தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானது என்பது செய்தி தொடர்பாளர்களின் மனதில் முதன்மை கொள்கையாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

பொறுப்பான ஊடக நிறுவனங்கள், பொது நம்பிக்கையைப் பேணுவதை மிக உயர்ந்த வழிகாட்டும் கொள்கையாக வைத்திருக்க வேண்டும்: திரு அனுராக் தாக்கூர்

Posted On: 29 NOV 2022 1:49PM by PIB Chennai

உண்மையான தகவல்களை வழங்குவது ஊடகங்களின் முதன்மைப் பொறுப்பு என்றும், தகவல்கள் பொது களத்தில் வைக்கப்படுவதற்கு முன்பு உண்மைகளை சரியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு யூனியன் பொதுச் சபை 2022-ன் தொடக்க விழாவில் இன்று பங்கேற்றுப் பேசிய அமைச்சர், மக்களுக்கு தகவல் சொல்லப்படுவதன் வேகம் முக்கியமானது என்பதும் துல்லியம் அதைவிட முக்கியமானது என்பதும் செய்தியாளர்களின் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும் என்றார். சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரவலாகியுள்ள நிலையில் அவற்றில் போலி செய்திகளும் பெருகிவிட்டன என்று அமைச்சர் மேலும் கூறினார். இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை தடுப்பதற்கும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்கும் இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகத்தில் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொறுப்பான ஊடக நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதை மிக உயர்ந்த வழிகாட்டும் கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். பொது ஒலிபரப்பு சேவை நிறுவனங்களான தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதற்காகவும், உண்மையான செய்திகளை வழங்குவதற்காக அவை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். தேசிய பேரிடர்களின் போது பேரிடர் மேலாண்மையில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். உயிர்களைக் காப்பாற்றுவதில் நேரடியாகப் பணிபுரிவதால், நெருக்கடிக் காலங்களின் போது ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்19 தொற்றுநோய்க் காலத்தின்போது வீடுகளில் முடங்கித் தவித்த மக்களுக்கு ஊடகங்கள் உதவிகரமாக இருந்ததாக கூறிய திரு அனுராக் தாக்கூர், மக்களை வெளி உலகத்துடன் ஊடகங்கள் இணைத்ததாகக் கூறினார். குறிப்பாக தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் பொதுவாக இந்திய ஊடகங்களும் செய்த சிறந்த பணிகளை அவர் இந்த மாநாட்டின்போது எடுத்துரைத்தார்.  தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி, தங்கள் பொது சேவைப் பணியை மிகவும் திருப்திகரமாக வழங்கியதாகவும் பெருந்தொற்றுக் காலத்தின் போது அவை மக்களுடன் உறுதியாக நின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  பொதுவாக கொவிட்-19 விழிப்புணர்வுத் தகவல்கள், முக்கியமான அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களுடனான இலவச ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி அவை நாட்டின் மூலை முடுக்கிலுள்ள அனைவரையும் சென்றடைவதை இந்திய ஊடகங்கள் உறுதி செய்ததாக அவர் கூறினார். பிரசார் பாரதி, கொவிட் 19 காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை இழந்தபோதிலும் அது தனது பொது சேவையைத் தொடர்ந்து தடையின்றி மேற்கொண்டது என அமைச்சர் கூறினார்.

அரசு நிர்வாகத்தில் பங்காற்றுமாறு ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்த திரு அனுராக் தாக்கூர், "ஊடகங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட வேண்டும் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய அளவில் தொடர்ச்சியான பின்னூட்டக் கருத்துக்களை வழங்க வேண்டும்" என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துகளை இந்த கூட்டத்தின் போது வலியுறுத்தினார். ஒலிபரப்பு நிறுவனங்களின் சங்கமாக ஏபியூ எனப்படும் ஆசிய பசிபிக் ஒலிபரப்பு யூனியன் தொடர்ந்து செயல்பட்டு, ஊடகங்களுக்கு புதிதாக வருபவர்களுக்கு சிறந்த தொழில்முறை திறன்களை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஏபியூ உறுப்பு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும் பிரசார் பாரதியின் உயர்நிலைப் பயிற்சி நிறுவனமான என்ஏபிஎம், ஒலிபரப்புத் துறையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பயிற்சிகளை வழங்குவதில் ஏபியூ மீடியா அகாடமியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்படுகிறது என்று அவர் கூறினார். இந்தியா சுமார் 40 நாடுகளுடன் உள்ளடக்க பரிமாற்றம், கூட்டு நிகழ்ச்சித் தயாரிப்புகள், திறன் மேம்பாடு போன்றவற்றில் இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். அவற்றில் சக ஏபியூ நாடுகளான ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், ஃபிஜி, மாலத்தீவுகள், நேபாளம், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்டவை அடங்கும் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிப் பகிர்வுக்காக மார்ச் 2022 இல் ஒலிபரப்புத் துறையில் ஆஸ்திரேலியாவுடன் கூட்டு செயல்பாடுகளை இந்தியா ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் ஒலிபரப்பாளர்களும் பல வகை நிகழ்ச்சிகளின் இணை தயாரிப்பு மற்றும் கூட்டு ஒலிபரப்பு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர் என்றும் திரு அனுராக் தாக்கூர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏபியூ தலைவர் திரு. மசகாகி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏபியூ ஆற்றிவரும் முக்கியப் பங்கை சுட்டிக் காட்டினார். மேலும், பொது முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் இந்தப் பிராந்தியத்தின் அனைத்து பொது சேவை ஒலிபரப்பாளர்களும் இணைந்து செயல்படுவதை அவர் பாராட்டினார்.

இந்தியாவின் பொதுசேவை ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி 59-வது ஏபியூ பொதுசபை கூட்டத்தை நடத்தியது. மக்களுக்கு சேவை செய்தல்: நெருக்கடி காலங்களில் ஊடகங்களின் பங்கு என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

இதில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு.எல்.முருகன், தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு.அபூர்வ சந்திரா உள்ளிட்டோரும், 40 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

 

                                                                                                                                                         **************

(Release ID: 1879737)

SM/PLM/KG/KRS



(Release ID: 1879766) Visitor Counter : 171