சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜி20 இந்தியாவின் சுகாதாரப் பயணம்
प्रविष्टि तिथि:
20 JAN 2023 1:41PM by PIB Chennai
கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது சுகாதாரப் பணிக்குழு கூட்டத்தின் 3-ஆம் நாள் நிகழ்வு இன்று (ஜனவரி 20, 2023) நடைபெற்றது. இதில் மருத்துவ மதிப்புப் பயணம் குறித்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்ய ராஜேஷ் கோட்டெச்சா முக்கிய உரை நிகழ்த்தினார். சுகாதாரக் கவனிப்பு நடைமுறைகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாகுபாடுகளைக் களைவதற்கு சிறப்புமிக்க சுகாதாரத்திற்கான இன்றியமையா அம்சங்களில் ஒன்றாக மருத்துவ மதிப்புப் பயணம் அமைவதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் நித்தி ஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினரும், மத்திய சுகாதாரத் துறை செயலாளருமான திரு ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
ஒருநாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மீதான தாக்கத்தை கடுமையான பெருந்தொற்று ஏற்படுத்தியதை அவர் கோடிட்டுக் காட்டினார். எனவே, நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறையுடன் ஒட்டுமொத்தமான கவனத்துடன் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நவீன மருந்துகளுடன் பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் இணைப்பது நோயைக் குணப்படுத்த ஆற்றல் மிக்கதாக இருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் முழுமையானதாக விளங்கும் என்பதை கருத்தரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். ஒருங்கிணைந்த சிகிச்சை முறை காலத்தின் தேவை என்று குறிப்பிட்ட அவர்கள், சுகாதாரத் துறையில் இது வலுவானதாகவும் உயர் மதிப்பு கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிவித்தனர்.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஜி20 உறுப்புநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்களாதேஷ், எகிப்து, மொரீசியஸ் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர் நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். அதேபோல், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க ஒன்றியம், ஆசியான், உலகப்பொருளாதார அமைப்பு, உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனிசெஃப் போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1892409)
AP/SMB/PK/KRS
(रिलीज़ आईडी: 1892451)
आगंतुक पटल : 295