விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளனம் 2022-ஐ அக்டோபர் 17-ஆம் தேதி பிரதமர் துவக்கிவைக்கவுள்ளார்


600 பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களை பிரதமர் திறந்துவைக்கவுள்ளார்

சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களாக மாற்றியமைக்கப்பட உள்ளன; விவசாயிகளின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன

விவசாயிகளின் நலன் குறித்த பிரதமரின் தொடர் உறுதிப்பாடின் வெளிப்பாடாக ரூ. 16,000 கோடி மதிப்பிலான பிரதமரின் கிசான் நிதியை விடுவிக்கவுள்ளார்

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் இந்நாள் வரை சுமார் ரூ. 2 லட்சம் கோடி விடுவிப்பு

ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்; இதன் கீழ் பாரத யூரியா பைகளை பிரதமர் அறிமுகப்படுத்துவார்

வேளாண்துறையில் புத்தொழில் சூழலியலை ஊக்குவிப்பதற்காக வேளாண் புத்தொழில் மாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் திறந்துவைப்பார்

Posted On: 15 OCT 2022 12:45PM by PIB Chennai

“பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் 2022” என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 11:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார்.

 

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 13,500 விவசாயிகளும், 1500 வேளாண் புத்தொழில் நிறுவனத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். காணொலிக் காட்சி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களும் இந்த சம்மேளனத்தில் கலந்து கொள்வார்கள்.

 

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் கிசான் சம்ரிதி மையங்களை பிரதமர் திறந்து வைப்பார். இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக சம்ரிதி மையங்களாக மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூர்த்தி செய்யும். இதனுடன், வேளாண் சம்பந்தமான உள்ளீடுகள் (உரங்கள், விதைகள்); மண், விதைகள், உரங்களின் பரிசோதனைக்கான வசதிகள்; விவசாயிகளிடையே விழிப்புணர்வு; பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்குவதோடு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சில்லறை வணிகர்களின் திறன் கட்டமைப்பையும் உறுதி செய்யும். சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையகங்களை சம்ரிதி மையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியின் போது பாரத் மக்கள் உரத்திட்டம் என்ற பெயரில் ஒரே நாடு, ஒரே உர திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். “பாரத்” என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக பாரத் யூரியா பைகளையும் திட்டத்தின் கீழ் பிரதமர் அறிமுகப்படுத்துவார்.

 

விவசாயிகளின் நலன் குறித்த பிரதமரின் தொடர் உறுதிப்பாடின் வெளிப்பாடாக, பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக, நேரடி பலன் பரிவர்த்தனையின் மூலம் ரூ. 16,000 கோடியை நிகழ்ச்சியின் போது பிரதமர் விடுவிப்பார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வீதம் 3 தவணையாக தலா ரூ. 2000 வழங்கப்படும். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

வேளாண் புத்தொழில் உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியையும் பிரதமர் திறந்து வைப்பார். துல்லியமான விவசாயம், அறுவடைக்குப் பிந்தைய மற்றும் மதிப்பு கூட்டு தீர்வுகள், வேளாண்மையுடன் இணைந்த விஷயங்கள், கழிவுகளலிருந்து  வளம், விவசாயிகளுக்கான இயந்திரமயமாக்கல், விநியோக சங்கிலி மேலாண்மை, வேளாண் தளவாடங்கள் போன்றவற்றில் சுமார் 300 புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும். விவசாயிகள்,  வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் நிபுணர்கள், பெரு நிறுவனங்கள் முதலியவற்றோடு புத்தொழில் நிறுவனங்கள் கலந்துரையாடுவதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமையும். தொழில்நுட்ப அமர்வுகளில்,  புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது அனுபவத்தைப் பகிர்வதோடு இதர பங்குதாரர்களுடனும் கலந்துரையாடுவார்கள்.

 

இந்த நிகழ்ச்சியின் போது ‘இந்தியன் எட்ஜ்’ என்ற உரம் சம்பந்தமான மின்னணு சஞ்சிகையையும் (e-magazine) பிரதமர் அறிமுகப்படுத்துவார்.  சமீபத்திய நிகழ்வுகள், விலை நிலவரம் பற்றிய ஆய்வு, இருப்பு மற்றும் பயன்பாடு, விவசாயிகளின் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களை இந்த சஞ்சிகை உள்ளடக்கி இருக்கும்.

**************



(Release ID: 1868032) Visitor Counter : 317