விவசாயத்துறை அமைச்சகம்
சமீபத்திய பருவ மாறுபாடு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப விவசாயிகளின் நலனுக்காக (PMFBY) பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்த மத்திய வேளாண் அமைச்சகம் தயார்
Posted On:
24 NOV 2022 11:10AM by PIB Chennai
சமீபத்திய பருவ மாறுபாடு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப விவசாயிகளின் நலனுக்காக பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை புகுத்த மத்திய வேளாண் அமைச்சகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுதில்லியில் பேசிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு மனோஜ் அஹூஜா, பருவ நிலை மாறுபாடு காரணமாக வேளாண் விவசாயிகள், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் காரணமாக, ஊரக பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விளைபொருட்களுக்கும் பயிர் காப்பீட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கை சீற்றம் காரணமாக நாற்று நடுவது முதல், அறுவடை வரையிலான காலகட்டம் வரை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக, கடந்த 2016-ம் ஆண்டு பிரதமரின் பீமா யோஜனா பயிர் காப்பீடுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் கடந்த 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வன விலங்குகள் தாக்குதலுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
பயிர் காப்பீடுத் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில், ரூபாய் 25 கோடியே 186 லட்சம் தொகையை விவசாயிகள் பிரீமியமாக செலுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.1,25,662 கோடியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்துக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 282 சதவீதம் அதிகரித்திருப்பதாக மனோஜ் அஹூஜா தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் இதுவரையிலான காலகட்டத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மழை பொழிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மழை பொய்த்துள்ளது. இதனால், நெல், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பயிர்காப்பீடு செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் பயிர்காப்பீடுத் திட்டம், உலக அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமாக தற்போது உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 5 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பிப்பதாகவும், இதன் மூலம் காப்பீட்டு பிரீமியம் பெருவதில், மூன்றாவது பெரிய நாடாக இந்தியா விளங்குவதாகவும் திரு மனோஜ் அஹூஜா தெரிவித்துள்ளார்.
**************
SM/ES/RS/KRS
(Release ID: 1878510)
Visitor Counter : 268