உள்துறை அமைச்சகம்

90-வது இன்டர்போல் பொதுச்சபையின் நிறைவு அமர்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 21 OCT 2022 6:27PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையின் இன்றைய நிறைவு அமர்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இன்டர்போல் தலைவர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய காவல்துறைக்கு அக்டோபர் 21 மிகவும் முக்கியமான தினமாகும். இன்று காவலர் நினைவு தினம் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க 35,000 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.  இந்நாளில் அவர்களுக்கு இந்தியர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். கொவிட்-19, பெருந்தொற்றுக்கு பின், இன்டர்போல் பொதுச்சபை, புதுதில்லியில் நடைபெறுவது முக்கியமானதாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், காவல் துறையினரின் மனித முகத்தை உலகம் கண்ணுற்றது. காவலர் குறித்த கண்ணோட்டத்தை உலகம் மாற்றிக் கொண்டது. என்று திரு அமித் ஷா உரையாற்றுகையில் கூறினார்.

இன்டர்போலின் மிகப் பழமையான உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றும் 1949-லிருந்து இன்டர்போலுடன் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.   இன்றைய உலகத்தில் இன்டர்போல் போன்ற அமைப்பு மிகவும் முக்கியத்துவமானது. இந்திய அரசும் உள்துறை அமைச்சகமும், இந்தியாவின் பல்வேறு காவல் படைகளும் இன்டர்போலின் மக்கள் பாதுகாப்பு உலக அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றுக்காக அதன் அர்த்தமுள்ள முயற்சிகள் மற்றும் பங்களிப்பிற்காக பாராட்டுகின்றன.

இன்றைய புள்ளி விவரம் மற்றும் தகவல் புரட்சி உலகில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் தன்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா தெரிவித்தார். குற்றச் செயல்களுக்கு இப்போது புவிசார்ந்த எல்லைகள் இல்லை. இத்தகைய குற்றங்களையும், குற்றம் செய்வோரையும் தடுத்து நிறுத்த வேண்டும என்றால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிந்தித்து செயல்படவேண்டும். கணினி மூலமான அச்சுறுத்தல்கள் பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். போதைப் பொருள், பயங்கரவாதம், இணையம் வழியிலான தீவிரவாதம், திட்டமிட்ட கும்பல் நடவடிக்கைகள்,  கருப்புப் பணத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் முறியடிக்க இன்டர்போலுடன்  ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர்  திட்டவட்டமாக தெரிவித்தார்.

------

SMB/GEE/ANA/IDS



(Release ID: 1870088) Visitor Counter : 118