பிரதமர் அலுவலகம்
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
Posted On:
18 DEC 2022 3:19PM by PIB Chennai
மேகாலயா ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா அவர்களே, முதலமைச்சர் திரு சங்மா அவர்களே, அமைச்சரவை நண்பர்கள் திரு அமித் ஷா அவர்களே, திரு சர்பானந்தா சோனோவால் அவர்களே, திரு கிரண் ரிஜிஜூ அவர்களே, திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, திரு பி. எல். வர்மா அவர்களே, மணிப்பூர், மிசோரம், அசாம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா மற்றும் சிக்கிம் மாநில முதலமைச்சர்களே, சகோதர சகோதரிகளே!
மேகாலயா, இயற்கை மற்றும் கலாச்சாரத்தில் வளமான மாநிலம் ஆகும். இந்த வளம், உங்களது விருந்தோம்பலிலும் பிரதிபலிக்கிறது. இணைப்பு, கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களைப் பெற்றிருக்கும் மேகாலய மாநில சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இடையூறுகளுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். ஊழல், ஏற்றத்தாழ்வு, தீவிரவாதம், வாக்குவங்கி அரசியல், கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் முதலியவற்றைக் களைய தீவிர முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது போன்ற பிரச்சனைகள் மிகவும் ஆழமானவை என்ற காரணத்தால், இவற்றை வேரிலிருந்து அழிப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தும் நமது முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. அது மட்டுமல்லாமல் விளையாட்டை நோக்கிய புதிய அணுகுமுறையோடு மத்திய அரசு முன்னேறி வருகிறது. நாட்டின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம், வடகிழக்கு பகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய அரங்கு, கால்பந்தாட்ட மைதானம், தடகள வீரர்களுக்கான களம் உட்பட 90 திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கத்தாரில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் கால்பந்து விளையாட்டை நாம் அனைவரும் கூர்ந்து கவனித்து வருகிறோம். நமது இளைஞர்களின் சக்தியில் எனக்கு பரிபூரண நம்பிக்கை இருப்பதால், அதுபோன்ற ஓர் நிகழ்வை இந்தியாவில் நாமும் கொண்டாடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தீவிரமாக நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்த வருடம், உள்கட்டமைப்பிற்காக மத்திய அரசு ரூ. 7 லட்சம் கோடியை செலவு செய்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொகை வெறும் ரூ. 2 லட்சம் கோடியாகவே இருந்தது. தற்போது உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஏராளமான மாநிலங்கள் போட்டி போட்டு வருகின்றன. வளர்ச்சிக்கான போட்டியைக் காண முடிகிறது. இதனால் மிக அதிக பயனடைந்து இருப்பது வடகிழக்கு பகுதிகள் தான். ரயில், விமானம் வாயிலாக மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் வடகிழக்கு பகுதியில் இருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
**************
(Release ID: 1884559)
AP/RB/RR
(Release ID: 1884986)
Visitor Counter : 158
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam