பிரதமர் அலுவலகம்

டிசம்பர் 30-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் செல்கிறார் பிரதமர்

மேற்கு வங்கத்தில் ரூ. 7800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய கங்கா கவுன்சிலின் 2வது கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

மேற்கு வங்கத்தில் ரூ. 2550 கோடி மதிப்பிலான பல்வேறு பாதாள சாக்கடை கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமர்
நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

ஹவுரா - நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தரதாலா வரையிலான பிரிவில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பன்னோக்கு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்; புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்

டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி - தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 29 DEC 2022 11:28AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.  காலை 11:15 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்தை சென்றடையும் பிரதமர், அங்கு ஹவுராவை நியூ ஜல்பைகுரியுடன் இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா மெட்ரோவில் ஜோகா-தரதாலா வரையிலான பர்பிள் லைன் பிரிவின் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  நிகழ்ச்சியில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நண்பகல் 12 மணியளவில், பிரதமர் ஐஎன்எஸ் நேதாஜி சுபாஷ் தளத்தை அடைந்து, அங்கு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி - தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனத்தை அவர் திறந்து வைக்கிறார். தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மேற்கு வங்கத்திற்கான பல்வேறு பாதாள சாக்கடை கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டும் அவர்  நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மதியம் 12:25 மணியளவில், தேசிய கங்கா கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குவார்.

ஐஎன்எஸ் சுபாஷ் தளத்தில் பிரதமர்

நாட்டின் கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஊக்கமளிக்கும் மற்றொரு நடவடிக்கையாக, கொல்கத்தாவின் பிரதமர் தேசிய கங்கா கவுன்சிலின் 2-வது கூட்டத்துக்கு தலைமை தாங்குவார். இந்தக் கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சர், கவுன்சிலில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்வார்கள். கங்கை ஆற்றையும், அதன் உப நதிகளையும் தூய்மைப்படுத்தி சீரமைக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு தேசிய கங்கா கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தூய்மை கங்கா இயக்கத்தின் கீழ் ரூ. 990 கோடிக்கும் அதிகமான மதிப்பில் உருவாக்கப்பட்ட 7 கழிவுநீர் கட்டமைப்பு திட்டங்களை (20 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 612 கி.மீ. கட்டமைப்பை கொண்டது) பிரதமர் தொடங்கிவைப்பார். இந்தத் திட்டங்கள், நபாத்விப், கச்சாரப்ரா, ஹலிஷர், புத்கேபுத்கே, பாரக்பூர், சந்தன் நகர், பன்ஸ் பேரியா, உத்தரபாரா கோர்டுங், பைத்தியாபடி, பத்ரேஷ்வர், நைஹாட்டி, கருலியா,  திட்டாகர், பனிஹட்டி ஆகிய நகராட்சிகளுக்கு பலன் அளிக்கும். இந்தத் திட்டங்கள் மேங்கு வங்க மாநிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு திறனை 200 மில்லியன் லிட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.

மேலும் 5 சுத்திகரிப்பு கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 8 கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 80 கி.மீ. கட்டமைப்பு கொண்ட இந்தத் திட்டங்கள் ரூ.1585 கோடி மதிப்பில் தேசிய தூய்மை கங்கா இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும். மேற்கு வங்கத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு திறனை 190 மில்லியன் லிட்டர் அளவுக்கு அதிகரிக்கும் இத்திட்டங்கள், வடக்கு பராக்பூர், ஹூக்ளி-சின்சுரா, கொல்கத்தா கேஎம்சி பகுதி, கார்டன் ரிச், அதிகங்கா, மகேஷ்தலா நகர் பகுதிகளுக்கு பயன் அளிக்கும்.

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி- தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இத்திட்டம் கொல்கத்தா டைமண்ட் ஹார்பர் சாலை ஜோகாவில் ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தண்ணீர், துப்புரவு மற்றும் தூய்மை திட்டங்களின் உயர் அமைப்பாக இது செயல்படும். மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு தேவையான தகவல்களை வழங்கும் மையமாக இது செயல்படும்.

ஹவுரா ரயில் நிலையத்தில் பிரதமர்

ஹவுரா ரயில் நிலையத்தில், ஹவுரா- புதிய ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பார். பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில், மால்டா டவுன், பர்சோய், கிஷான்கஞ்ச் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஜோகா- எஸ்பிளனேடு மெட்ரோ திட்டத்தின் (பர்பிள் லைன்) ஜோகா-தரத்தாலா பிரிவில் பிரதமர் தொடங்கிவைக்கிறார். 6.5 கி.மீ. தூரப் பாதையில், தாக்கூர்புக்கூர், சாகர்பசார், பேஹாலா சௌராஷ்டிரா, பேஹாலாபசார், தரத்தாலா ஆகிய 6 ரயில் நிலையங்கள் இருக்கும்.  இந்தத் திட்டம் ரூ.2475 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்சுனா, தாக்கர், முச்சிப்பாரா, தெற்கு 24 பர்கானா, ஆகிய கொல்கத்தா நகரத்தின் தென்பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் இத்திட்டத்தின் மூலம் பெரும் பயனடைவார்கள்.

பிரதமரின் பயணத்தின் போது, ரூ.405 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள போயிஞ்சி-சக்திகர் 3-வது லைன், ரூ.565 கோடியில் கட்டப்பட்டுள்ள தான்குனி-சந்தன்பூர் 4-வது லைன், ரூ.254 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நிம்டிடா-நியூ பராகா டபிள்லைன், ரூ.1080 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ள அம்பாரி ஃபலகட்டா-நியூமைனாகுரி-குமானிஹத் இரட்டைப்பாதை திட்டம் ஆகிய  நான்கு ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரூ.335 கோடிக்கும் அதிகமான செலவில் சீரமைக்கப்படவுள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையப்பணிக்கு  பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

---------------

(Release ID: 1887210)

AP/PKV/AG/KRS



(Release ID: 1887267) Visitor Counter : 128