நிதி அமைச்சகம்

மத்திய பட்ஜெட் 2023-24 தொடர்பான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்

Posted On: 28 NOV 2022 4:47PM by PIB Chennai

மத்திய பட்ஜெட் 2023-24 தொடர்பான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக்கூட்டங்கள் காணொலி வாயிலாக நவம்பர் 21 முதல் 28-ஆம் தேதி வரை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டங்கள் இன்று நிறைவடைந்தது.

சம்பந்தப்பட்ட ஏழு குழுக்களைச் சேர்ந்த 110 பிரதிநிதிகள் இந்த கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த காலகட்டத்தில் எட்டு கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டு, அவை நடத்தப்பட்டன. வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள், தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம், நிதித்துறை மற்றும் முதலீட்டுச் சந்தைகள், சேவைகள் மற்றும் வர்த்தகம், சமூகத் துறைகள், தொழில்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இக்கூட்டங்களில் பங்கேற்றனர்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் திரு. பங்கஜ் சௌத்ரி, திரு. பகவத் கிருஷ்ணராவ் காரத், நிதித்துறை செயலாளர் திரு. சோமநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் திரு. அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் திரு. அனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோரும் நிதித்துறையின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டங்களில் பங்கேற்றனர். பிற துறைகள் மற்றும் அமைச்சகங்களின் செயலாளர்கள் காணொலி வாயிலாக கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பசுமை சான்றிதழ் வழங்குதல், நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், புதுமைக் கண்டுபிடிப்புகள் தொடர்பான வழித்தடங்களை உருவாக்குதல், உள்நாட்டு விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்கள், மின்சார வாகனங்களுக்கான வரிக்குறைப்பு, குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், நீர் மற்றும் துப்புரவுக்கான தேசிய ஒழுங்குமுறை ஆணையம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்துறை பிரதிநிதிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

ஆலோசனைகளை வழங்கிய பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்த நிதியமைச்சர், 2023-24 பட்ஜெட் தயாரிக்கும்போது இந்த ஆலோசனைகள் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

                                                                                                                                      **************

(Release ID: 1879547)

AP/PLM/KG/KRS



(Release ID: 1879576) Visitor Counter : 157