தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
காஷ்மீர் பண்டிட்களின் சோகத்தை ஆவணப்படுத்தும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மூலம் குணப்படுத்தும் நடைமுறை தொடங்கியது : அனுபம் கெர்
1990-களில் காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த சோகத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உதவியுள்ளது என்று இந்தத் திரைப்படத்தின் முன்னணி நடிகர் அனுபம் கெர் கூறினார். கோவாவின் பனாஜியில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற இஃப்பி மேசைப் பேச்சில் அவர் பங்கேற்றார்.
“இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இப்படத்திற்காக உலகம் முழுவதும் சுமார் 500 பேரை பேட்டி எடுத்தார். 1990 ஜனவரி 19 இரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் வன்முறையைத் தொடர்ந்து 5 லட்சம் காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஒரு காஷ்மீரி இந்துவாக, நான் சோகத்துடன் வாழ்ந்தேன். ஆனால் அந்த சோகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த சோகத்தை உலகம் மறைக்க முயன்றது. சோகத்தை ஆவணப்படுத்துவதன் மூலம் இப்படம் குணப்படுத்தும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது" என்று அனுபம் கெர் மேலும் கூறினார்.
தாம் அனுபவித்த ஒரு சோகத்திற்கு உயிர் கொடுக்கும் நடைமுறையை நினைவுபடுத்திய அனுபம் கெர், தி காஷ்மீர் ஃபைல்ஸ் தனக்கு ஒரு படம் மட்டுமல்ல, தாம் திரையில் சித்தரித்த ஓர் உணர்ச்சி என்றார். " தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை நான் பிரதிநிதித்துவம் செய்வதால், அதைச் சிறந்த முறையில் வெளிப்படுத்துவதை பெரிய பொறுப்பாக நான் கருதுகிறேன். இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் என் கண்ணீர், என் கஷ்டங்கள் அனைத்தும் உண்மையானவை” என்று அவர் விவரித்தார்.
இந்தப் படத்தில் நடிகராக தனது திறமையைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நிஜ வாழ்க்கைச் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிப்படுத்த தனது ஆன்மாவைப் பயன்படுத்தியதாக அனுபம் கெர் மேலும் கூறினார். நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே படத்தின் முக்கிய கருப்பொருள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். "நம்பிக்கை எப்போதும் வீண்போகாது," என்று அவர் கூறினார்.
வளர்ந்துவரும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஓர் அறிவுரையாக, அவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார். “அதற்கு பதிலாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படம் செய்யும் இந்திய திரைப்படத் துறையின் தயாரிப்பாளர்களாக அடையாளம் காண வேண்டும். இது வாழ்க்கையை விட பெரிய திரையுலகம்” என்று அவர் தெரிவித்தார்.
**************
(Release ID: 1878341)