சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி20 சுற்றுலாப் பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் தொடக்க அமர்வு குஜராத் மாநிலம் கட்ச் பாலைவனப் பகுதியில் இன்று நடைபெற்றது

Posted On: 08 FEB 2023 3:31PM by PIB Chennai

ஜி20 சுற்றுலாப் பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் தொடக்க அமர்வு குஜராத் மாநிலம் கட்ச் பாலைவனப் பகுதியில் இன்று நடைபெற்றது.

தொடக்க அமர்வில் இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் தொடக்கக் குறிப்புகளுடன், மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன்ரெட்டி, மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம்  ரூபாலா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

இந்த அமர்வில் உரையாற்றிய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, கொவிட் பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், 2022-ல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நல்ல ஊக்கத்தை அளித்தது என்றார். இந்த ஆண்டில், சுமார் 6.19 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட, 4 மடங்கு அதிகம் என்றும் அவர் கூறினார்.  இந்த ஆண்டினை இந்திய பயணத்திற்கான ஆண்டு 2023 என சுற்றுலா அமைச்சகம் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.

ஜி20-ல் சுற்றுலாப் பணிக்குழுவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ,2020-ம் ஆண்டின் சவுதி அரேபியா அரசாட்சி தலைமைத்துவத்தின் கீழ், முன்முயற்சி எடுக்கப்பட்டதாகும் என்றார்.  இதன் பிறகு, உறுப்பு நாடுகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் விவாதிப்பதற்கும் உள்நாடு மற்றும் உலகளாவிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து வழிகாட்டுதலுக்கும் இந்த பணிக்குழு மேடை அமைத்து தந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், சுற்றுலா நம்மை இயற்கைக்கு நெருக்கமாக  கொண்டு வருகிறது என்றார். குஜராத் மாநிலத்தின் பரவலான, பன்முகப்பட்ட சுற்றுலா வளம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

இந்த பணிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 7அன்று டோர்டோ நகருக்கு வருகை தந்த  பிரதிநிதிகளுக்கு கூடார நகரில் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் அன்பான, வண்ணமிகு, பாரம்பரிய முறையிலான வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட ஒட்டக வண்டிகளில்  நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன், அழகான, ஒயிட் ரான் பகுதிக்கு பிரதிநிதிகள் அழைத்து செல்லப்பட்டனர். சூரியன் மறையும் வேளையில், ஏற்படும்  அழகை ரசித்த பிரதிநிதிகள் ஜி20 இலச்சினையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897320

***

 AP/SMB/RS/GK


(Release ID: 1897440) Visitor Counter : 269