மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
வாரணாசியில் ஒரு மாதகால காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவம்பர் 19-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்
Posted On:
18 NOV 2022 4:35PM by PIB Chennai
உத்தரப்பிரசேத்தின் வாரணாசியில் நடைபெறும் ஒருமாத நிகழ்ச்சியான காசி – தமிழ் சங்கமத்தை நவம்பர் 19ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைக்கிறார். நவம்பர் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, டிசம்பர் மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிரதமர் வருகையை முன்னிட்டு வாரணாசியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, காசி- தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர், தமிழக ஆளுநர் மற்றும் உத்தரப்பிரதேச அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவுப்பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகள் உத்தரப்பிரதேச அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இரு மாநிலத்தைச் சேர்ந்த கல்வி வல்லுநர்கள், மாணவர்கள், தத்துவஞானிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரை ஒருங்கிணைத்து அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதுடன் கலாச்சாரம் மற்றும் கற்றல் குறித்த புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில், இந்த சங்கம நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்திய அறிவாற்றல் முறையின் அடித்தளத்தை நவீன முறையிலான அறிவாற்றலுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சத்தைக் கருத்தில் கொண்டு இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இப்பணியை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), சென்னை மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொள்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில்முனைவோர் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வாரணாசிக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பிரதிநிதிகள் உள்ளூர் மக்கள், வர்த்தகர்கள் மற்றும் தங்கள் துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
இவர்கள் அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளை பார்வையிடுவதுடன் தமிழகம் மற்றும் காசி பகுதியை சார்ந்த கல்வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். இதற்காக சுமார் 200 மாணவர்களைக் கொண்ட முதல் பிரதிநிதிகள் குழு நவம்பர் 17-ம் தேதி சென்னையிலிருந்து ரயில் மூலம் காசிக்கு புறப்பட்டது. இந்த ரயில் பயணத்தை தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி தொடங்கிவைத்தார்.
காசியில் நடைபெறவுள்ள தொடக்கவிழாவில் தமிழக பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார். தமிழ் திரையுலக இசையமைப்பாளர் திரு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த தொடக்கவிழாவில் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
**************
(Release ID: 1877032)
MSV/ES/KPG/KRS
(Release ID: 1877100)