பிரதமர் அலுவலகம்

உலகின் தென்பகுதி நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமரின் உரை

Posted On: 12 JAN 2023 10:53AM by PIB Chennai

மேன்மை தங்கிய தலைவர்களே!

உலகின் தென்பகுதி நாடுகளின் தலைவர்களே, வணக்கம்! இந்த உச்சி மாநாட்டில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எங்களுடன் இணைந்துள்ளதற்கு நன்றி. புதிய ஆண்டு உதயமாகி, புதிய நம்பிக்கைகளையும், புதிய ஆற்றலையும் கொண்டு வரும் நிலையில் நாம் சந்திக்கிறோம் 130 கோடி இந்தியர்கள்  சார்பாக, உங்களுக்கும் உங்கள் நாடுகளுக்கும் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான 2023-ஆம் ஆண்டின் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் கடினமான மற்றொரு ஆண்டின் பக்கத்தை நாம் புரட்டியுள்ளோம். போர், மோதல், பயங்கரவாதம், புவி-அரசியல் பதட்டங்கள், உணவு, உரம் மற்றும் எரிபொருட்களின் விலைகள் உயர்வு; பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்கள், கொவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் ஆகியவற்றை நாம் கண்டோம். உலகம் நெருக்கடியான நிலையில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையற்ற சூழல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம்.

தலைவர்களே,

உலகின் தென்பகுதி நாடுகளைச் சேர்ந்த நாம், வரும் காலத்தில்  மிகப்பெரிய  பொறுப்புகளைக் கொண்டுள்ளோம்.  நான்கில் மூன்று பங்கு மக்கள் நம் நாடுகளில் வசிக்கிறார்கள். எனவே நமக்கும் சமமான குரல் இருக்க வேண்டும். இந்நிலையில், எட்டு தசாப்த கால உலக நிர்வாக முறை மாதிரி மெதுவாக மாறும்போது, ​​வளர்ந்து வரும் ஒழுங்கை வடிவமைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

 

தலைவர்களே!

உலகளாவிய சவால்களில் பெரும்பாலானவை தென்பகுதி நாடுகளால் உருவாக்கப்பட்டதில்லை. ஆனால் அவை நம்மை மிகவும்  அதிகமாக பாதிக்கின்றன. கொவிட் பொருந்தொற்று, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், உக்ரைன் மோதல் ஆகியவற்றின் தாக்கங்களில் இதை நாம் கண்டோம். தீர்வுகளுக்கான தேடலும் நமது பங்கையோ அல்லது நமது குரலையோ பாதிக்காது.

தலைவர்களே!

இந்தியா எப்பொழுதும் தனது வளர்ச்சி அனுபவத்தை  உலகின் தென்பகுதி நாடுகளின் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. நமது மேம்பாட்டு கூட்டாண்மை அனைத்து புவியியல் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. தொற்றுநோய்களின் போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை நாங்கள் வழங்கினோம். நமது பொதுவான எதிர்காலத்தை தீர்மானிப்பதில் வளரும் நாடுகளின் பெரும் பங்கிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கிறது.

தலைவர்களே!

இந்தியா இந்த ஆண்டு தனது ஜி 20 தலைமைப்பொறுப்பை  ஏற்றுள்ள போது, ​​உலகளாவிய தென்பகுதியின் குரலை ஓங்கி ஒலிப்பது நமது இயல்பான நோக்கமாகும். எங்கள் ஜி-20 தலைமை பொறுப்புக்கு, "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருப்பொருளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இது நமது நாகரீக நெறிமுறைகளுடன் ஒத்துப்போகிறது. ஒருமைத்துவத்தை  உணர்வதற்கான பாதை மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சியின் மூலம் என்று நாங்கள் நம்புகிறோம். உலக தென்பகுதி மக்கள் வளர்ச்சியின் பலன்களில் இருந்து விலக்கப்படக்கூடாது. ஒன்று சேர்ந்து உலகளாவிய அரசியல் மற்றும் நிதி நிர்வாகத்தை மறுவடிவமைக்க முயற்சிக்க வேண்டும். இது ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது, வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், முன்னேற்றம் மற்றும் செழிப்பை ஏற்படுத்தலாம்.

தலைவர்களே!

உலகுக்கு மீண்டும்  ஆற்றலை ஏற்படுத்த, நாம் ஒன்றிணைந்து 'பதிலளித்தல், அங்கீகரித்தல், மரியாதை  அளித்தல் மற்றும் சீர்திருத்தம்' என்ற உலகளாவிய நோக்கத்துடன் அழைப்பு விடுக்க வேண்டும். அனைவரையும்  உள்ளடக்கிய, சமநிலையான சர்வதேச  நோக்கத்தை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய தென்பகுதியின் முன்னுரிமைகளுக்கு வழி ஏற்படுத்தலாம். பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள்என்ற கொள்கை அனைத்து உலகளாவிய சவால்களுக்கும் பொருந்தும் என்பதை அங்கீகரிக்கவும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, சட்டத்தின் ஆட்சி,வேறுபாடுகள், சர்ச்சைகள் ஆகியவற்றுக்கு அமைதியான தீர்வு காண, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களை சீர்திருத்தம் செய்து, அவற்றை இக்காலத்துக்கும் மிகவும் பொருத்தமானதாக மாற்ற வேண்டும்.

தலைவர்களே!

வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்  ஒருபுறம் இருந்தபோதிலும், நமது நேரம் வரும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நமது சமூகங்கள், பொருளாதாரங்களை மாற்றக்கூடிய எளிய, அளவிடக்கூடிய மற்றும் நிலையான தீர்வுகளை அடையாளம் காண்பது காலத்தின் தேவையாகும். அத்தகைய அணுகுமுறை மூலம், வறுமை, உலகளாவிய சுகாதாரம் அல்லது மனித திறன்களை வளர்ப்பது போன்ற கடினமான சவால்களை நாம் சமாளிப்போம். கடந்த நூற்றாண்டில், அந்நிய ஆட்சிக்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம். நமது குடிமக்களின் நலனை உறுதி செய்யும் புதிய உலக அமைப்பை உருவாக்க இந்த நூற்றாண்டில் நாம் அதை மீண்டும் செய்யலாம். இந்தியாவைப் பொறுத்த வரை, உங்கள் குரல் இந்தியாவின் குரல். உங்கள் முன்னுரிமைகள் இந்தியாவின் முன்னுரிமைகள். அடுத்த இரண்டு நாட்களில், இந்த தென்பகுதி நாடுகளின் குரல் உச்சிமாநாட்டில் 8 முன்னுரிமைப் பகுதிகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். தென்பகுதி நாடுகள் இணைந்து புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த யோசனைகள் ஜி-20 மற்றும் பிற மன்றங்களில் நமது குரலின் அடிப்படையை உருவாக்கலாம். இந்தியாவில், எங்களிடம் ஒரு பிரார்த்தனை உள்ளது. இதன் பொருள், பிரபஞ்சத்தின் எல்லா திசைகளிலிருந்தும் உன்னத எண்ணங்கள் நமக்கு வரட்டும். இந்த உச்சிமாநாடு என்பது நமது கூட்டு எதிர்காலத்திற்கான உன்னத யோசனைகளைப் பெறுவதற்கான கூட்டு முயற்சியாகும்.

தலைவர்களே,

உங்கள் யோசனைகளையும் எண்ணங்களையும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் பங்கேற்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

***

(Release ID: 1890607)

PKV/AG/RR



(Release ID: 1890617) Visitor Counter : 275