தேர்தல் ஆணையம்

நேபாளத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார்

Posted On: 17 NOV 2022 12:01PM by PIB Chennai

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார், நேபாளத்தின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு சர்வதேச பார்வையாளராக நேபாள தேர்தல் ஆணையத்தால் அழைக்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் நவம்பர் 20, 2022 அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 275 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏழு மாகாண சட்டசபைகளில் 550 உறுப்பினர் இடங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

2022 நவம்பர் 18 முதல் 22 வரை திரு. ராஜீவ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழு நேபாளத்தில் பயணம் மேற்கொள்கிறது. திரு. ராஜீவ் குமார் தமது பயணத்தின் போது காட்மாண்டுவில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவர் சென்று ஆய்வு செய்வார்.

இதேபோன்ற சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையமும் கொண்டுள்ளது. மற்ற தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் உறுப்பினர்கள் அவ்வப்போது நடைபெறும் பொது மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நேரில் பார்க்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் சக தேர்தல் மேலாண்மை அமைப்புகள் (EMBs) மற்றும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு நல்லுறவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் எப்போதும் இந்திய தேர்தல் ஆணையம் முன்னணியில் உள்ளது. ஜனநாயக அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறந்த நடைமுறைகளின் அறிவுப் பகிர்வை தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை நிறுவனம் (IIIDEM) இதுவரை 109 நாடுகளைச் சேர்ந்த 2200 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது. அவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 70 அதிகாரிகளும், தேர்தல் ஆணையத்தின் இந்தத் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக பயிற்சி பெற்றுள்ளனர். நேபாள தேர்தல் ஆணையத்தின் 25 அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 2023 மார்ச் 13 முதல் 24 வரை இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மாநாட்டில் நேபாள தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் மேலும் இரண்டு சர்வதேச மாநாடுகளை நடத்தவுள்ளது.  

"உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தேர்தல்கள்" அல்லது "தேர்தல்களில் தொழில்நுட்பம்", "ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு-செயல்பாட்டுக்கான ஆண்டு" என்ற கருப்பொருள்களின் கீழ் இந்த மாநாடுகள் நடத்தப்படவுள்ளன.

தேர்தல் மேலாண்மையில் உலகின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பான உலகத் தேர்தல் அமைப்புகள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் 2019 செப்டம்பர் முதல் இந்திய தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. ஏ-வெப் என்ற உலக தேர்தல் மேலாண்மை அமைப்புகள் சங்கத்தில் தற்போது 109 நாடுகளைச் சேர்ந்த 119 தேர்தல் மேலாண்மை அமைப்புகள் உள்ளன. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் (AAEA) புதிய தலைமைப் பொறுப்புக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் திறமையான முறையில் தேர்தல்களை நடத்தும் நடைமுறைகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

**************

JVL/PLM/PK/KRS



(Release ID: 1876728) Visitor Counter : 141