பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் தில்லியில் தொடக்கம்

Posted On: 02 JAN 2023 12:45PM by PIB Chennai

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம், தில்லி கண்டோன்மென்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று (ஜனவரி 2, 2023) தொடங்கியது. பிரதமரின் பேரணியோடு ஜனவரி 28-ஆம் தேதி நிறைவடையும் இந்த ஒரு மாத கால முகாமில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 710 பெண்கள் உட்பட மொத்தம் 2155 பேர் பங்கேற்கின்றனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 114 தேசிய மாணவர் படையினரும், வடகிழக்கு பகுதியிலிருந்து 120 பேரும் இதில் அடங்குவர்.

கலை சார்ந்த போட்டிகள், தேசிய ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவன அளவிலான பயிற்சிகள் இந்த முகாமில் வழங்கப்படும். குடியரசு துணைத் தலைவர், மத்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், தில்லி முதல்வர், முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் முகாமிற்கு வருகை தருவார்கள்.

துவக்க விழாவில் உரையாற்றிய தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்ஃடினன்ட் ஜெனரல் குருபீர்பால் சிங், முழு மனதுடன் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும் அதிகபட்ச பலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வீரர்களைக் கேட்டுக்கொண்டார். இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி தத்துவம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆளுமை வளர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் எதிர்காலத்திற்கு தகுந்தவாறு வீரர்களின் மென் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

 

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய தலைநகரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் வாயிலாக இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்த முகாமின் நோக்கமாகும். வீரர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தி அவர்களது மாண்பு சார்ந்த அமைப்புமுறையை வலுப்படுத்துவதிலும் இந்த முகாம் கவனம் செலுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887999

***

AP/RB/KPG


(Release ID: 1888025) Visitor Counter : 192