உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில் கொல்கத்தாவில் இன்று 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம்
Posted On:
17 DEC 2022 4:43PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களும், பீகார் மற்றும் ஒடிஸா மாநில துணை முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய திரு. அமித் ஷா, கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சீரியத் தலைமையின் கீழ், மண்டலக் கவுன்சில் கூட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு, அவற்றில் 93 சதவீத விவகாரங்களுக்குத் தீர்வு கண்டிருப்பது மிகப்பெரிய சாதனை என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் மொத்தம் 6 மண்டலக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டதாகக் (ஆண்டிற்கு சராசரியாக ஒரு கூட்டம் வீதம்) அவர் குறிப்பிட்டார். ஆனால், கடந்த 2014 முதல் தற்போது வரையிலான 8 ஆண்டுகளில், கொரோனாப் பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல், இன்றையக் கூட்டம் உட்பட 23 கூட்டங்கள் (ஆண்டிற்கு சராசரியாக 3 கூட்டங்கள் வீதம்) நடத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு, தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டதே இதற்கு காரணம் எனவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருமித்த ஒத்துழைப்புக்கு , மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகங்களே முக்கியப் பங்கு வகிப்பதாகவும் திரு. அமித் ஷா குறிப்பிட்டார். கிழக்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் விரைவு சக்தி திட்டத்தில். கிழக்கு மண்டல மாநிலங்கள் அதிகளவில் பயனடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மாநிலங்களின் வளர்ச்சி, பிரதமரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்கு மண்டல மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் திரு. அமித் ஷா தெரிவித்தார்.
கிழக்கு மண்டலத்தில் இருந்து இடதுசாரி தீவிரவாதம் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனை அறவே ஒழிக்க தீர்க்கமான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றார். கிழக்கு மண்டல மாநிலங்களில், இடதுசாரித் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் கண்காணிக்கவும், மற்ற மாநிலங்களுக்கு நிகரான வளர்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க, என்சிஓஆர்டி வழிமுறைகளைச் செயல்படுத்த மாவட்ட அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதை முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், வலியுறுத்தினார்.
போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட திரு. அமித்ஷா, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.
*********
AP/ES/DL
(Release ID: 1884446)
Visitor Counter : 229