பிரதமர் அலுவலகம்
கோவாவின் கோபாவில் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
11 DEC 2022 8:19PM by PIB Chennai
மேடையில் வீற்றிருக்கும் கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, கோவாவின் செல்வாக்கு மிக்க முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு ஸ்ரீபத் நாயக் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே மற்றும் அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
இந்த அற்புதமான விமான நிலையத்திற்காக கோவா மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கடந்த 8 ஆண்டுகளில் உங்கள் அனைவரின் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் ஒன்றை திரும்பத் திரும்ப சொல்வேன். அதாவது நீங்கள் எங்கள் மீது பொழியும் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வட்டியுடன், வளர்ச்சியாக திருப்பித் தருவேன் என்று. இந்த நவீன விமான நிலையம் அந்தப் பாசத்தைத் திருப்பித் தரும் முயற்சிதான். இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு எனது அன்பான சக ஊழியரும் கோவாவின் புதல்வருமான மறைந்த மனோகர் பாரிக்கர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டதால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது மனோகர் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரின் மூலம் இங்கு வரும் ஒவ்வொரு நபரின் நினைவிலும் பாரிக்கர் அவர்களின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும். (பிரதமர் உரையின் தொடக்கம் உள்ளூர் மொழியில் அமைந்தது)
நண்பர்களே
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பைப் பொறுத்தவரை முந்தைய அரசுகளின் பல தசாப்த அணுகுமுறை என்பது மக்களின் தேவைகளை விட வாக்கு வங்கிக்கே முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. இதன் காரணமாக மிகவும் குறைந்த முன்னுரிமை உள்ள திட்டங்களுக்கே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டது. எனவே மக்களின் அடிப்படை கட்டமைப்புத் தேவை புறக்கணிக்கப்பட்டது. இதற்கு கோவாவின் இந்த சர்வதேச விமான நிலையம் ஓர் உதாரணமாகும். இதற்கான கோரிக்கை கோவா மக்களுடையது மட்டுமல்ல நாடு முழுவதிலும் உள்ள மக்களின் நீண்ட கால நிலுவை கோரிக்கையாகும். கோவாவுக்கு ஒரு விமான நிலையம் மட்டும் போதாது, மற்றொரு விமான நிலையம் தேவைப்பட்டது. இந்த விமான நிலையம் மத்தியில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் அரசால் திட்டமிடப்பட்டது. அடல் அவர்களின் அரசுக்குப் பிறகு இந்த விமான நிலையத்திற்காக எந்த முயற்சியும் செய்யப்படவில்ல. இது நீண்ட காலமாக முடங்கிவிட்டது. 2014ல் கோவாவில் மேம்பாட்டின் இரட்டை என்ஜின் நிறுவப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் விரைவாக நிறைவு செய்தோம். ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் இங்கே வந்து இதற்கு அடிக்கல் நாட்டினேன். பெருந்தொற்று காலத்தில் நீதிமன்ற வழக்குகள் உட்பட அவ்வப்போது பல தடைகள் ஏற்பட்டன. இவை அனைத்தையும் கடந்து இன்று மிகப் பிரம்மாண்டமான விமான நிலையமாக இது உருவாகியுள்ளது. தற்போது ஓராண்டுக்கு சுமார் 40 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதியை இது பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்தத் திறன் 3.5 கோடி வரை செல்லக்கூடும். இந்த விமான நிலையத்தின் மூலம் நிச்சயமாக சுற்றுலா மாபெரும் வளர்ச்சியைப் பெறும். இரண்டு விமான நிலையங்களைப் பெற்றிருப்பதால் சரக்கு போக்குவரத்து மையமாக கோவா மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் பழங்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியையும் இது அதிகரிக்கும்.
நண்பர்களே
இன்றைய இந்தியா 21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவாகும். உலக அரங்கில் இந்தியா தற்போது புதிய செல்வாக்கைக் கட்டமைத்து வருகிறது. இந்தியா பற்றிய உலகின் கண்ணோட்டம் வெகு வேகமாக மாறி வருகிறது. இந்தியாவை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் உலகம் விரும்புகிறது. வெளிநாட்டுக்காரர்கள், டிஜிட்டல் தளங்களில் இந்தியாவின் வரலாற்றை உலக அளவில் விரிவாக எடுத்துச் செல்கிறார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டு நாட்டில் தற்போது எளிதாக பயணம் செய்வதன் இன்றியமையா தேவை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிந்தனையுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எளிதாகப் பயணம் செய்வதை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா செய்துள்ளது. இதன் மூலம் சுற்றுலா வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளது. நாங்கள் விசா பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம் வந்த பின் விசா வசதியை அதிகரித்திருக்கிறோம். தொலைதூர போக்குவரத்து தொடர்பிலும், நவீன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். வான்வழி போக்குவரத்தோடு டிஜிட்டல் தொடர்பு, செல்பேசி தொடர்பு, ரயில்வே தொடர்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
நண்பர்களே
போக்குவரத்து தொடர்பான முயற்சிகள் தவிர பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நமது பாரம்பரியத்தைப் பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் அதற்கான போக்குவரத்துத் தொடர்பு வசதிகள் மேம்பாட்டையும் எங்கள் அரசு செய்து வருகிறது. கோவாவில் வரலாற்று சிறப்புமிக்க அகுவாடா அருங்காட்சியகம் இதற்கு ஓர் உதாரணமாகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய இடங்களை நாடு முழுவதும் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றி வருகிறோம். சுற்றுலா பயணிகள் இந்த இடங்களுக்கு சென்று வர உதவும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்குகிறோம்.
நண்பர்களே,
கோவாவின் வளர்ச்சியோடு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான முயற்சிகளையும் கோவா அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காகவும் இந்த பிரம்மாண்டமான விமான நிலையத்திற்காகவும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மிக்க நன்றி!
****
SRI/SMB/IDS
(Release ID: 1882735)
Visitor Counter : 167
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam