பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா நடைபெற்ற ரோஜ்கர் மேளாவில் பிரதமரின் காணொளி காட்சி உரை

Posted On: 03 NOV 2022 1:24PM by PIB Chennai

நமஸ்காரம்!

இன்று மகாராஷ்டிராவும் இளைஞர்களுக்கு பல்வேறு அரசுத் துறைகளில் பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் திட்டத்தில் இணைகிறது.

தந்தேராஸ் தினத்தன்று மத்திய அரசு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது.

வரும் நாட்களில் வெவ்வேறு மாநில அரசுகளும் இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தும் என்று அப்போதே நான் சொன்னேன். இதை ஒட்டி இன்று மகாராஷ்டிராவில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்படுகிறது. இன்று நியமனக் கடிதம் பெறும் இளைஞர், பெண்களை மனதார வாழ்த்துகிறேன்!

மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பாய் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'ரோஜ்கர் மேளா' நிகழ்வு மிகக் குறுகிய கால அறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் மகாராஷ்டிர அரசு மிகவும் உறுதியுடன் இருப்பதை இது காட்டுகிறது. வரும் காலங்களில் இதுபோன்ற வேலை வாய்ப்புகள் மகாராஷ்டிராவில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மகாராஷ்டிராவின் உள்துறையில் ஆயிரக்கணக்கான போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், ஊரக வளர்ச்சித் துறையிலும் புதியவர்களை தேர்ந்தெடுக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் என்னிடம் கூறப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

 

நாடு முழுவதும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடப்படுகிறது. வளர்ந்த இந்தியா என்ற நோக்கத்தோடு நாடு செயல்பட்டு வருகிறது.

இந்த இலக்கை அடைவதில் நமது இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாறிவரும் காலக்கட்டத்தில் வேலைகளின் தன்மையும் வேகமாக மாறி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வேலைகளுக்கான வாய்ப்புகளை அரசும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

சுயவேலைவாய்ப்புக்கு உறுதிமொழி இல்லாமல் கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட முத்ரா திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு ரூ 20 லட்சம் கோடிக்கும் அதிகமான உதவிகளை அரசு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் அதிகபட்ச பலன்களைப் பெற்றுள்ளனர். இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர சரியான வாய்ப்பு கிடைக்கும் வகையில், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்களுக்கு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் நிதி உதவிகளை வழங்குகிறது.

 

நண்பர்களே,

அரசின் முயற்சிகளில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகள் இப்போது அனைவருக்கும் சமமாக – தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பொது வகுப்பினர் மற்றும் பெண்கள் அனைவருக்கும் கிடைக்கின்றன. கிராமப்புறங்களிலும் சுயஉதவி குழுக்களை அரசு அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 8 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் இணைந்துள்ளனர். இந்த சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்தக் குழுக்களில் அங்கம் வகிக்கும் பெண்கள் தாங்களாகவே தொழில் தொடங்கி உற்பத்தி செய்வது மட்டுமின்றி மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை அளித்து வருகின்றனர்.

 

நண்பர்களே,

இன்று, நாடு முழுவதும் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் அரசு செய்து வரும் முதலீடுகள் சாதனை படைத்து, தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

மகாராஷ்டிராவைப் பற்றி மட்டும் பேசினால், சுமார் 225 திட்டங்களுக்கு ரூ 2 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன அல்லது மிக விரைவில் தொடங்க உள்ளன. சற்றே கற்பனை செய்து பாருங்கள்! மகாராஷ்டிராவில் ரயில்வேத்துறைக்கு ரூ.75 ஆயிரம் கோடி திட்டங்களுக்கும், நவீன சாலை அமைக்கும் திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கு இவ்வளவு பெரிய தொகையை அரசு செலவிடும்போது, லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.

 

நண்பர்களே,

எதிர்காலத்தில், மகாராஷ்டிராவில் இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்று நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைத்து இளைஞர், பெண்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*********



(Release ID: 1873891) Visitor Counter : 122