அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நடைபெற உள்ள ‘2023 ஆம் ஆண்டின் அறிவியல் தொலைநோக்கு’ நிகழ்வு பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினார்


விடுதலைப் பெருவிழாவின் இந்த 75-வது ஆண்டில் இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக மாற்ற, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் உள்ளூர் மட்டத்தை எட்ட வேண்டும்; டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 01 JAN 2023 2:33PM by PIB Chennai

புத்தாண்டின் முதல் நாளான இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர்  ஜிதேந்திர சிங் '2023-ம் ஆண்டின் அறிவியல் தொலைநோக்கு' என்பது 2047 ம் ஆண்டில் இந்தியாவை வரையறுப்பதாக அமையும் என்றார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், 2047-ல் 100-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்வதற்கான கடைசி 25 ஆண்டுகளின் முதலாவது ஆண்டாகத் 2023 ஆம் ஆண்டு திகழ்கிறது எனவும், இது விடுதலையின் நூற்றாண்டுக்கான கனவுகளை உணர வைக்கும் என்றும் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, ஜி 20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.  இந்த ஆண்டை உலகம் சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைபிடிப்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

புதுமையான யோசனைகள் மற்றும் இலக்குகளை அடையும் நோக்கில் செயலாற்றுபவர்களுக்கே எதிர்காலம் சொந்தமானது என்று அவர் கூறினார்130 கோடி இந்தியர்களை தைரியமாக முடிவெடுக்கத் தூண்டும் ஒரு பிரதமர் இன்று நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதுமைக் கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தைக் குறிப்பிட்ட, டாக்டர் ஜிதேந்திர சிங் தமது சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியதைச் சுட்டிக் காட்டினார். "ஜெய் ஜவான் - ஜெய் கிசான்" என்ற உத்வேகமான கருத்தால், லால் பகதூர் சாஸ்திரியை நாம் எப்போதும் நினைவில் கொள்கிறோம். ராணுவத்தினரைப் போற்றுவோம்  - விவசாயிகளைப் போற்றுவோம் என்பதே அதன் அர்த்தம். பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் "ஜெய் விக்யான்" என்ற புதிய இணைப்பைச் சேர்த்தார். அது அறிவியலைப் போற்றுவோம் என பொருள்படும். நாங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆனால் இந்தப் புதிய கட்டத்தில், 75 ஆவது விடுதலைப் பெருவிழா காலத்தில் இப்போது "ஜெய் அனுசந்தன்" என்பதைச் சேர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஜெய் அனுசந்தன் என்பது புதுமையைப் போற்றுவோம் என்பதாகும். "ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் என்பதே நமது முழக்கம்" என்று பிரதமர் சுதந்திர தின உரையில் கூறியதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

2022 செப்டம்பரில் நடைபெற்ற மத்திய-மாநில அறிவியல் மாநாட்டிலும், இந்த விடுதலைப் பெருவிழாவின் 75 ஆவது ஆண்டு கால கட்டத்தில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற, ஒரே நேரத்தில் பல முனைகளில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்ததை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளை உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய துறைகள் 2023 ஆம் ஆண்டில் தாங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் மற்றும் முக்கியமாகப் பணி செய்ய வேண்டிய பகுதிகளை ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆலோசனையில் விண்வெளித் துறையை தனியார் பங்கேற்பாளர்களுக்கு அனுமதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, இன்று குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களைக் கொண்டதாக மாறி உள்ளது என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், அறிவியல் ஆய்வுப் பணிகள், தொழில்நுட்பப் பணிகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு இந்தியரை தரையிறக்கும் மனித விண்வெளிப் பயணத் திட்டமான "ககன்யான்" ஆகியவற்றில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பயோடெக்னாலஜி எனப்படும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) தற்போதுள்ள மற்றும் இனி வரக் கூடிய நோய்களுக்கான தடுப்பூசிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். சர்வதேச சிறுதானிய ஆண்டில் சிறுதானியப் பயிர்கள் மற்றும் தாவர வைரஸ்களின் நோய் மரபணுவியல் பற்றிய முக்கிய பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

2023 ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR), பசுமை ஹைட்ரஜன் பணிகளில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். ஏனெனில் இது ஏற்கெனவே தூய எரிசக்திக்கான பணியின் ஒரு பகுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புவி அறிவியல் அமைச்சகம் (MoES) ஆழ்கடல் பணிகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் என்று கூறிய அவர், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என்றார். 2023-ம் ஆண்டு கடல் சார்ந்த நீலப் பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றத்தைக் காணும் ஆண்டாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது  2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சுதந்திர தின உரைகளில் இந்தியாவின் ஆழ்கடல் பணிகளைக் குறிப்பிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அணுசக்தித் துறை, இந்தியாவின் தேர்தல் நிர்வாகத்திற்கான தனது பங்களிப்பாக, தேர்தல் ஆணையத்திற்கு சுமார் 21 லட்சம் உபகரணங்களை வழங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  வாக்குப் பதிவு இயந்திரங்கள், (BU), கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (CU) மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்கும் காகித சரிபார்ப்பு உபகரணங்கள் (VVPAT) ஆகியவை இதில் அடங்கும் என்றும் 2023 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் இவை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படும் என்றும் திரு. ஜிதேந்திர சிங் கூறினார்.

******

 

MS/PLM/DL


(Release ID: 1887882) Visitor Counter : 248