தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் 53-வது சர்வதேச திரைப்படவிழா அனைத்து பிரதிநிதிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த திரை அனுபவத்தை வழங்கும் - குடியரசுத்தலைவர்
இந்தியாவின் 53-வது சர்வதேச திரைப்படவிழா வெற்றிபெற வாழ்த்துவதாக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவின் 53-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஆசியாவின் பழமை வாய்ந்த இத்திரைப்படவிழா, சர்வதேச நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய விழாக்கள் தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த திரை இயக்குநர்கள், கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைப்பாற்றல் மற்றும் கேளிக்கையை முன்னிறுத்துவது திரைப்படத்தின் உன்னத தன்மை என குறிப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர், இதுமட்டுமல்லாமல், அரிய காட்சிகள், கற்பனை வளங்கள், தலைசிறந்த திரைக்கதைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் கேந்திரமாக திகழ்வதாகவும் கூறியுள்ளார். எனவே இந்தியாவின் 53-வது சர்வதேச திரைப்படவிழா அனைத்து பிரதிநிதிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புவதாகவும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
*************
(Release ID: 1877014)
MSV/ES/KPG/KRS
(Release ID: 1877128)
Visitor Counter : 185