ஆங்கிலேய அதிகாரி தொடர்பான ஒரு கதையை விவரித்தார். இந்தியாவில் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காக பிரார்த்தனை செய்யும்படி மகரிஷியிடம் அந்த அதிகாரி கேட்டதாகவும் அதற்கு மகரிஷி பயமின்றி “சுதந்திரம் எனது ஆன்மா மற்றும் இந்தியாவின் குரல்” என்பதில் அளித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசபக்தர்கள் சுவாமி அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்றதாகவும் பிரதமர் கூறினார். லோகமான்ய திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர் சாவர்க்கர், லாலா லஜபதி ராய், லாலா ஹர்தயாள், சந்திரசேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை உதாரணங்களாகக் கூறலாம் என பிரதமர் தெரிவித்தார். மகாத்மா ஹன்ஸ்ராஜ், சுவாமி ஷ்ரதானந்த் ஜி, பாய் பர்மானந்த் ஜி போன்ற பல தலைவர்களும் மகரிஷியிடம் இருந்து உத்வேகம் பெற்றவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

சுவாமி அவர்களின் போதனைகளின் பாரம்பரியத்தை ஆர்ய சமாஜ் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு ‘ஆர்ய வீரரிடமிருந்தும்’ நாடு நிறைய எதிர்பார்க்கிறது என்றும் பிரதமர் கூறினார். அடுத்த ஆண்டு ஆர்ய சமாஜ் தமது 150-வது ஆண்டைத் தொடங்க உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த முக்கியமான நிகழ்வைச் சிறப்பான திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வாகத்துடன் ஏற்பாடு செய்த அனைவரையும் பிரதமர் வாழ்த்தினார். அமுத காலத்தில் மகரிஷி தயானந்தர் அவர்களின் முயற்சிகளில் இருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெறுவோம் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

 

குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்ய தேவவிரத், மத்திய கலாச்சார அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, கலாச்சார இணை அமைச்சர்கள் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி, தில்லி ஆர்ய பிரதிநிதி சபாவின் தலைவர் திரு தரம் பால் ஆர்யா, தில்லி ஆர்ய பிரதிநிதி சபா-வின் மகாமந்திரி திரு வினய் ஆர்யா, சர்வதேசிக் ஆர்ய பிரதிநிதி சபா தலைவர் திரு சுரேஷ் சந்திர ஆர்யா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பிறந்த மகரிஷி தயானந்த சரஸ்வதி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் காலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து 1875-ம் ஆண்டில் ஆர்ய சமாஜத்தை நிறுவினார். சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாட்டின் கலாச்சார மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆர்ய சமாஜ் முக்கிய பங்கு வகித்துள்ளது.

சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைக் கொண்டாடுவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. குறிப்பாக அவர்களின் பங்களிப்புகள் கடந்த காலங்களில் இந்திய அளவில் எடுத்துரைக்கப்படவில்லை. தற்போது பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் (பழங்குடியினர் கெளரவ தினம்) என அறிவிப்பதில் இருந்து ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை  நினைவுகூரும்  நிகழ்ச்சியில்  பங்கேற்பது வரை, பிரதமர் திரு. நரேந்திர மோடி  இதுபோன்ற  முயற்சிகளை  முன்னின்று  மேற்கொண்டு வருகிறார்.

***

AP  / PLM  / DL



(Release ID: 1898519) Visitor Counter : 161