நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய வேண்டும்: உணவு மற்றும் பொது விநியோக துறை செயலாளர்

Posted On: 19 NOV 2022 3:46PM by PIB Chennai

நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் திரு சஞ்சீவ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளியன்று நடைபெற்ற மாநில/யூனியன் பிரதேச உணவுத்துறை செயலர்கள் மாநாட்டில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொது விநியோக நடைமுறைகள் பற்றி அதன் செயலாளர் விளக்கினார். உணவு தானியங்கள், மளிகை  பொருட்கள், திணை வகைகள் விற்பனை செய்வதையும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமியகத்தின் முயற்சிகளுக்கு மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் பாராட்டு தெரவித்தார்.

பல்வேறு திட்டங்களுடன் தொடர்புடைய அரிசி செறிவூட்டல், ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட  முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை  செயலாளர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டன. மத்திய உணவு மற்றும் பொதுவிநியோக துறையின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக மாநாட்டுக்கு தலைமை வகித்த மத்திய அரசு செயலர் உறுதியளித்தார்.

2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று திரு சோப்ரா கூறினார். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதிசெய்ய முழுமையாக தயாராக இருக்குமாறு  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகளை அவர் பாராட்டினார். இத்திட்டம்  தொடங்கப்பட்டதில் இருந்து 91 கோடிக்கும் அதிகமான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

*********

MSV/PKV/DL


(Release ID: 1877315)