பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது – பசுமை எரிசக்திக்கு மாறும் செயல்திட்டத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது: வாகனக் கண்காட்சி 2023-ல் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி

Posted On: 13 JAN 2023 12:54PM by PIB Chennai

உலக அளவில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் பசுமை எரிசக்திக்கு மாறும் செயல்திட்டத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.  ஆட்டோ எக்ஸ்போ-2023 எனப்படும் வாகனக் கண்காட்சியில் பேசிய அவர், ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, இந்தக் கண்காட்சி நமது தொழில்நுட்பம், திறன் மற்றும் பாதுகாப்பான, தூய எரிசக்திக்கான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துக் காட்டுவதாக அமையும் என்றார்.

இந்த நிகழ்வு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா எந்த அளவிற்குப் புதுமைகளைச் செய்கிறது என்பதை எடுத்துரைப்பதாகவும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் எரிசக்தித்  தேவையை  நிவர்த்தி  செய்யும்  வகையிலும்  அமைந்துள்ளது  என்றும் அவர் கூறினார்.

இது உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும்  இத்துறையைச்  சேர்ந்த  பிறருக்கு  ஒரு தளத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய நுகர்வு என இரண்டிலும் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இந்தக் கண்காட்சி ஒரு  தனித்துவமான  வாய்ப்பை வழங்கும்  என்றும்  அமைச்சர்  கூறினார்.

எத்தனால் கலப்பில்  இந்தியா அடைந்துள்ள  முன்னேற்றம் குறித்துப் பேசிய அமைச்சர், பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2013-14 ஆம் ஆண்டில் 1.53 சதவீதமாக இருந்தது என்றார். 2022 ஆம் ஆண்டில் இது 10.17 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2025-26-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்படுவதாக அவர் தெரிவித்தார். இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, அந்நிய  செலாவணி சேமிப்பாக ரூ. 41,500 கோடியை மிச்சப்படுத்தும் என்று அவர் கூறினார். அத்துடன் 27 லட்சம் மெட்ரிக் டன் பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.  இந்த எத்தனால் கலப்பின்  மூலம் விவசாயிகளுக்கு ரூ.40,600 கோடி ரூபாய்க்கும் மேல்  வழங்கப்பட்டு  அதன்  மூலம்  விவசாயிகள்  பயனடைந்துள்ளதாகவும்  அமைச்சர்  கூறினார்.

எத்தனால் விநியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வைப்புத் தொகையை 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் ஆகக்  குறைத்துள்ளதுடன், எளிதாக வணிகம் செய்ய எத்தனால் விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ. 400 கோடி ரூபாய் அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன்  உயிரி  எரிபொருளுக்கான  சரக்கு  மற்றும்  சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக  அரசு  குறைக்கப்பட்டிருப்பதையும்  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

5 இடங்களில் 2ஜி எத்தனால் உயிரி சுத்திகரிப்பு  ஆலைகளை  அரசு  நிறுவி  வருவதாகவும்  அமைச்சர் கூறினார். ஜி 20  தலைமைத்துவத்தின்போது  அமெரிக்கா  மற்றும் பிரேசிலுடன் இணைந்து உயிரி எரிபொருளுக்கான உலகளாவிய கூட்டமைப்பையும் இந்தியா தொடங்குவதாக அவர் கூறினார்.

பெங்களூருவில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் (BIEC) 2023 பிப்ரவரி 6 முதல் 8 –ம் தேதி வரை நடைபெறும் இந்திய எரிசக்தி  வார நிகழ்ச்சியில் (IEW) கலந்துகொள்ளுமாறு  அமைச்சர் எரிசக்தி துறையினருக்கு அழைப்பு விடுத்தார். இந்த முதலாவது எரிசக்தி வாரம் "வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் மாற்றம்" என்ற கருப்பொருளைக் கொண்டு  நடைபெற  இருப்பதாகவும்  இதில் 30-க்கும் மேற்பட்ட எரிசக்தி  அமைச்சர்கள், 50-க்கும்  மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், 650 கண்காட்சியாளர்கள் மற்றும் 30000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக திரு. ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். 

தற்போது தில்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ- 2023 என்ற கண்காட்சியை "போக்குவரத்து உலகை ஆராய்தல்" என்ற கருப்பொருளில் இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட வாகன நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் 30000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என   எதிர்பார்க்கப்படுகிறது.

*******

AP/PLM/RJ



(Release ID: 1890983) Visitor Counter : 168