நிதி அமைச்சகம்
பாதிப்புக்கு உள்ளாகும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக பிரதமரின் பிவிடிஜி மேம்பாட்டு இயக்கம் ரூ.15,000 கோடி முதலீட்டுடன் தொடங்கப்படும்
Posted On:
01 FEB 2023 1:13PM by PIB Chennai
பட்ஜெட்டின் பலன்கள் நாட்டில் உள்ள சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உணருவதை உறுதிசெய்ய ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் போது, மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், "வளர்ச்சியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம். அதில் வளர்ச்சியின் பலன்கள் அனைத்து பகுதிகளையும் மக்களையும் சென்றடையும்" என்றார்.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் (பிவிடிஜி) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் வகையில், பிரதமரின் பிவிடிஜி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். "இது பிவிடிஜி குடும்பங்கள், பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தப் பணியை செயல்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கான 740 ஏகலைவா உண்டி உறைவிட மாதிரி பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீர்வளம், நிதி உள்ளடக்கம், திறன் மேம்பாடு மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் அத்தியாவசிய அரசு சேவைகளை நிறைவு செய்வதற்காக 500 வட்டாரங்களை உள்ளடக்கியதாக முன்னேறத்துடிக்கும் வட்டாரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான செலவினம் 66 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.79,000 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா மாநிலத்தின் மத்தியப் பகுதியில், நிலையான நுண்ணீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக மேல்நிலைத் தொட்டிகளை நிரப்ப, மேல் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பழமையான கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கி காட்சிப்படுத்தும் ‘பாரத் களஞ்சியம்’ முதற்கட்டமாக அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
பிணை தொகையை செலுத்த முடியாமல் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் ஏழைகளுக்கு தேவையான நிதியுதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
***
(Release ID: 1895298)
PKV/AG/RR
(Release ID: 1895663)
Visitor Counter : 286