நிதி அமைச்சகம்
கடந்த ஆறாண்டுகளில் 4.6 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் வேளாண் துறை தொடர்ந்து மேல்நிலையில் உள்ளது
Posted On:
31 JAN 2023 1:21PM by PIB Chennai
கடந்த ஆறாண்டுகளில் 4.6 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் வேளாண் துறை தொடர்ந்து மேல்நிலையில் உள்ளது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மேம்பாடு, உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வேளாண் துறையும் அதன் துணைத் தொழில்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021-22-ல் இதன் மதிப்பு 50.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2022-23-ல் வேளாண் கடனுக்கு ரூ.18.5 லட்சம் கோடியை அரசு இலக்காக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கணிசமான அளவு கூடுதலாக கடன் வழங்கப்படுகிறது. 2021-22-ல் ரூ.16.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாக 13 சதவீதம் கடன் வழங்கப்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
2022 டிசம்பர் நிலவரப்படி, 3.89 கோடி தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.4,51,672 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன் அட்டை வசதி, மீனவர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், 2022 அக்டோபர் 17 நிலவரப்படி 1.0 லட்சம் மீனவர்களுக்கும், 2022 நவம்பர் 4 நிலவரப்படி, 9.5 லட்சம் கால்நடை வளர்ப்போருக்கும் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.
உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாக 44.3 லட்சம் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் உள்ளனர். 2021-22-ல் 59.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இயற்கை வேளாண்மை செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894900
***
AP/SMB/PK/GK
(Release ID: 1895148)
Visitor Counter : 216