பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் சக்தி வாய்ந்த ‘புதிய இந்தியா’க்கான முக்கிய அம்சம்; இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்

Posted On: 15 OCT 2022 12:04PM by PIB Chennai

"தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன" என்று பாதுகாப்பு  அமைச்சர்  திரு  ராஜ்நாத் சிங் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை  மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான அரசின் ஊசலாட்டமில்லா உறுதியை தமது உரையில் பாதுகாப்பு  அமைச்சர் எதிரொலித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'தற்சார்பு  இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய எந்த முயற்சியையும்  விட்டு வைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம்  உறுதிபடத்தெரிவித்தது.

தற்சார்பான பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள்/ தளவாடங்களுடன் ஆயுதப் படைகளைத் தயார்படுத்துவதில் அரசின் கவனத்தை திரு ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டினார். ஆக்கபூர்வமான உள்நாட்டுத் தயாரிப்புப் பட்டியல்களை வெளியிடுவது உட்பட, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க பாதுகாப்பு  அமைச்சகம்  எடுத்துவரும்  பல நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு அண்மையில் கப்பற்படையில் சேர்க்கப்பட்ட   ஐஎன்எஸ் விக்ராந்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறன்  இந்தியாவிடம் இருப்பதாக அவர் கூறினார். அடுத்த பத்து ஆண்டுகளில், நாடு நவீன மற்றும் பயனுள்ள வகையில்  நீர், நிலம், வானம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசின் பார்வையில் மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது எல்லைப் பகுதி மேம்பாடு என்று குறிப்பிட்ட  திரு ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகளின் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த தொலைதூரப் பகுதிகளுடன் போக்குவரத்துத் தொடர்பை அதிகரிக்கவும், இந்தப் பிராந்தியத்தில்  வசிக்கும் மக்களுடன் நாட்டை இணைக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.  சவாலான சூழ்நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள சிறப்பான ஒத்துழைப்பையும், அவர்களின் தேசபக்தியையும் அவர் பாராட்டினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாட்டின் பொருளாதாரம் ஆற்றல் மிக்கதாகவும் வலுவாகவும் மாறியுள்ளதை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். 2014 ஆம் ஆண்டில் 400 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து 75,000 ஆக ஆகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“பெரும்பாலான நாடுகள் இன்று பொருளாதார மந்தநிலையின் சிக்கலை எதிர்கொள்கின்றன. சர்வதேச செலாவணி  நிதியம்,  உலகளாவிய ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2022-23 இல் 2.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், அது இன்னும் 6.1 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று பாதுகாப்பு  அமைச்சர் கூறினார்.”

*****


(Release ID: 1868036) Visitor Counter : 139