பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூர் சங்காய் திருவிழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

“மணிப்பூர் மக்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் மணிப்பூர் சங்காய் திருவிழா”
“மினி இந்தியாவைக் காண வருவோருக்கு ரத்தினங்களாலான வரவேற்பு மாலையாக மணிப்பூர் இருக்கிறது”
“இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டாடுவதே சங்கய் திருவிழா“
“நம்முடைய இயற்கை, விலங்குகள், தாவரங்கள் அகியவற்றை உள்ளடக்கிய திருவிழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையும் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது”

Posted On: 30 NOV 2022 5:35PM by PIB Chennai

மணிப்பூர் சங்காய் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த மாநிலத்தின் மிகவும் பிரபலமான இந்த திருவிழா, மணிப்பூரை, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற உதவும். மணிப்பூரின் மாநில விலங்கான சங்காய் ரக மானின் பெயரிலேயே இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வகை மான்கள் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

விழாவில் கூடியிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் சங்காய் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக அம்மாநில மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த திருவிழா நடத்தப்படுவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  மணிப்பூர் மக்களின் உன்னதத்தை எடுத்துரைப்பதே மணிப்பூர் சங்காய் திருவிழா எனப் புகழாரம் சூட்டிய பிரதமர்,  இந்த திருவிழாவை நடத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசுக்கும், முதலமைச்சர் என். பிரேன் சிங்கிற்கும் பாராட்டு தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தின் அபரிமிதமான இயற்கை அழகு, கலாச்சார எழில், பல்லுயிர் பெருக்கம் ஆகியவை, நாம் அனைவருமே இந்த மாநிலத்திற்கு ஒரு முறையாவது சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், இது விதவிதமான ரத்தினங்களால் ஆன எழில்மிகுந்த வரவேற்பு மாலையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய இவ்வேளையில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற  குறிக்கோளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இவ்விழா உதவும் என பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த நிறுவனம், வரும் நாட்களில், இந்தியாவின் ஆற்றல் மற்றும் உத்வேகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். சங்காய் என்பது மணிப்பூரின் மாநில விலங்கு மட்டுமல்ல, இந்தியாவின் உண்மை மற்றும் நம்பிக்கைக்கு சிறப்பிடம் அளிக்கும் விலங்காகத் திகழ்வதாகவும் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

சங்காய் திருவிழா இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டாடும் திருவிழா எனக் குறிப்பிட்ட அவர், இந்தியா இயற்கையுடன் கொண்டுள்ள  கலாச்சாரம் மற்றும் ஆன்மீக உறவுகளைக் கொண்டாடும் திருவிழா என்றும் கூறினார்.

நீடித்த நிலையான வாழ்க்கை முறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் சமூகப் பொறுப்புணர்வை அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இயற்கை, விலங்குகள் மற்றும் தாவரங்களை மையமாகக் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடும்போது, அதன் சங்கமம், இயற்கையையும், நம்வாழ்வின் அங்கமாக மாற்றிவிடுகிறது என்று அவர் கூறினார்.   

சங்காய் விழாவை மாநில தலைநகரில் மட்டும் ஏற்பாடு செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்திலும் செய்திருப்பது குறித்து, மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஒற்றுமையின் விழா என்ற உணர்வு விரிவாக்கப்பட்டுள்ளது என்றார்.  இந்த விழாவின் பல்வேறு மனநிலைகளையும், வண்ணங்களையும், நாகாலாந்து எல்லையில் இருந்து மியான்மர் எல்லை வரை சுமார் 14 இடங்களில் காண முடிகிறது என்பதை  திரு மோடி சுட்டிக்காட்டினார்.  மெச்சத்தக்க இந்த முன்முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்த அவர், மேலும் மேலும் அதிகமான மக்களோடு இத்தகைய நிகழ்வுகள் தொடர்புறும் போது மட்டுமே முழுமையான ஆற்றல் முன்னுக்கு வரும் என்றார். 

நமது நாட்டில் பல நூற்றாண்டு கால விழாக்கள் மற்றும் சந்தைகள் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இவை நமது கலாச்சாரத்தை வளப்படுத்துவது மட்டுமின்றி, உள்ளூர் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.  சங்காய் விழா போன்ற நிகழ்வுகள் முதலீட்டாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். “இந்த விழா இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆற்றல்மிக்க வழியாக இருக்கும் என்பதில் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக” குறிப்பிட்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

**************

AP/SMB/PK/KRS


(Release ID: 1880089) Visitor Counter : 168