சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயிரியல் பொருட்களின் தரம் குறித்த தேசிய மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
27 JAN 2023 12:16PM by PIB Chennai
“அனைவருக்கும் தரமான மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் என்ற மாண்புமிகு பிரதமரின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் தரமான உயிரியல் பொருட்கள் மட்டுமே சுகாதார அமைப்புமுறையை சென்றடைவதை உறுதி செய்வதில் தேசிய உயிரியல் கழகம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.” தேசிய உயிரியல் கழகத்தின் சார்பாக நடைபெற்ற உயிரியல் பொருட்களின் தரம் குறித்த தேசிய மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு தெரிவித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி. கே. பால் ஆகியோரும் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்கள்.
உயிரியல் பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் பல்வேறு அம்சங்கள் பற்றி பங்குதாரர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலியோர் கலந்துரையாடும் தளமாக இந்த தேசிய மாநாடு அமையும். ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற அரசின் கோட்பாட்டை நோக்கி திறன் கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பொது சுகாதாரத்தின் பாதுகாப்பு மற்றும் அதை ஊக்குவிப்பதற்காக புதிய உயிரியல் பொருட்களின் தயாரிப்பு முதலியவை பற்றி கலந்துரையாடல்கள் நடைபெறும்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, “இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் பொது சுகாதார தேவையை எதிர்கொள்ளும் திறனை உயிரி மருந்தகம் மற்றும் மருத்துவ பரிசோதனை துறை பெற்றுள்ளது என்பதை கடந்த சில ஆண்டுகளில் கொவிட்-19 பெருந்தொற்றின் வாயிலாக அனைவராலும் உணரப்பட்டுள்ளது”, என்று கூறினார். அரிய மற்றும் முக்கியத்துவம் தரப்படாத நோய்களின் சிகிச்சைக்கு வழங்கப்பட்டு வரும் மருந்துகள் உட்பட புதிய மருந்துகளை நம் நாட்டில் கண்டுபிடிக்கவும், மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்ற புதிய பிரிவுகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநாட்டில் உரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், உயிரி மருந்தகத்துறையில் டிஜிட்டல் இடையீடுகளை பயன்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். உயிர் காக்கும் மருந்துகள் விரைவாக மக்களை சென்றடைவதற்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பரிசோதனை ஆய்வகங்களும் ஒழுங்குமுறை ஆணையங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், சிறப்பு செயலாளர் திரு எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
AP/RB/KRS
(Release ID: 1894104)
Visitor Counter : 158