மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேர்வு குறித்து விவாதிப்போம் 2023 நிகழ்ச்சி வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது: திரு.தர்மேந்திர பிரதான்
கடந்த ஆண்டில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 15.7 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 38.80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்
150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், 51 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், 50 நாடுகளைச் சேர்ந்த பெற்றோர் இந்த ஆண்டின் நிகழ்ச்சிக்கு பதிவு செய்துள்ளனர்
Posted On:
03 JAN 2023 7:21PM by PIB Chennai
மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் “தேர்வு குறித்து விவாதிப்போம்” நிகழ்ச்சி, இந்தாண்டு வரும் 27-ந் தேதி புதுதில்லி தல்கத்தோரா உள் அரங்கில் நடைபெற உள்ளதாக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்த தனித்துவமான நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் நேரலையில் பதிலளிக்கிறார். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இந்த தேர்வு திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வித்துறை இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஆண்டு, மாநில கல்வி வாரியங்கள், சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மற்றும் இதர கல்வி வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவுகள் ஏற்கனவே இருமடங்கை தாண்டியுள்ளது.
31.24 லட்சம் மாணவர்கள், 5.6 லட்சம் ஆசிரியர்கள், 1.95 லட்சம் பெற்றோர் என மொத்தம் 38.80 லட்சம் பேர் இவ்வாண்டின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டில் 15.7 லட்சம் பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், 51 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், 50 நாடுகளைச் சேர்ந்த பெற்றோர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.
(Release ID 1888402)
PKV/RR
(Release ID: 1893227)
Visitor Counter : 116