சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்


*சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (லைஃப்) இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த ஆண்டில் தொடங்கி வைத்தார்

*சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் ஆசியாவின் மிகப்பெரிய ராம்சார் ஈர நிலங்கள் அமைப்பை இந்தியா பெற்றது

Posted On: 23 DEC 2022 4:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்த ஆண்டில் (2022) "மிஷன் லைஃப்" எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடங்கப்பட்டது. இது உலகம் முழுவதிலும் சூழலுக்கு ஏற்ற நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய திட்டமாகும். இந்திய காடுகளில் சிறுத்தைகளை (சிவிங்கிப் புலிகள்) பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். இது உயிரினங்களின் உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளில் மற்றொரு முக்கியமான மைல்கல் ஆகும்.

 

2022 ஆம் ஆண்டில் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முக்கிய சாதனைகளில் சில: -

 

* 'மிஷன் லைஃப்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை குஜராத்தின் ஏக்தா நகரில் 20 அக்டோபர் 2022 அன்று ஐநா பொதுச் செயலாளர் திரு அன்டோனியா குட்டரெஸ் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

*தேவையற்ற நுகர்வுகளைத் தவிர்த்து இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தும் நோக்கிலான "லைஃப்" இயக்கத்தில் சேருமாறு இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

*சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை மையமாகக் கொண்டு ஐநா பருவ நிலை மாநாட்டில் இந்தியா பங்கேற்றது. ஐநா பருவநிலை மாநாட்டில் (COP 27) இந்திய அரங்கில் பல்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு 49 நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

*14 நவம்பர் 2022 அன்று ஐநா பருவ நிலை மாநாட்டு நிகழ்வுகள் லைஃப் நிகழ்வுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மற்றும் ஐநா மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

*ஐநா பருவநிலை மாநாட்டின் இந்திய அரங்கில் நடந்த “மாற்றத்தை ஏற்படுத்தும் பசுமைக் கல்வி: இந்தியாவின் அனுபவங்கள்” என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.

*புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மின் துறை அமைச்சகம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) ஆகியவை இணைந்துஜி 20 தலைமைத்துவத்தில் இந்தியாவின் எரிசக்தி ஆற்றல் அணுகல், மாற்றம் மற்றும் செயல்திறன் ஆகியவை குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தின.

*எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில், நவம்பர் 09, 2022 அன்று “வளரும் நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை செயல்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு நிதி அளித்தல்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

*பிரதமர் திரு நரேந்திர மோடி, 15.08.2021 அன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘மிஷன் சர்குலர் எகானமி’ என்ற 'சுழற்சிப் பொருளாதார இயக்கம்' குறித்த இந்தியாவின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

*நித்தி ஆயோக், பல்வேறு வகையான கழிவுகளுக்கான சுழற்சிப் பொருளாதாரச் செயல் திட்டங்களை மேம்படுத்துவதற்காக 11 குழுக்களை அமைத்துள்ளது.

*பிளாஸ்டிக் பேக்கேஜிங் கழிவு, பேட்டரி கழிவு, மின்சார, மின்னணுக் கழிவுகள் மற்றும் டயர் கழிவுகள் ஆகிய நான்கு வகைக் கழிவுகளுக்கு சந்தை அடிப்படையிலான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புணர்வுக் (EPR) கொள்கை அடிப்படையில் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 2019 ஜனவரி 10 முதல் தேசிய தூய காற்றுத் திட்டத்தை (NCAP) அறிமுகம் செய்து, தேசிய அளவில் நகர மற்றும் மண்டல அளவில் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

*இந்திய அரசு நமீபிய அரசுடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் சிறுத்தைகளைப் (சிவிங்கிப் புலிகள்) பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2022 ஜூலை 20 அன்று கையெழுத்திடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, 2022 செப்டம்பர் 17 அன்று எட்டு சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தனிமைப்படுத்தப்படுதலுக்காக விடுவிக்கப்பட்டன. கட்டாய தனிமைக் காலத்திற்குப் பிறகு, சிறுத்தைகள் படிப்படியாக பெரிய பரப்புக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன. அனைத்து எட்டு சிறு சிறுத்தைகளும் ஒட்டுமொத்த உடற்தகுதியில் மிகச் சிறப்பாக உள்ளன.

*சிறுத்தைகள் (சிவிங்கிப் புலி) திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 12 சிறுத்தைகள் (சிவிங்கிப் புலி) கொண்ட இரண்டாவது தொகுதி ஜனவரி 2023 இல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது.

* ராம்சார் மாநாட்டின் கட்டமைப்பிற்குள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் (ராம்சார் தளங்கள் என்றும் அழைக்கப்படும்) இந்தியா பத்து ஈரநிலங்களைச் சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

*நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2022 முதல் அடையாளம் காணப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுப் பொருட்கள் மற்றும் ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் தேசிய கண்காட்சி சென்னையில் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்கள் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

*2021 -ம் ஆண்டுக்கான 'டிஎக்ஸ்2' எனப்படும் சிறந்த புலிகள் காப்பகத்திற்கான சர்வதேச விருதை தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்றுள்ளது.

*நாட்டில் 75000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் காப்பகங்கள் தற்போது உள்ளன. உலகப் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது.  

**************

SM/PLM/DL



(Release ID: 1886259) Visitor Counter : 405