இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டு அமைச்சகம் முதல் முறையாக மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) கூட்டத்தை தில்லிக்கு வெளியே நடத்தியுள்ளது

Posted On: 22 JAN 2023 3:56PM by PIB Chennai

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் மிஷன் ஒலிம்பிக் செல் (MOC) கூட்டத்தை முதல் முறையாக தில்லிக்கு வெளியே, ஒடிசாவின் புவனேஸ்வரில், உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு இடையே நடத்தியது.

இந்திய ஒலிம்பிக் இலக்கின் முக்கிய அம்சங்கள், ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம்  உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க எம்ஓசி உறுப்பினர்கள் இரண்டு வார இடைவெளியில் பங்கேற்கும் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த முறை இது ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்றது. அங்கு இந்த உறுப்பினர்கள் வேல்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்ற போட்டியையும் நேரில் கண்டனர்.

எம்ஓசி குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், இதன் மூலம் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியைப் பார்க்க சிறந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். ஒரு போட்டியின் போது அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்க்க எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றும் இதன் மூலம் வீரர்களை சரியாக மதிப்பிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  ஹாக்கி மட்டுமல்லாமல், வாய்ப்புக் கிடைக்கும்போது மற்ற விளையாட்டுப் போட்டிகளையும் நேரில் பார்க்க விரும்புவதாக அவர் கூறினார்.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் மட்டுமே மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் அணிகளாக உள்ளன. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆண்டு பயிற்சி திட்டத்தில் இந்த அணிகள் ரூ. 24 கோடியைப் பெறுகின்றன.

வீரர்களுக்கு, குறிப்பாக ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வீரேன் ரஸ்குவின்ஹா, "கடந்த சில ஆண்டுகளாக அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களுக்கும் ஹாக்கி அணிகளுக்கும் மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) மற்றும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் (டாப்ஸ்) அதிக ஆதரவை அளித்து வருகின்றன. குறிப்பாக ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது. பின்னர், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பு இப்போது உலகக் கோப்பையில் விளையாடுகிறது. எனவே நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்." என்றார்.

பொதுவாக, நாடு முழுவதிலும் உள்ள எம்ஓசி  உறுப்பினர்கள், டாப்ஸ் தொடர்பான அம்சங்கள் பற்றி விவாதிக்கும் கூட்டம் ஒவ்வொரு முறையும் தில்லியில் நடைபெற்று வந்தது. கொவிட் பரவலைத் தொடர்ந்து காணொலி வாயிலாக கூட்டங்கள் நடைபெற்றன. ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, காணொலி மற்றும் நேரடி என இரு முறைகளிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மாதத்தில் ஒரு கூட்டம் காணொலி வாயிலாகவும் மற்றொரு கூட்டம் நேரடியாகவும் நடைபெறுகிறது.

*****

 

SMB / PLM / DL


(Release ID: 1892835) Visitor Counter : 171