இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற மகாராஷ்டிராவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சம்யுக்தா காலே மத்திய பிரதேசத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் மீண்டும் பங்கேற்கிறார்
Posted On:
29 JAN 2023 2:42PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை தொடங்கும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் முன்னணி ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சம்யுக்தா காலே பங்கேற்கிறார். சம்யுக்தா காலே பஞ்ச்குலாவில் நடைபெற்ற நான்காவது கேலோ இந்தியா போட்டியில் ரிதம் ஜிம்னாஸ்டிக் பிரிவில் மொத்தமுள்ள ஐந்து தங்கப் பதக்கங்களையும் அவரே வென்றார். பஞ்ச்குலாவில் தனி நபர், வளையம், பந்து, கிளப் மற்றும் ரிப்பன் என அனைத்துப் பிரிவுகளிலும் அவர் தங்கத்தை வென்றுள்ளார். சம்யுக்தா மீண்டும் தற்போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சம்யுக்தா ஐந்து வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் கற்கத் தொடங்கினார். குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கம் மற்றும் இந்த மாதம் பெங்களூரில் நடைபெற்ற 25-வது தேசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
தமது பயிற்சிகள் மிகவும் நன்றாக உள்ளன எனவும் பயிற்சியாளர்களான மானசி சுர்வே மற்றும் பூஜா சுர்வே ஆகியோரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்று வருவதாகவும் சம்யுக்தா கூறினார். தினமும் 6 மணிநேரம் பயிற்சி செய்வதாகக் கூறும் அவர், குவாலியரில் நடைபெறும் போட்டியில் தமது செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சம்யுக்தா, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பால் (FIG) உலகில் சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் தவிர, சம்யுக்தா பல சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். சம்யுக்தாவின் பயிற்சியாளர் மானசி சர்வே கூறுகையில், சம்யுக்தா இதுவரை மொத்தம் 130 பதக்கங்களை வென்றுள்ளார் எனவும் அதில் 119 தங்கப் பதக்கங்கள் என்றும் தெரிவித்தார்.
கேலோ இந்தியா போட்டியில் இந்த முறை மகாராஷ்டிராவில் இருந்து பல்வேறு போட்டிகளில் 450 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 5000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் போபாலில் நாளை (ஜனவரி 30) போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால், இந்தூர், குவாலியர், ஜபல்பூர், உஜ்ஜைன், பாலகாட், மாண்ட்லா, கார்கோன் (மகேஷ்வர்) ஆகிய 8 இடங்களிலும் டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டி தில்லியிலும் நடைபெறுகிறது. இந்த முறை 27 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
*****
PLM / DL
(Release ID: 1894471)
Visitor Counter : 185