பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்
“மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இன்றும்கூட மிகவும் பொருத்தமுள்ளதாக இருக்கின்றன”
“காதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பெருமளவிலான உற்பத்தியின் புரட்சி மட்டுமல்ல பெருந்திரள் மக்களாலான உற்பத்தியின் புரட்சியும் ஆகும்”
“பாகுபாடு இல்லாத காலம் வரை நகரம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடு ஏற்கத்தக்கது“
“சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் அது மீண்டும் முக்கிய பங்காற்றும்”
“தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது”
“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் செயல்வடிவம் தான் காசி தமிழ் சங்கமமாகும்”
“நீங்கள் தான் புதிய இந்தியாவைக் கட்டமைப்பவர்கள். அதன் அமிர்தகாலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தலைமையேற்கும் பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் – இதுவே இன்று பட்டம் பெறும் இளைஞர்களுக்கு எனது செய்தியாகும்”
Posted On:
11 NOV 2022 5:56PM by PIB Chennai
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (11.11.2022) பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2018-29, 2019-20 ஆகிய தொகுப்புகளைச் சேர்ந்த 2,300-க்கும் அதிகமான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் தகுதி மிக்க சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் வழங்கினார்.
விழாவில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், காந்திகிராமிற்கு வருகை தருவது தமக்கு மிகவும் உற்சாகம் தரும் அனுபவமாகும் என்றார். இந்த கல்வி நிறுவனம் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். மகாத்மா காந்தியின் சிந்தனைகள் மற்றும் ஊரக வளர்ச்சித் தொடர்பான கோட்பாடுகளின் உணர்வை இந்த கல்வி நிறுவனத்தில் காணமுடியும் என்று அவர் தெரிவித்தார். மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தாலும் அல்லது பருவநிலை பிரச்னைகளாக இருந்தாலும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இக்காலத்திற்கும் இந்த சகாப்தத்திற்கும் மிகவும் பொருத்தமுள்ளதாக இருக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகம் இன்று சந்திக்கின்ற பல சவால்களுக்கும் பதற்றமான பிரச்னைகளுக்கும் அவரது சிந்தனைகள் பதில்களாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.
காந்திய வழியிலான வாழ்க்கையை மாணவர்கள் மேற்கொள்வது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். மகாத்மா காந்தியின் இதயத்திற்கு நெருக்கமான சிந்தனைகளுக்காக பணியாற்றுவது அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலி என்று அவர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக மறக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஆடையை தேசத்துக்காக காதி, அழகிய ஆடைகளுக்காக காதி என்பதன் மூலம் மீட்கப்பட்ட உதாரணங்களைப் பிரதமர் வழங்கினார் கடந்த 8 ஆண்டுகளில் காதித்துறையின் விற்பனை 300 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது” என்று தெரிவித்த அவர், தொடர்ந்து பேசுகையில், “இப்போது அதன் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மைகள் காரணமாக உலகளாவிய ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கூட காதியை எடுத்துக் கொள்கின்றன” என்றார். காதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பெருமளவிலான உற்பத்தியின் புரட்சி மட்டுமல்ல பெருந்திரள் மக்களாலான உற்பத்தியின் புரட்சியும் ஆகும். கிராமங்களின் தற்சார்புக்கான ஒரு கருவியாக காதியை மகாத்மா காந்தி எவ்வாறு பார்த்தார் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், அவரால் ஊக்கமடைந்துள்ள அரசு தற்சார்பு இந்தியாவை நோக்கி பணியாற்றி வருகிறது என்றார். “சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்துள்ளது. தற்சார்பு இந்தியாவில் அது மீண்டும் முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
ஊரக வளர்ச்சியில் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், கிராம வாழ்க்கையின் மாண்புகளை முன்னேற்றத்தில் அவை பாதுகாக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக கூறினார். ஊரக மேம்பாட்டை நோக்கிய அரசின் தொலைநோக்குப் பார்வை என்பது மகாத்மா காந்தியின் சிந்தனைகளிலிருந்து பெற்ற ஊக்கமாகும் என்று திரு மோடி குறிப்பிட்டார். பாகுபாடு இல்லாத காலம் வரை நகரம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடு ஏற்கத்தக்கது என்பதை அவர் எடுத்துரைத்தார். முழுமையான ஊரக துப்புரவு, 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர், 2.5 கோடி மின்சார இணைப்புகள், சாலைகள் மூலம் ஊரக போக்குவரத்துத் தொடர்பு அதிகரிப்பு ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துரைத்த அவர், மக்களின் வீடுகளுக்கே வளர்ச்சியை அரசு எடுத்துச் செல்வதாகவும், நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு இடையே நிலவுகின்ற சமத்துவம் இன்மையை சரிசெய்வதாகவும் கூறினார்.
துப்புரவு என்ற கோட்பாடு மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமானது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், தூய்மை இந்தியா உதாரணத்தை எடுத்துரைத்தார். அடிப்படை வசதிகளை வழங்குவதோடு அரசு நின்றுவிடவில்லை என்றும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளுடன் கிராமங்களை இணைக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். சுமார் 2 லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு 6 கிலோமீட்டர் தொலைவிற்கு கண்ணாடி இழை கேபிள்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சியில் நிலைத்தன்மைக்கான தேவையை வலியுறுத்திய அவர், இத்தகைய பகுதிகளில் இளைஞர்களின் தலைமைத்துவம் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நீடித்த வேளாண்மை என்பது கிராமப்பகுதிகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்று கூறிய அவர், இயற்கை வேளாண்மைக்கான மாபெரும் ஆர்வத்தை எடுத்துரைத்தார். நமது இயற்கை வேளாண்மைத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, வடகிழக்கில் என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை தொடர்பான கொள்கையை அரசு கொண்டு வந்திருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். ஒரே வகையான பயிர் செய்தல் என்பதிலிருந்து வேளாண் துறையை பாதுகாக்க வேண்டிய காலம் வந்துள்ளது என்றும் தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் இதரப் பயிர்களின் உள்ளூர் வகைகளை மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிராம நிலையிலான அமைப்புகளுக்கான தேர்தல்களில் பாகுபாடுகளுக்கான போக்கு இருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, குஜராத்தில் சம்ரஸ் கிராம் யோஜனா, தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். ஒருமித்த கருத்தின் மூலம் தலைவர்களை தெரிவு செய்யும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் இதன் விளைவாக சமூக மோதல்கள் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
காந்திஜியின் உருவத்தைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் ரயிலில் வந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவுக்காக மகாத்மா காந்தி போராடினார் என்றும், காந்தி கிராம் என்பதே இந்திய ஒற்றுமையின் சின்னம் என்றும் கூறினார். “தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது” என்று கூறிய அவர், சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பிபோது அவருக்கு ஒரு நாயகருக்கான வரவேற்பு அளிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மறைந்த ஜெனரல் பிபின் ராவத் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ‘வீரவணக்கம்’ என்ற முழக்கங்கள் கேட்டதை நினைவுகூர்ந்தார்.
காசியில் விரைவில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரதமர், இது காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவைக் கொண்டாடும் என்றார். இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் செயல்வடிவமாகும். ஒருவரோடு ஒருவருக்கான அன்பும், மரியாதையும் நமது ஒற்றுமையின் அடிப்படை என்று அவர் குறிப்பிட்டார்.
ராணி வேலு நாச்சியாரின் தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர், பிரிட்டிஷாரை எதிர்த்த போரின் தயார் நிலைக்காக அவர், இங்கு தங்கியிருந்தார் என்று கூறினார். “மகளிர் சக்தியின் ஆற்றலை காணுகின்ற பகுதியில் இன்று நான் இருக்கின்றேன். இங்கு பட்டம் பெறும் இளம் பெண்களை, மாபெரும் மாற்றங்களை செய்பவர்களாக நான் காண்கிறேன். கிராமப்புற பெண்கள் வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும். அவர்களின் வெற்றி தேசத்தின் வெற்றியாகும்” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு நூற்றாண்டின் மோசமான நெருக்கடியை உலகம் சந்தித்த போது, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கமாக இருப்பினும், பரம ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பாக இருப்பினும், உலகின் வளர்ச்சி் இயந்திரமாக இருப்பினும், இந்தியா ஒளிரும் இடமாக இருந்தது என்று பிரதமர் தெரிவித்தார். மகத்தான விஷயங்களை இந்தியா செய்ய வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், நம்மால் முடியும் என்ற இளைய தலைமுறையின் கைகளில் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. இளைஞர்கள் என்பவர்கள் சவால்களை ஏற்றுக் கொள்பவர்களாக மட்டுமின்றி, அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதை விரும்புகின்றவர்களாகவும் இருக்கிறார்கள், கேள்வி கேட்பவர்களாக மட்டுமின்றி பதில்களை கண்டறிவோராகவும் உள்ளனர். அச்சமற்றவர்களாக மட்டுமின்றி சோர்வில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆசைப்படுபவர்களாக மட்டுமின்றி சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். “நீங்கள் தான் புதிய இந்தியாவைக் கட்டமைப்பவர்கள். அதன் அமிர்தகாலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தலைமையேற்கும் பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் – இதுவே இன்று பட்டம் பெறும் இளைஞர்களுக்கு எனது செய்தியாகும்” என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், வேந்தர் டாக்டர் கே எம் அண்ணாமலை, துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
----
SM/SMB/KPG/IDS
(Release ID: 1875341)
Visitor Counter : 3116
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam